கிரெடிட் கார்டு’ வைத்திருப்பவர்கள் அதன் பயன்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். பணம் செலுத்த கார்டை தேய்ப்பது எளிதானது என்றாலும், அதை திரும்பிச் செலுத்துவது கடினமாக அமைந்து விடக்கூடாது. கார்டு நிலுவைத் தொகையை உரிய காலத்தில் திரும்பிச் செலுத்தாவிட்டால், அதற்காக விதிக்கப்படும் கட்டணங்களும், அபராதங்களும் கடன் வலையில் சிக்க வைத்து விடலாம். அதோடு கிரெடிட் ஸ்கோரையும் (Credit Score) பாதிக்கும். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால், சமாளிக்கும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
அதிக வட்டி:
கிரெடிட் கார்டு ‘பில்’ தொகையை முழுதும் செலுத்த தவறினால், நிலுவைத் தொகை மீது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஆண்டுக்கு, 40 சதவீதம் வரை அமையலாம். அது மட்டுமல்ல, புதிய பரிவர்த்தனைகளுக்கான வட்டி இல்லாத கால சலுகையை இழக்க வேண்டியிருக்கும். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
கூடுதல் கட்டணம்:
நிலுவைத் தொகையை செலுத்தாத வரை, கார்டு மூலம் மேற்கொள்ளும் புதிய பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், குறைந்தபட்ச தொகையை செலுத்தவில்லை எனில், தாமத கட்டணம் செலுத்த வேண்டும். பில் தொகைக்கு ஏற்ப இது கணிசமாக அமையலாம். இதுவும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
மாத தவணை:
நிலுவைத் தொகையை உடன் செலுத்தி விடுவதே ஏற்றது. இவ்வாறு செலுத்த முடியவில்லை எனில், நிலுவைத் தொகை அல்லது அதன் ஒரு பகுதியை மாதத் தவணையாக (Monthly Instalment) செலுத்தும் வசதியை நாடலாம். திரும்பிச் செலுத்தும் ஆற்றலுக்கு ஏற்ப இந்த வசதியை கவனமாக திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இருப்புத்தொகை
ஒரு சில மாதங்களில் நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், அந்த தொகையை கைவசம் உள்ள வேறு ஒரு கார்டுக்கு மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குறித்த காலத்தில் அடைக்கவில்லை எனில், இந்த தொகைக்கும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
தனிநபர் கடன்:
கார்டு கடனை செலுத்த முடியாத நிலை இருந்தால், மாற்று வழிகளை ஆராய வேண்டும். கிரெடிட் கார்டு கடன் (Credit Card Loan) என்பது அதிக வட்டி மற்றும் அபராதம் கொண்டது. எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, தனிநபர் கடன் வசதியில் கார்டு கடனை அடைக்கலாம். கடன் நிர்வாகம் முக்கியம் என்பதை உணர வேண்டும்.
மேலும் படிக்க
கடன் வாங்கியோருக்கு சூப்பரான சலுகை! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
Share your comments