இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய பாதி பேர், பொருளாதாரம் மற்றும் நிதி ரீதியான நம்பிக்கையுடன் உள்ளனர்; காப்பீட்டு பாலிசிகளை எடுக்க விரும்புகின்றனர். குறிப்பாக, இந்தத் தொற்று காலத்தில் முன்பை விட அதிகமாக ஆயுள் காப்பீடு (Life Insurance) மற்றும் மருத்துவக் காப்பீடு பாலிசிகளை எடுத்து வருகின்றனர். ஆனால், காப்பீட்டு பாலிசிகளை வாங்குவதற்கான செலவு, அதிக மற்றும் சிக்கலான ஆவண வேலைகள், நேரமின்மை மற்றும் மாறுபட்ட வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், அவர்களால் இன்சூரன்ஸ் பாலிசிகளை சுலபமாக எடுக்க முடிவதில்லை.
குறுகிய கால நிதித் திட்டமிடல் (Short-term financial planning)
வீட்டு வாடகை, வீட்டுக் கடன் மாதத் தவணை, கார் கடன் மாதத் தவணை, கிரெடிட் கார்டு கடன் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றின் செலவுகளை சமாளிக்க வேண்டியிருப்பதால், நீண்ட கால நிதித் திட்டமிடலைக் காட்டிலும் குறுகிய கால நிதித் திட்டமிடலையே விரும்புகின்றனர்.
இவர்கள் காப்பீட்டின் அவசியத்தை புரிந்து கொண்டாலும், எதிர்கால நிச்சயமற்ற நிலையில் இருந்து தங்களையும், தங்கள் அன்புக்குஉரிய குடும்ப உறுப்பினர்களையும், நிதி ரீதியாக பாதுகாக்கும் நீண்ட காலத் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும்.
டேர்ம் பிளான் (Term Plan)
காப்பீடு பாலிசியை எடுக்கும் முன், அந்த பாலிசியின் தன்மை மற்றும் பாலிசியை அளிக்கும் நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்து கொள்வது அவசியம். கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்திருக்கும் நிலையில், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மையை நமக்கு உணர்த்தி இருக்கும் தற்போதைய சூழலில், ஓராண்டு, 'டேர்ம் பிளான்' மிகவும் பொருத்தமான ஆயுள் காப்பீடு பாலிசியாக கருதப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், 30 வயதுடைய ஆண், புகை பிடிக்காதவருக்கான 50 லட்சம் ரூபாய் பாலிசிக்கு, மாத பிரீமியம், வரி உட்பட 445 ரூபாய் மட்டுமே. இது குறித்து தெரியாதவர்கள், வல்லுனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். இதுவரை எந்த டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியையும் எடுத்துப் பழக்கமில்லாதவர்கள், ஓராண்டு டேர்ம் பிளான் மூலம் அதை ஆரம்பிக்கலாம்.
அடுத்து வரும் ஆண்டுகளில் அதை தொடர்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி ரீதியான முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தி தரலாம். இந்தியா, இளைஞர்களால் நிரம்பிஇருக்கிறது. அவர்களை நம்பி இருக்கும் குடும்பத்தினரை காக்க, ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியம்.
மேலும் படிக்க
Share your comments