ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் தாலுக்கா, கொளப்பலூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா சமீபத்தில் கிரிஷி ஜாக்ரான் சார்பில் முன்னெடுக்கப்பட்ட மில்லினியர் விவசாயிக்கான விருதினை பெற்றார்.
தேனீ வளர்ப்பு என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொழில் முனைவோர்கள் மத்தியில் முதன்மை தேர்வாக உள்ளது. அந்த வகையில் தேனீ வளர்ப்பு மற்றும் அதன் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்டுவதோடு, மற்ற தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கும் முன்னோடியாக திகழ்கிறார் மஞ்சுளா.
தேனீ வளர்ப்பு- அசத்தும் தம்பதியினர்:
மஞ்சுளா அவர்களின் குடும்பத்தார் விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளனர். குடும்பச்சூழ்நிலை காரணமாக அடிப்படைக் கல்விக்கூட பயில முடியாத சூழ்நிலையில் தான் வளர்ந்துள்ளார் மஞ்சுளா. தேனீ வளர்ப்பு முறையில் இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள மஞ்சுளாவின் வெற்றிக்கு பக்கப்பலமாக இருப்பவர் அவரின் கணவர் பார்த்திபன். இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் நடத்துனராக பணிப்புரிந்து வருகிறார். ஓய்வு நேரத்தில் தனது மனைவிக்கு உதவிக்கரமாக தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பார்த்திபனும் விவசாய குடும்பப் பின்னணியினை கொண்டவர். சிறுவயது முதலே தேனீ வளர்ப்பின் மீது மஞ்சுளா- பார்த்திபன் தம்பதியினருக்கு ஆர்வம் இருந்த நிலையில், தற்போது தன்னிடமுள்ள 5 ஏக்கரில் விவசாயம் பணிகளை மேற்கொள்வதுடன், தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
2 பெட்டியில் ஆரம்பித்த தேனீ வளர்ப்பு:
2007- ஆம் ஆண்டு வெறும் 2 பெட்டியில் தேனீ வளர்ப்பு தொடங்கிய மஞ்சுளா- பார்த்திபன் தம்பதியினர் கிட்டத்தட்ட 800 பெட்டிகள் வரை தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். போதிய நேரமின்மை, கால நிலை மாற்றம், பராமரிப்பு பணிகளில் உள்ள சிரமம் போன்றவற்றினால் தற்போது 550 பெட்டிகளில் தேனீ வளர்த்து வருகின்றனர்.
2008 ஆம் ஆண்டு முதல் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் மஞ்சுளா தம்பதியினர், தற்போது ஏறத்தாழ 39 வகையான பொருட்களை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.
வாழை முதல் வெங்காயம் வரை சாகுபடி:
நேந்திரன் வாழை, கதலி வாழை, தேன் வாழை என பல்வேறு வாழை ரகங்கள் பயிரிட்டுள்ள நிலையில் ஒன்றரை ஏக்கரில் ஆமணக்கு பயிரும், ஒரு ஏக்கரில் நிலக்கடலையும், 2 சென்ட் பரப்பளவில் வெங்காய பயிர், மற்றும் வீட்டிற்கு தேவைப்படும் சில காய்கறி வகைகளையும் தன் நிலத்தில் மஞ்சுளா- பார்த்திபன் தம்பதியினர் பயிரிட்டுள்ளனர். இதுப்போக புதிய முயற்சியாக 25 சென்ட் பரப்பளவில் திராட்சை சாகுபடியும் மேற்கொண்டுள்ளார்கள்.
Read also: ஒருங்கிணைந்த பண்ணை முறையில் அமர்களப்படுத்தும் அரியலூர் அசோக்குமார்!
தேனீ வளர்ப்பில் பலரும் செய்யும் தப்பு இதுதான்!
” தேனீ வளர்ப்பில் சில சமயம் எதிர்ப்பார்த்த வருமானம் கிடைக்காமல் மனதளவில் தொய்வு ஏற்படும். இது இயல்பான ஒன்று தான், இந்த இடத்தில் தான் பலர் எப்படியாவது வருமானம் பார்க்க வேண்டும் என சொதப்பி விடுகிறார்கள். முதலில், ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள்- தேனீ வளர்ப்பை பாதிக்கும் காரணிகளை கண்டறியுங்கள்" என்றார் பார்த்திபன்.
”அதற்கான தீர்வுகளுக்கு உரிய வேளாண் நிலையம் மற்றும் அரசு அலுவலக அதிகாரிகள் அல்லது அனுபவமிக்க நபர்களுடன் கலந்தலோசித்து பெறும் ஆலோசனைகளை தொழில் நுட்ப ரீதியில் களத்தில் செயல்படுத்துங்கள்” என தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு தனது அனுபவத்திலிருந்தும் பார்த்திபன் சில தகவல்களை பகிர்ந்தார்.
தேனீ வளர்ப்பிலுள்ள பிரச்சினைகள்:
” தேனீ வளர்ப்பில் இன்றளவும் பெரிய பிரச்சினையாக எங்களுக்கு இருப்பது Wax moth (மெழுகு அந்திப் பூச்சி) தாக்குதல் தான். இருந்தாலும், பூச்சி தாக்குதலை கையாளும் முறையில் மற்ற தேனீ வளர்ப்பு நபர்களுடன் ஒப்பிடுகையில் எங்களது நடைமுறையில் பலன் அதிகமாகவே உள்ளது. தேனீக்களை இயற்கையாகவே வாழும் வகையில் தான் நாங்கள் பெட்டிகளை அமைத்திருக்கிறோம். தேனீ வளர்ப்பு மட்டுமில்லாமல், எதுவாக இருந்தாலும் சரி. அதோட வாழ்வியல் முறையை நமக்கு தகுந்தாற் போல் மாற்றிக்கொள்ளாமல் அதன் போக்கிலே விடும் பட்சத்தில் தான் நாம் தொழில் முறையாக வெற்றிப் பெற முடியும்” என தெரிவித்தார்.
” வெறும் 6,000 ரூபாயில் ஆரம்பித்த தேனீ வளர்ப்பில், இன்று சராசரியாக நாளொன்றுக்கு 1000 ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் வகையில் வளர்ந்து இருக்கிறோம். கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் தேனீ வளர்ப்பு மிகவும் எளிமையானது. ஒன்றே ஒன்று அதனை தொழில் நுட்ப முறையில் அணுகவேண்டியதும் அவசியம்” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
மஞ்சுளா- பார்த்திபன் தம்பதியினர் மேற்கொள்ளும் மதிப்பு கூட்டல் செயல்முறை மற்றும் தேனீ வளர்ப்புக்கு, ஈரோடு மாவட்டம் KVK சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேனில் இருக்கக்கூடிய ஆரோக்கிய நலன் மற்றும் மருத்துவக் குணங்களை உணர்ந்து, அரசாங்கமே தேனை நேரடியாக கொள்முதல் செய்து, ரேசன் கடை மூலமாகவோ, அங்கன்வாடி மையம் மூலமாகவோ விற்பனை செய்யும் பட்சத்தில் தேன் உற்பத்தியில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அரசுக்கு கோரிக்கை ஒன்றினையும் பார்த்திபன் முன்வைத்துள்ளார்.
Read also:
விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!
Share your comments