விவசாயிகளின் உபரி வருமானத்திற்கும், சமூக பாதுகாப்பிற்கும் இயற்கை விவசாயமே சிறந்தது என இயற்கை விவசாயி நிர்மலா வலியுறுத்தியுள்ளார்.
கிருஷி ஜாக்ரன் பத்ரிகையின் சார்பில் மாதம் தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண் விவசாயிகள் பங்கேற்றும் ''Women Power in Farmer The Brand'' என்ற நிகழ்ச்சி ஃபேஸ்புக் பக்கம் மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஏப்ரல் 11ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.
5பெண் விவசாயிகள் (Five Lady Farmers)
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த பெண் விவசாயிகள் கலந்துகொண்டுத் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதில், தமிழகத்தின் சார்பில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நிர்மலா கலந்துகொண்டு பேசினார்.
20 ஆண்டுகளாக (For 20 years)
அப்போது அவர் கூறுகையில், எனது தாத்தா காலம் முதல் சுமார் 20 ஆண்டுகளாகப் பரம்பரையாக இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். கரும்பு, மஞ்சள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்டவற்றையும், பாரம்பரிய ரக அரிசிகளான கிச்சடிசம்பா,மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி ஆகியவற்றையும் சாகுபடி செய்கிறோம். இத்துடன் வீட்டிற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றையும் விளைவிக்கிறோம்.
ஆரோக்கியமான சமுதாயம் (Healthy Society)
இயற்கை விவசாயம்தான் நம் உடல் நலத்திற்கும், ஆரோக்கியமான சமுதாயத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுக்கும். எனவே இதனை நாங்கள் கடைப்பிடிக்கிறோம்.
களை மேலாண்மை(Pest Control)
இயற்கை விவசாயத்தைப் பொருத்தவரை, களைமேலாண்மைதான் மிகவும் சவாலான பணி. இதனை சமாளிக்க நாங்கள் பல யுக்திகளைக் கையாள்கிறோம். வாழையில் களை மேலாண்மைக்கு உளுந்து பயிரிடுகிறோம். மஞ்சளுக்கு ஊடுபயிராக ஆமணக்கும், கருப்புக்கு ஊடுபயிராக சிறுதானியங்களையும் விளைவிக்கிறோம். இதைத்தவிர சூடோமோனாஸ், டிகம்போஸ்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறோம்.
KVKவில் பயிற்சி (KVK Training)
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மயிராடா KVKவில் (வேளாண் அறிவியல் மையம்) விவசாயப் பொருட்களை எப்படி மதிப்புக்கூட்டுப்பொருட்களாக மாற்றுவது என்பது குறித்த பயிற்சியை நான் பெற்றுள்ளேன்.
TNAUவில் பயிற்சி
இதேபோல் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்களை எவ்வாறு மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றுவது குறித்தும் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
முளைகட்டிய சத்துமாவு (Sprouted Healthmix)
இவற்றில் கிடைத்த சில நுணுக்கங்களைக் கொண்டு எங்கள் நிலத்தில் விளையும் சிறுதானியங்களை முளைகட்டி, முளைகட்டிய சத்துமாவு தயாரித்து விற்பனை செய்கிறேன். இதனை தாய் சேய் என்ற எங்கள் பிராண்டு (Brand)பெயரில் விற்பனை செய்கிறேன். இதில் ராகி கம்பு, திணை, கோதுமை, பச்சைப்பயறு ஆகியவற்றுடன் பாதாம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட 13 பொருட்களைச் சேர்ந்து எங்கள் சத்துமாவு தயாரிக்கப்படுகிறது.
அனைவருக்கும் ஏற்றது (Suitable for everyone)
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வாங்கிப் பருகலாம். இதில் Anti-oxidents, கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது. மேலும் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. எங்கள் சத்துமாவை, நாட்டுச்சர்க்கரை மற்றும் பாலுடன் சேர்த்துக் கூழாகத் தயாரித்துப் பருகலாம். அதேபோல், உப்பு மற்றும் மோர் சேர்த்தும் சாப்பிடலாம்.
மசாலா பொடிகள் (Spice powders)
இதைத்தவிர சாம்பார் பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலாப் பொடிகளும் விற்பனை செய்கிறோம். எங்கள் மசாலாப் பொடிகளில் மிளகாயைக் குறைத்துக்கொண்டு, மிளகு, பூண்டு உள்ளிட்டவை அதிகம் சேர்க்கப்படுவதால், சுவை தனித்தன்மை படைத்ததாகவும் இருக்கும். உடல் நலத்திற்கும் சிறந்தது.
கால்நடைகள் (Cattle)
விவசாயத்துடன் ஆடு, மாடு உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், கோழிகளையும் வளர்த்து வருகிறோம். அதன் மூலம் உபரி வருமானம் கிடைக்கிறது. மேலும் இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற உரங்களும் கால்நடைகளின் சாணம், நெய், தயிர் ஆகியவற்றில் இருந்து தயாரித்துக்கொள்கிறோம்.
நிரந்தர வருமானம் (Permanent income)
இதைத்தவிர, வாழைத், தென்னை போன்ற சில ஆண்டுகளில் பலன் அளிக்கக்கூடிய மரங்களையும் வளர்ப்பதால், நிரந்தர வருமானம் ஈட்ட முடிகிறது.
இவ்வாறு நிர்மலா கூறினார்.
மேலும் படிக்க...
அடிபம்பு மூலம் தண்ணீர் பாய்ச்சி இயற்கை விவசாயத்தில் அசத்தும் NRI தமிழச்சி!
பால் விற்று ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி!
நெற்கதிரில் கூடு கட்டிய குருவி! கூட்டைக் கலைக்காமல் அறுவடை செய்த விவசாயி!
Share your comments