விவசாயம் செய்வது என்பதே சற்று கடினமான ஒன்றுதான். அதிலும் இயற்கை விவசாயம் என்று பார்க்கும்போது, வரப்பு அமைப்பதில் இருந்து அறுவடை வரை எல்லாக் காலங்களிலும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், அத்தனை சவால்களையும் தன்னந்தனியாக, ஒற்றைப் பெண்ணாக நின்று சாதித்திருக்கிறார், NRI தமிழச்சி சத்யாஸ்ரீ. கிருஷி ஜாக்ரன் பத்ரிகையின் சார்பில் மாதம் தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் விவசாயிகள் பங்கேற்றும் ''''Women Power in Farmer The Brand'' என்ற நிகழ்ச்சி ஃபேஸ்புக் பக்கம் மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.
5 பெண் விவசாயிகள் (Five Lady Farmers)
தமிழ்நாடு, கேரளா 5 மாநிலங்களைச் சேர்ந்த 5 சாதனை பெண் விவசாயிகள் பங்கேற்று, தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து எடுத்துரைத்தனர். இதில் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, வெளிநாடுவாழ் இந்தியரான சத்யாஸ்ரீ கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, 18 வருடத்திற்கு முன்பு கனடா போனேன். எனக்கென்று எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோது, சிறு வயது முதலே விவசாயத்தின் மீது ஒரு பற்று இருந்தது. அவ்வாறு நாள் யோசித்தபோது எனது தந்தை புற்றுநோயினால் இறக்க நேரிட்டது. அவரது மரணம், இயற்கை விவசாயத்தை நோக்கி என்னைப் பயணிக்க வைத்தது. இயற்கை விவசாயத்தைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்ற உள்ளுணர்வைத் தந்தது.
2 ஆண்டுக்கு முன்பு விடுமுறைக்கு வந்தபோது, எங்கள் நிலம் முழுவதும் முள்ளுக்காடாக இருந்தது. ஆனால் எனக்கு யாருடைய உதவியும் இல்லை. ஒரே பெண்மணியாக நின்று முதல் வரப்புகளில் பழங்கள் உள்ளிட்ட பலவகை மரங்களைப் பயிரிட்டேன். குறுகியகாலத்தில் வளரக் கூடிய மரங்களைத் தேர்வு செய்தேன். என்னுடைய இந்த முயற்சிக்கு விருதாசலத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் உள்ளிட்ட சிலர், கேட்ட உடனேயே உதவி செய்தனர். விவசாயத்திற்காக களம் இறங்கியபோது, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்டவற்றைப் பெறக் கடைசி வரைப் போராடினேன். முதலில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டேன். ஒரு வெளிநாடு வாழ் இந்தியர், MBA பட்டதாரி, எனது குழந்தைகள் மருத்துவம் படிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி, நான் ஒரு இயற்கை விவசாயி என்று சொல்லுவதில்தான் எனக்கு பெருமையாக இருக்கும். அதுவும் விவசாயியாக நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்னுதான் சொல்லனும்.
பல்கலைக்கழக ரகங்கள்
என்னுடையப் பண்ணையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டு, டிராக்டர் வாங்குதல் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளை முன்கூட்டியே செய்தேன். சிவகங்கை முதல் மதுரை செல்லும் வழியில் என் நிலம் உள்ளது. இங்கு ஒரு ஏக்கர் வீட்டுத் தேவைக்கு மட்டும்தான் விளைவித்தேன். அதில் நல்ல மகசூல் கிடைத்ததால், 7 ஏக்கரில், ர் பாரம்பரிய ரகம் தங்கம்சம்பா, தூயமல்லி, பூங்கார், கருங்குறுவை,குதிரைவாலி, உள்ளிட்ட பாரம்பரிய ரகங்களை பயிரிட்டுள்ளேன். இதேபோல் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன.
ஃபாஸ்ட் ஃபுட் மூலம் தாரை வர்த்து விட்ட ஆரோக்கியத்தை நாம் மீட்டுக்க வேண்டுமென்றால், பாரம்பரிய ரகங்களுக்குத் திரும்ப வேண்டும். பல்கலைக்கழக ரகங்களையும் விளைவித்திருக்கிறேன்.
வேலையாள் என்பது மிகவும் சவால் மிகுந்தது. அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால், உள்ளூர் மக்களின் ஆதரவு கொஞ்சமும் இல்லை.
வேலையாள் தேவைங்கிறபோது, நான் கார் எடுத்துத்துட்டு போய், வேலையாட்களைக் கூட்டிட்டு வருவேன். ஒரு கட்டத்தில் ஆள் கிடைக்காதபட்சத்தில்,என் இலக்கை அடைய வேண்டும் என்ற ஆசைல், நானே களம் இறங்கினேன். சுமார் 3 ஏக்கர் நிலத்தில் நான் தனியாளாக நின்று களை எடுத்திருக்கிறேன். வரப்பும் போட்டிருக்கிறேன். அதேநேரத்தில் நண்பர்கள், தோட்டக்கலைத் துறையினர் என பல்வேறு தரப்பினரும் உதவி செய்தனர்.
நெல் போட்டு இரண்டரை மாதங்கள் ஆகின்றன. அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ளன.
மின்சாரம் கிடைக்கவில்லை. அதனால் போர் வெல் தண்ணீர் கிடைத்தும் அதை பாய்ச்சுவதற்கு மோட்டார் இயக்க மின்சாரம் இல்லை. அடிப்பம்பு வாங்கி, சித்தாள், கொத்தனார் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பயிர் வளர்த்தது நான் ஒரு ஆளாகத்தான் இருப்பேன். இப்போ என்னுடைய லாபத்திற்காக இல்லை. மன சந்தோஷத்திற்காகவும் நல்ல செயலைச் செய்கிறேன் என்ற நம்பிக்கைக்காகவும் நான் இந்த வழியில் சென்றுகொண்டிருக்கிறேன். ஆயிரம் பேருக்கு நல்ல உணவு, நஞ்சில்லாத உணவைக் கொடுக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன். என்னுடைய விவசாய நிலத்தை 30 ஏக்கர் நிலமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளேன். கொரோனோ வந்து, 4 மாத விடுமுறையைக் கொடுத்தது, இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
பெண்களுக்கு சொல்ல விரும்புவது,
பெண்களால முடியாதது எதுவுமே இல்லை. முடியும்னு மட்டும் நினைத்தால் போதும். இதுக்கு நிறையபேர் பின்னாடி நிற்கனும், அவங்கதான் எல்லாவற்றையும் பார்க்கணும் என்பதெல்லாம் கிடையாது. பின்புலமா யாருமே இல்லாமதான் நான் இவ்வளவு வெற்றி பெற்றிருக்கிறேன்.
யாரும் இல்லைன்னு நினைக்காதீங்க. உங்களுக்கு என்ன தெரியுமோ அதை செய்ய முன்வாங்க. குறிப்பாக கணவரை இழந்த பெண்கள் எல்லாம், வாங்க காலை ஊன்றி நில்லுங்க, செய்யும்போது பயமும் போயிடும், உங்கள் கவலைகளும் மறந்துவிடும். மனவலிமையும் கிடைக்கும். எதையும் செய்யும் தைரியமும் கிடைக்கும். அப்படிப் பண்ணும்போது, யாரைப்பற்றியும் யோசிக்க மாட்டீர்கள். உங்கள் கஷ்டங்களும் பறந்துபோகும். ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Read More
ஆடுகளைத் தாக்கும் குடற்புழு நோய்க்கு இயற்கை மூலிகைகள் மூலம் தீர்வு!
நெற்கதிரில் கூடு கட்டிய குருவி! கூட்டைக் கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி!
Share your comments