ஒரு ஏக்கர் நிலத்தில், ஐந்து அடுக்கு சாகுபடி முறையில், 15 வகை பயிர்களை, இயற்கை முறையில் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார் சேலம் மாவட்ட விவசாயி குணசேகரன்.
இயற்கை விவசாயத்தில் ஆர்வம்:
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, கொளத்துார் மூலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (Gunasekaran) வயது 54; மனைவி ஷியாமளா (Shiyamala) வயது 45. சுகாதாரத் துறை அலுவலராக (health department officer) பணிபுரிந்த குணசேகரன், விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மனைவி ஷியாமளா எம்.எஸ்சி., சைக்காலஜி (MSc Psychology) படித்து, ஆயத்த ஆடை தயாரிப்பில் ஈடுபட்டார். தம்பதியின் பார்வை, இயற்கை விவசாயத்தின் மீது திரும்பியது. இதையடுத்து, 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை உரம் (Natural Compost) மற்றும் பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி, கருப்பு கவுனி அரிசி, ஆத்துார் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி (Cultivation) செய்துள்ளனர்.
ஐந்து அடுக்கு சாகுபடி முறை:
இயற்கை விவசாயத்தில் புதிய யுக்திகளைக் கையாள நினைத்து, ஐந்து அடுக்கு சாகுபடி முறையில் (Five layer cultivation method) ஒரு ஏக்கர் நிலத்தில், 15 வகை பயிர்களை சாகுபடி செய்து அசத்தியுள்ளனர். இது குறித்து, குணசேகரன் கூறியதாவது: ஐந்து அடுக்கு சாகுபடி, ஆண்டு முழுதும் வருவாய் ஈட்டி தரும். ஒரே நிலத்தில் மரங்கள், செடிகள், கொடிகள் வளர்க்கும் முறை தான் இது. என் நிலத்தில் தென்னை, பப்பாளி, வாழை, முருங்கை உள்ளிட்ட மரங்கள், அதன் அருகில், சேனைக்கிழங்கு, தக்காளி, இஞ்சி, மஞ்சள், மிளகாய், வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி செடிகள், பீர்க்கங்காய், புடலை, பாவற்காய் உள்ளிட்ட கொடி வகைகள், உளுந்து, பச்சைப்பயறு மற்றும் பூ வகைகள் என, 15 வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ளேன்.
தினசரி மற்றும் ஆண்டு வருவாய்:
காய்கறிகள் மூலம் தினசரி மற்றும் வாரம் ஒருமுறையும், மரங்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் மூன்று முறையும் வருவாய் (Revenue) ஈட்ட முடிகிறது. ஐந்து அடுக்கு சாகுபடி முறையில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரே நிலத்தில், பலவகை செடிகள் நடவு (Planting) செய்வதால், அதன் வாசனையில் ஏற்படும் குழப்பம் காரணமாக, பூச்சிகள் தாக்கம் குறைவாக இருக்கும்.
இயற்கை முறையில் விவசாயம் செய்து நல்ல வருவாய் ஈட்டி வரும் ஓய்வு பெற்ற தம்பதிகள், வருங்கால இளந் தலைமுறையினருக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
இயற்கை முறையில் நெல் உற்பத்தி! சாதனை படைத்த இயற்கை விவசாயி செல்வம்!
இயற்கை விவசாயமும், பாரம்பரிய அரிசி ரகங்களும்!! மனம்திறக்கும் கடலூர் விவசாயி சிவக்குமார்!
Share your comments