ரயில் டிக்கெட்டுகளுக்கான அதிக தேவையை பூர்த்தி செய்யவும், பல்வேறு நிலையங்களில் பண்டிகைக் கூட்டத்தை குறைக்கவும் இந்திய ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தெற்கு ரயில்வேவின் ஒரு முக்கிய உத்தரவை, இப்பதிவு விளக்குகிறது.
பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள பல ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகளின் விலையை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 8 முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. இந்த பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டு ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சென்னை சென்ட்ரல் டாக்டர் எம்ஜிஆர், சென்னை எழும்பூர், தாம்பரம் மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களிலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே பயனர்கள் இவ்விவரங்களைக் கவனித்தில்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையங்கள் தவிர, ஆந்திராவில் உள்ள விஜயவாடா ரயில் நிலையத்திலும் நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 9ம் தேதி வரை அமலில் இருக்கும்.
மும்பை முழுவதும் உள்ள பல ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணத்தையும் மத்திய ரயில்வே உயர்த்தியுள்ளது. தசரா பண்டிகையின் போது ரயில் நிலையங்களில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதர், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் மற்றும் லோக்மான்ய திலக் டெர்மினஸ் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் அதிக விலையில் கிடைக்கும். மும்பை பிரிவின் தானே, கல்யாண் மற்றும் பன்வெல் நிலையங்களிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பண்டிகைக் காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் நடைமேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டிருப்பது தற்காலிக நடவடிக்கை என்றும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோய் பாதிப்புகள் அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைத் தடுப்பதற்காக நடைமேடை டிக்கெட் விலையை உயர்த்தும் அதிகாரம் 2015 முதல் டிவிஷனல் ரயில்வே மேலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் மேலும் கூறியது.
மேலும் படிக்க:
TNTET அட்மிட் கார்டு 2022 விரைவில் வெளியீடு: லிங்க் இதோ!
FSII-யின் 6வது ஆண்டு மாநாடு டெல்லியில் ஒரு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு!
Share your comments