மின் கட்டண மையங்களில், 'கியூஆர் கோடு' (QR code) எனப்படும் ரகசிய குறியீட்டை 'ஸ்கேன்' செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மின் கட்டண வசூல் மையங்கள், அரசு 'இ - சேவை' மையங்கள், தபால் நிலையங்கள், சில வங்கிகளில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தலாம். இது தவிர வாரிய இணையதளம், மொபைல் செயலி, 'பாரத் பில்பே' செயலிகள் வாயிலாகவும் செலுத்தலாம்.
மின் கட்டணம் (Electricity Bill)
மின் கட்டண மையங்களில் 'டெபிட், கிரெடிட்' கார்டுகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் சேவை, சென்னையில் 2017ல் துவக்கப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள 325 மையங்களுக்கு 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டன. அந்த கருவியில் மின் ஊழியர்கள், நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகையை கணினியில் பார்த்து, பதிவு செய்ய வேண்டும். பின், நுகர்வோர் கருவியில் ரகசிய எண்ணை பதிவிட்டதும் கட்டணம் ஏற்கப்படும். ஊழியர்களே தொகையை தனியாக பதிவு செய்வதால் தவறுகள் ஏற்பட்டன.
கியூஆர் கோடு ஸ்கேன் (QR Code Scan)
தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதில் கணினியில் மின் இணைப்பு எண்ணை ஊழியர் பதிவிட்டதும், அந்த இணைப்பிற்கான கட்டணம் கருவியில் தெரியும். ஊழியர் தொகையை பதிவிட வேண்டியதில்லை. நுகர்வோர் ரகசிய குறியீட்டு எண்ணை பதிவிட்டு கட்டணம் செலுத்தலாம். புதிதாக வழங்கப்பட்டு வரும் கருவியில், 'கியூஆர் கோடு ஸ்கேன்' செய்யும் வசதியும் உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிதாக வைக்கப்படும் கருவிகளில், 'கியூஆர் கோடு ஸ்கேன்' (QR Code Scan) செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. சென்னையில் உள்ள மையங்களில், அந்த கருவிகள் வைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் கியூஆர் கோடு முறையில் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்படும். இது, சென்னையை தொடர்ந்து கோவை போன்ற முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும். 'கூகுள் பே' உட்பட பல 'மொபைல் வாலாட்' வாயிலாகவும் மின் கட்டணம் செலுத்தலாம்.
மேலும் படிக்க
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!
வேளாண் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது விவசாய முகத்தையே மாற்றும்: ஆய்வறிக்கையில் தகவல்!
Share your comments