சொல்வதை செய்வோம்; செய்வதை சொல்வோம்! முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து அடிக்கடி வரும் வார்த்தை, இது. கோவையில் எங்கெங்கு காணினும் கோலோச்சும் பாலித்தீன் பைகள், நீரோடைகளையும், சாக்கடைகளையும் அடைத்துக் கொண்டு அசுரத்தனமாக ஆதிக்கம் செலுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளையும் பார்த்தால், தமிழக அரசும், மாநகராட்சியும் சொல்வதும், செய்வதும் என்னவென்பது ஊருக்கே விளங்கும்.
மீண்டும் மஞ்சப்பை என விளம்பரம் செய்ய கோடிக்கணக்கில் செலவிடும் தமிழக அரசு, முதலில் கோவை மாநகராட்சி அதிகாரிகளின் கைகளில் அவற்றைத் திணிக்க வேண்டும். ஏனெனில், கோவை நகரில் பூக்கடை, பழக்கடை, மளிகைக்கடை, கறிக்கடை, ஓட்டல், மெஸ், காய்கறிக்கடை, சாலையோரக் கடை என மக்கள் அதிகமாகப் புழங்கும் கடைகளில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் பை தாராளமாகப் புழங்குவதைப் பார்த்தால், மஞ்சப்பை திட்டமே மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.
பிளாஸ்டிக் (Plastic)
'யார் பறிப்பது' என்று சொல்லாமல் சொல்வதைப் போல, சாலையோரக் கடைகளில், பாலித்தீன் பைகளில் பூக்களைக் கட்டி தோரணமாகக் தொங்க விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வீதியிலும், மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்ட குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.
நொய்யல் ஆற்றிலும், அவற்றின் நீரோடைகளிலும், சங்கனுார் பள்ளத்திலும் நீரோடும் பாதை அனைத்திலும் வண்ண வண்ணமாய் எண்ணற்ற பிளாஸ்டிக் பாட்டில்களும், பைகளும் அணை கட்டி நிற்பதைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்வதை, கடமைக்காக கூட, மாநகராட்சி அதிகாரிகள் செய்வதே இல்லை.
கோவை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதுமே பிளாஸ்டிக் ஆதிக்கம் தொடர்கிறது. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதனை ஓரளவுக்காவது ஒழிக்க முடியும்.
மஞ்சப்பை (Yellow Bag)
மக்கள் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு மெனக்கெட்டு வரும் நிலையில், கோவை மாநகராட்சியோ, இங்குள்ள சூழல் அமைப்புகளோ அதற்காக ஒரு துரும்பையும் அசைப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய அதிகாரிகளால், 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் வெற்றிபெறாது என்பதே உண்மை.
மேலும் படிக்க
வாழை நாரில் புதிய தொழில்: முந்திரிப் பழத்தில் ஊட்டச்சத்து பானம்!
Share your comments