தரையில் அமர்ந்து வாழை இலை போட்டு உணவு உண்ணும் பழக்கத்தை ஆதிகாலத்தில் இருந்து பின் பற்றி வருவது நம் தமிழர்களே. இன்றைய தலைமுறையானது விசேஷங்களில் மட்டுமே வாழை இலையை பயன்படுத்துகின்றனர்.
இன்று மெல்ல மெல்ல வாழை இலையை மறந்து நாம் பிளாஸ்டிக்கிற்கு மாறி வருகிறோம். மக்காத அந்த பிளாஸ்டிக்கில் உணவு உண்பதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. தற்போது தாய்லாந்து (Thailand) நாட்டில் உணவுப் பொருட்களையும், மளிகை பொருட்களையும், வாழை இலையில் பேக்கிங் (Banana Leaf Packing) செய்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய மாற்றத்தை செய்து வருகின்றனர்.
தாய்லாந்தில் சியாங்மாய் (Chiang Mai) நகரில் உள்ள ரிம்பிங் சூப்பர் மார்க்கெட் (Super Market) தான் இந்த வாழை இலை பேக்கிங் முறையை செய்து அசத்தி வருகிறது. இந்த சிறப்புச் செயலை அங்குள்ள பர்ஃபெக்ட் (Perfect) என்ற ரயில் எஸ்டேட் நிறுவனம் வாழை இலை பேக்கிங்கை புகை படம் எடுத்து தனது முகநூலில் பதிவு செய்திருந்ததையொட்டி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி உலகம் முழுதும் பரவி இன்றைக்கு தமிழ் நாடு வரை இந்த புகைப்படும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் 9 பில்லியன் டன்னுக்கு மேலாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சுற்று சூழலுக்கு கேடையே விளைவிக்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பல்வேறு நாடுகள், நகரங்கள், மாவட்டங்கள் தடை விதித்து வருகின்ற நிலையில் இந்த புதிய வாழை இலை பேக்கிங் முறையை ரிம்பிங் சூப்பர் மார்க்கெட் மக்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தில் வாழை ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. அங்குள்ள வாழை சார்ந்த தொழில்களில் வாழை இலைகள் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இதில் வீணாகும் இலைகளை இந்த நிறுவனம் சேகரித்து காய்கறிகள், உணவுப்பொருள்கள், மளிகைப் பொருள்கள் ஆகிய அனைத்தையும் வாழை இலையில் பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு 50 தாய்பட் அதாவது (1.64 அமெரிக்க டாலர்கள்) சன்மானமாக வழங்கப்படுகிறது. இது மக்களிடையே ஒரு ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த அசத்தலான வாழை இலை பேக்கிங் முறையானது பல்வேறு நிறுவனங்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது. இந்த முறையானது வியட்நாமிலும் பரவலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் “சன்னி பீ” என்ற நிறுவனம் இந்த வாழை இலை பேக்கிங் முறையை துவங்கியுள்ளது.
உலக மக்கள் அனைவரும் சுற்று சூழல் சீர்கேடை சற்று தீவிரமாக கொண்டு இம்மாதிரியான இயற்கை பொருட்களைக் பயன்படுத்தி ஒரு பெரும் மாற்றம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இது போன்ற பொருட்களை வணிகர்கள் முன்னெடுத்து, வரும் நாட்களில் மக்கள் யாரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதவாறு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
நன்றி
பசுமை விகடன்
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments