நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களின் வரம்பை இருமடங்காக உயர்த்தி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி இனி முதல் நிலை (Tier-I) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும்.
இதேபோல், இரண்டாம் நிலை (Tier-II) நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்கலாம் என ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடன் வரம்பு
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
இம்மாதம் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை கூட்ட அறிவிப்புகள் ஜூன் 8ஆம் தேதி வெளியானபோது, கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பை உயர்த்துவதாக ரிசர்வ் வங்கிஅதிகாரப்பூர்வமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
ஏற்கனவே அறிவிப்பு
இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டில்தான் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. அண்மையில் வீடுகளின் விலை உயர்ந்து வருவதாலும், வாடிக்கையாளர்களின் தேவையைக் கருத்தில் கொண்டும், கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அபராதம் கிடையாது
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வீட்டுக் கடன்களை முன்பாகவே செலுத்தி முடிப்பதற்கு கட்டணம் (foreclosure charges) அல்லது அபராதம் வசூலிக்கக்கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக் கடனை அடைப்பதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை கொடுக்கலாம். இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments