புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை அதிகமான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பினையும் உற்பத்தியினையும் அதிகரித்திட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய உலகளாவிய சூழலில் பெருகிவருகின்ற மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை பெருக்குவதும், நஞ்சற்ற உணவுகளை வழங்குவதும் விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகின்றது என்று சொன்னால் மிகையாகாது. வேளாண்மை தொழில் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழும் 70 சதவீத மக்களின் அடிப்படையான வாழ்வாதாரமாக இருகிறது. வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது.
வேளாண்மையைப் பொறுத்த வரையில், தோட்டக்கலைத்துறையில் தமிழக அரசு அதிக ஆர்வத்தினைக் காட்டி வருகின்றது. அதோடு, தோட்டக்கலை சாகுபடியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது. தேசிய அளவில் தோட்டக்கலை சாகுபடி என்பது தனது உற்பத்தியில் 6.09 என்ற சதவீதத்தினையும், மொத்த பரப்பளவில் 5.47 என்ற சதவீதத்தினையும் கொண்டு இருக்கின்றது. ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான தோட்டக்கலை பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு ஏற்றதொரு வகையில் வேளாண் காலநிலையையும், புவியியல் நிலையையும் கொண்ட மாநிலமாகச் செழிப்புடன் தமிழகம் விளங்கி வருகின்றது.
தமிழ்நாட்டில் தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பழங்கள், தோட்டப்பயிர்கள், மருத்துவ பயிர்கள், நறுமண பயிர்கள், மலர்கள் 15.88 லட்சம் ஹெக்டேரில் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. விளை நிலத்தின் ஒட்டு மொத்த தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி 231 லட்சம் டன் என்பதாக இருக்கின்றது. தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டில் தோட்டக்கலைப் பயிர்களின் மொத்த பரப்பளவு 3.8 சதவீதமும், உற்பத்தி 11.85 சதவீதமும் முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தோட்டக்கலை பயிர்களைப் பொறுத்தவரையில் தோட்டக்கலைப் பயிர்கள் 50 சதவீதமும், பழங்கள் 20 சதவீதமும், காய்கறி 18 சதவீதமும், சுவை தாளித பயிர்கள் 8 சதவீதமும், மலர்கள் 3 சதவீதமும், நறுமண பயிர்கள் 1 சதவீதமும் எனச் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் இந்தியாவிலேயே கிராம்பு, புளி, மல்லிகை சம்பங்கி ஆகியவை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் அசத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னை, கொக்கோ, செவ்வந்தி உற்பத்தியில் 2-ம் இடத்திலும், வாழை, நெல்லி, மிளகு, தர்பூசணி, பாகற்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் தமிழகம் இருந்து வருகிறது.
பழங்களைப் பொறுத்த வரையில் மா உற்பத்தி பெருவாரியாக அதிகளவில் நடந்து வருகிறது. அதாவது 1,47,983 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து முறையே வாழை, தர்பூசணி, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சப்போட்டா, பலா, பப்பாளி, முலாம்பழம் விளைவிக்கப்படுகின்றன. இதர பழங்கள் என்று பார்க்கையில் அடுத்தடுத்த நிலைகளில் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்தவகையில் பழவகை பயிர்களின் ஒட்டு மொத்த சாகுபடி பரப்பளவு என்பது 3,26,059 ஹெக்டேர் என்பதாக இருக்கின்றது. அதேவேளையில் சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வரும் சிறப்பு பழ பயிர்களான டிராகன் பழம், வெண்ணெய் பழம், பேரீச்சை, மங்குஸ்தான், அத்தி, ஆலிவ் போன்ற பயிர்களுக்கும் பயிருடுவதற்கும், விற்பனைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
காய்கறிச் சாகுபடியினைப் பொறுத்தவரையில் சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 55,123 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தக்காளி 41,545 ஹெக்டேரிலும், கத்தரி 24,015 ஹெக்டேரிலும், முருங்கை 21,501 ஹெக்டேரிலும், வெண்டை 18,967 ஹெக்டேரிலும், இதர காய்கறி 1,18,397 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் காய்கறி மொத்த சாகுபடி பரப்பு 2,79,548 ஹெக்டேர் என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்ட பயிர்ச் சாகுபடியினைப் பொறுத்தவரையில் தென்னை 4,46,153 ஹெக்டேரிலும், முந்திரி 86,117 ஹெக்டேரிலும், தேயிலை 69,588 ஹெக்டேரிலும், காபி 33,108 ஹெக்டேரிலும், ரப்பர் 28,433 ஹெக்டேரிலும், இதர பயிர்கள் 1,35,899 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மொத்த சாகுபடி பரப்பு 7,99,298 ஹெக்டேர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவீன கால திட்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்பட்ட புதிய திட்டங்களையும் கொண்டு வருவதோடு, அதனைச் செயல்படுத்துவதிலும் தமிழக அரசு முழுமூச்சாகக் களமிறங்கி இருக்கிறது. இது தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியில் இன்னும் பெரியளவு முன்னேற்றத்தைத் தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் அளிக்கும் என்பதில் எந்த வகையான ஐயமும் இல்லை.
மேலும் படிக்க
Share your comments