மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் போல, தங்கள் அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதாக இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மத்திய அரசைத் தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட அரசுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இந்நிலையில் தற்போது குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
எப்போது கிடைக்கும்?
இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி அரசு அதிகாரிகளுக்கு இந்த சலுகை 3 சதவீத அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது.
மே 1ஆம் தேதி குஜராத் மாநிலம் உருவான நாள் என்பதால் அன்றைய நாளில் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகவிலைப்படிக்கான 10 மாத நிலுவைத்தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை 2022 மே மாதத்திலும், இரண்டாவது தவணை 2022 ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
காத்திருப்பு
குஜராத் மாநில அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கெனவே 7ஆவது ஊதியக் குழுவின் பலனைப் பெற்று வரும் ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
இந்த அறிவிப்பால் அரசுக்கு ரூ.1,217.44 கோடி கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
Share your comments