திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பால், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அசத்தி வருகிறது. புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 1919ம் ஆண்டு, மே 5ம் தேதி குருகுல கல்வி நிலையமாக துவங்கப்பட்டது. பின், 1937ல் துவக்கப் பள்ளியாகவும், 1967ல் நடுநிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 930 மாணவர்கள் படிக்கின்றனர்
அழிஞ்சிவாக்கம் அரசுப் பள்ளி (Alhinjivakam Government School)
ஒவ்வொரு ஆண்டும், 200 மாணவர்கள் இங்கு புதிதாக சேர்ந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் தான் பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தது. ஆனால், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், அதற்கு முன்பாகவே மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா காலத்தில், நடப்பு கல்வியாண்டில், 370 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்து உள்ளனர். இந்த பள்ளியை சுற்றி வடகரை, கிராண்ட்லைன் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இருந்தாலும், இங்கு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு, பள்ளியின் செயல்பாடுகள் தான் காரணம்.
டிஜிட்டல் லர்னிங் (Digital Learning)
நுாற்றாண்டை கடந்த இந்த பள்ளி, அரசின் திட்டங்களால் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால், பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. இங்கு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, 'டிஜிட்டல் லர்னிங்' வகுப்பறை, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, லேப்டாப் வாயிலாகவும், தொடுதிரை கணினி வாயிலாகவும் வகுப்பு நடத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆங்கில பயிற்சி மட்டுமின்றி பல்வேறு திறன் வளர்ப்பு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இங்கு எட்டாம் வகுப்பு முடித்து, மேற்படிப்பிற்கு செல்லும் மாணவர்கள், மாவட்ட அளவில் சாதித்து வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை (Corona Test)
மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு சாப்பிட தனி அறையும், கைகளை கழுவ தனி குழாய் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் இரண்டு கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்னது. பள்ளியின் ஒவ்வொரு கட்டடத்திற்கும், நேதாஜி, அப்துல் கலாம், அம்பேத்கர் உள்ளிட்ட தேச தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. வகுப்பறைகளில் மட்டுமின்றி, வெளியேயும் அறிவாற்றலை வளர்க்கும் தகவல்கள் அடங்கிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு அரசு வழங்கும் மதிய உணவு, முட்டை மட்டுமின்றி தனியார் நிறுவனத்தின் உதவியுடன் அவ்வப்போது பால், பிஸ்கட் உள்ளிட்டவையும் மாணவர்களுக்கு வழங்கப்படுன்றன. கொரோனா காலம் என்பதால், வாரந்தோறும் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு அசத்தி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியை பாராட்டி, திருவள்ளூர் மாவட்டத்தின் சிறப்பு பள்ளிக்கான விருதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சமீபத்தில் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது.தனியார் பள்ளிகளுக்கு இணையாக எங்கள் பள்ளி இயங்க, பொது மக்கள், பெற்றோரின் ஆதரவு தான் காரணம். பலரது பங்களிப்புடன் பல நவீன வசதிகள் பள்ளிக்கு கிடைத்துள்ளன. இங்குள்ள 15 ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிவதால், மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கிறது. - நாராயணன், தலைமை ஆசிரியர்
எங்கள் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைபள்ளியில் படித்த பலரும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் உள்ளனர். இவர்கள் வாயிலாக பள்ளிக்கு பல உதவி கிடைக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, இது நடுநிலைப் பள்ளியாகவே உள்ளது. பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆஷா கல்விநாதன், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி தலைவர்.
மேலும் படிக்க
Share your comments