அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார், இவர் சமீபத்தில் க்ரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து நடத்திய MFOI விருதினை வென்றார். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பண்ணை முறையில் விவசாயம் செய்து வரும் அசோக் குமார், அரியலூர் மாவட்டத்தின் முன்னோடி விவசாயியாக கருதப்படுகிறார். அவர் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து க்ரிஷி ஜாக்ரான் அவருடன் கலந்துரையாடியது.
ஒருங்கிணைந்த பண்ணை முறை ஏன்? அசோக்குமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக 4 ஏக்கர் பரப்பில் நெல் பயிர் மட்டுமே சாகுபடி மேற்கொண்டு வந்தார். ஆனால் அதில் கிடைத்த வருமானம் போதுமானதாகவும், லாபகரமானதாகவும் இல்லை. இதனையடுத்து தான், ஒருங்கிணைந்த முறையில் விவசாயம் மேற்கொள்ள தனது கவனத்தை திசை திருப்பினார்.
முதற்கட்டமாக நெல் சாகுபடியுடன் 2 மாடுகள் மற்றும் தனியார் நிறுவனத்தின் பிராய்லர் கோழி வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். எதிர்ப்பார்த்து களமிறங்கியது போலவே லாபம் பார்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டிலிருந்து ஆடு வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பிலும் கால் பதித்தார். மாத வருமானம் போல், ஒரு குறிப்பிட்டத் தொகை தொடர்ச்சியாக கிடைக்க தனக்கான பாதை இதுதான் என தீர்மானித்து அதில் தீவிரமாகவும் செயல்படத் தொடங்கினார்.
விவசாய பணிகளில் லாபம் பார்க்க வேண்டும் என்றால் முதலில் ஒருவர் அறிந்திருக்க வேண்டியது, உற்பத்திச் செலவினை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பது என்பது பற்றி தான். இதை உணர்ந்த அசோக்குமாரும், அரியலூர் மாவட்ட கிரீடு வேளாண் அறிவியல் மையத்தை தொடர்புக் கொண்டு சில ஆலோசனைகளை பெற்றுள்ளார். செலவினங்களை குறைப்பது மற்றும் புதிய தொழில்நுட்பங்களை எவ்வாறு கையாள்வது, அவற்றை எப்படி வேளாண் பணிகளில் உட்புகுத்துவது போன்று தான் பெற்ற ஆலோசனைகளை வெற்றிகரமாக களத்திலும் செயல்படுத்தியுள்ளார்.
” ஒருங்கிணைந்த முறையில் வேளாண்மை செய்யும் பொழுது செலவினம் குறைவதுடன், வருமானமும் அதிகரிக்கும் என்பதை என் அனுபவத்திலிருந்து கூறுகிறேன்” என்கிறார் அசோக்குமார். தற்போது 4 ஏக்கர் நெல் சாகுபடியுடன், 5 கறவை மாடுகள், 40 நாட்டு ஆடுகள், வருடத்திற்கு ஆறு பேட்ச் பிராய்லர் கோழி வளர்ப்பு மற்றும் 50 சென்ட்டில் மீன் வளர்ப்பு என பரப்பரப்பாக இருக்கிறார்.
ஒருங்கிணைந்த முறையில் விவசாயம் என்பதை தாண்டி அசோக்குமாரினை மற்ற விவசாயிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது, இவரது பண்ணையில் அமைத்திருக்கும் சோலார் மின்சார வசதி தான். தன் பண்ணை மற்றும் விவசாய பணிகளுக்கான நீர் பாசனத்திற்கு சோலார் முறையிலான மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்.
”ஒருங்கிணைந்த பண்ணை முறையினை நான் மேற்கொள்ள காரணமாகவும், அதில் ஈடுபட முயற்சித்தப் போது உதவி செய்தவர்களில் முக்கியமான நபர், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் (ஐஏஎஸ்) தான். அதன்பின்னரும், தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த பண்ணை முறையினை வெற்றிகரமாக மேற்கொள்ள சரவணவேல் ராஜ் (ஐஏஎஸ்) அவர்களும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தார்கள்” என அசோக்குமார் தெரிவித்தார்.
மானியத்திட்டங்களே மூலதனம்:
வேளாண் துறையில் விவசாயிகளின் நலனுக்காக அரசின் சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. ஆனால், மானியத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும்.
அசோக் குமாரின் தற்போதைய நிலையான வெற்றிக்கு மற்றொரு காரணம், அரசின் சார்பில் வழங்கப்படும் மானியத்திட்டங்களை உரிய முறையில் அணுகி தனது பண்ணையினை விரிவுபடுத்தியது தான் எனலாம். நீங்கள் அரசின் சார்பில் பெற்ற மானியங்களை கூறுங்கள் என நாம் கேட்ட கேள்விக்கு அசோக் குமார் ஒரு நீண்ட பட்டியலை தந்தார். அதன் விவரம் பின்வருமாறு-
” கடந்த 2012 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டமான 100 நாள் வேலைத் திட்ட உதவியுடன் ரூ.1,48,000 நிதியில் மீன் குட்டை அமைத்தேன். அரசின் உதவியால் திப்பி சிலேபியா மீன் குஞ்சு கிருஷ்ணகிரி பண்ணையிலிருந்து மானியத்தில் கொடுத்தார்கள். 3 வருடம் கழித்து மீன் குட்டை பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிக்கும் அரசின் சார்பில் உதவி கிடைத்தது.
Read also: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!
கோழி வளர்ப்பு என்று வருகிற போது, கடந்த 2013- 2014 ஆம் காலாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடை துறை மூலம் 50 சதவீத மானியத்தில் கோழி பண்ணை அமைத்தேன். கோழி பண்ணை அமைக்க எனக்கு மொத்தமாகிய செலவு ரூ.8,25,000. இதில் மத்திய அரசின் பங்காக 25 சதவீத மானியம், மாநில அரசின் பங்காக 25 சதவீத மானியம் என ஒட்டுமொத்தமாக ரூ.4,16,000 மானியமாக பெற்றேன்.
இதேப்போல் தான் நபார்டு மூலம் 100 ஆடு வளர்ப்புக்கு 25 சதவீதம் மானியமாக ரூ.50,000 பெற்றேன். வேளாண் பொறியியல் துறை மூலம் 5 HP அளவில் என் பண்ணையில் சோலார் பேனல் அமைத்துள்ளேன். இதில் எனது பங்குத்தொகை 20 சதவீதம், மானியமாக 80 சதவீதம் பெற்றேன். சோலார் பேனல் அமைக்க மொத்தமாகிய செலவு ரூ.5,24,000. எனது பங்கு ரூ.1,24,000 மற்றும் மானியம் 4,00,000 ரூபாய்" என்றார். ஒருப்புறம் மானியங்கள் கிடைத்தாலும், அசோக்குமாரின் அனைத்து முயற்சிகளுக்கும் கடனுதவி வழங்கி உத்வேகம் அளித்தது செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.
தேவையில்லாதது அப்படினு எதுவுமில்லை:
ஒரு புறம் கோ-5, வேலிமசால் உள்ளிட்ட தீவன பயிர்களை பயிரிடும் அசோக்குமார், அதனை தான் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக வழங்குகிறார். ஆடு மற்றும் மாடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை தீவன பயிர்களுக்கு உரமாக பயன்படுத்துகிறார். கோழிகளின் எச்சங்களை, மீன்களுக்கு உணவாக வழங்குகிறார். ஆகமொத்தம் எதுவுமே அசோக்குமாரை பொறுத்தவரை, தேவையற்ற ஒன்று என இல்லை.
அசோக்குமாரின் பணிகளுக்கு அவரின் குடும்ப உறுப்பினர்களும் உதவி வருகின்றனர். தனியாக இப்பணிகளை பார்த்துக் கொள்ள அதிக அளவில் கூலித் தொழிலாளர்கள் தேவைப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இவரின் பண்ணையினை திட்டக்குடி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டு அதில் பயிற்சியும் பெற்றுள்ளார்கள். அசோக்குமார் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் கே.வி.கே. வேளாண் அறிவியல் மைய அதிகாரிகளும் உதவிக்கரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read also:
தோட்டக்கலை மிஷன் திட்டம்: டிராகன் பழ சாகுபடிக்கு 40% மானியம்!
புகையிலை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்- மத்திய அரசு பரிசீலனை
Share your comments