சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவகங்கை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதே நிலை நீடித்தால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் வேடசந்தூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் அம்மாபேட்டை, வாழப்பாடி ஆகிய ஊர்களில் பெய்த மழையால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டை,செஞ்சி ஆகிய ஊர்களில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. தஞ்சாவூர், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இங்கு கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் முன்கட்ட சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.
கும்பகோணம்,மெலட்டூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்துள்ளது. திருபுவனத்தில் பெய்த மழையின் போது இடி தாக்கியதில் பனை மரம் பற்றி எரிந்தது. கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழையும் சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் அவலாஞ்சி ஆணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குந்தா, பில்லூர் ஆகிய இடங்களில் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சேலத்தில் நேற்று இரவு மூன்று மணி நேரம் பெய்த கனமழையால் அருகில் உள்ள அம்மாபேட்டை குமரகிரி ஏரி நிரம்பியதில் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் பச்சப்பட்டி, அசோக் நகர், ஆறுமுகநகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 200கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
அதிகபட்ச மழை பொழிவாக சிவகங்கையின் தேவகோட்டை, தருமபுரி பாலக்கோடு ஆகிய பகுதிகளில் தலா 11 செ.மீ மழையும், கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும், விருதுநகரின் ஸ்ரீவில்லிபுத்தூர், புதுக்கோட்டை ஆலங்குடி மற்றும் தருமபுரி பகுதிகளில் 8 செ.மீ மழையும், நெல்லை பாளையங்கோட்டை, சிவகங்கையின் காரைக்குடி, திருச்சி மருங்கபுரி, கிருஷ்ணகிரி பாரூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழையும், கோவை வால்பாறை, தருமபுரி ஹொகேனக்கல் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments