2023- 2024 ஆம் கல்வியாண்டிற்கான எம்.டி. (சித்தா) -மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை தொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி AIAPGET நுழைவுத்தேர்வில் தகுதியான மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பான அறிவிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் அரசு சித்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான எம். டி. (சித்தா) மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 2023-ஆம் ஆண்டிற்கான சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (AIAPGET 2023-Siddha) எழுதி, தேவையான தகுதி மதிப்பெண் பெற்றிருத்தல் அவசியம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறையின் வலைதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் இவ்வாணையரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கை தொடர்பான அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற வலைதள முகவரி மூலம் தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன?
விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை 06.10.2023 முதல் 20.10.2023 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் தபால் / கூரியர் சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள்: 20.10.2023 மாலை 05.30 மணி வரை.
விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:
செயலர்,தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்,அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம்,சென்னை 600 106.
- விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும் மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவிலேயே வர வேண்டும்.
- கலந்தாய்வு தேதி, இடம் மற்றும் அனைத்து விவரங்களும் வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.
- கலந்தாய்வு அன்று நேரில் வரத்தவறியவர்கள் தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.
- விண்ணப்பக் கட்டணம்: 3000/- ரூபாய்
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ. இ-சேவை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.
கடைசி தேதிக்குப்பின் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் தபால்/ கூரியர் சேவையினால் ஏற்படும் காலதாமதத்திற்கு தேர்வுக்குழு பொறுப்பாகாது. மேற்குறிப்பிட்ட தகவல்களை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் காண்க:
சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியம்- மாநிலம் வாரியாக விலைப்பட்டியல் இதோ
மஞ்சள் வீரன் TTF வாசனுக்கு வந்த சோதனை- அடுத்த 10 வருஷம் நோ பைக்
Share your comments