ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்த நடராஜன் தனது துல்லியமான யாக்கரால், கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குறிப்பாக இறுதி ஓவர்களில் நடராஜனின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களையே திக்குமுக்காட செய்தார். இதனால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜனும் இடம்பிடித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று விதமான போட்டிகளிலும் நடராஜன் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்து, தனது சொந்த ஊர் திரும்பிய நடராஜன்-க்கு ஆரவாரத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
ஆனால் அதன் பின் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க முடியாமல் போனதும் குறிப்பிடதக்கது. தற்போது காயத்திலிருந்து குணமாகி, அவர் மீண்டும் உற்சாகத்துடன், கிரிக்கெட் விளையாடுவதற்கான பயிற்சிகளை தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் நடராஜன், தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்தில், தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கி வருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது சொந்த ஊரில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு கிரிக்கெட் மைதானத்தை அமைக்க இருக்கிறேன். அந்த கிரிக்கெட் மைதானத்தில் பெயர் நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட் என பெயரிடப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதல்முறையாக இந்திய அணியில் விளையாடினேன். இந்த ஆண்டு டிசம்பரில் எனது கிராமத்தில் புதிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க முயற்சிக்கிறேன். கனவுகள் அனைத்தும் நிறைவேறி வருகின்றன. கடவுளுக்கு நன்றி” எனப் பதிவிட்டு, தனது கனவுகள் ஒவ்வொன்றும் நிறைவேறி வருவதின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடராஜன்.
Share your comments