1. வெற்றிக் கதைகள்

இயற்கை விவசாயி

KJ Staff
KJ Staff

எங்களுடையது பரம்பரை விவசாய குடும்பம். அப்பா வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டே விவசாயமும் பார்த்தார். வீட்டில் மூன்று பெண்கள். நான் ஒரே பையன் பனிரெண்டாவது வரைக்கும் படித்தேன். பிறகு அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்க்க வந்துவிட்டேன். தொடக்கத்தில் இரசாயன உரங்களைப் போட்டு விவசாயம் செய்து வந்தேன். நல்ல விளைச்சல் கிடைத்தது. நாளடைவில் விளைச்சல் குறைந்து கொண்டே வந்தது. அத்தகைய விளைச்சல் குறைவை சரி செய்வதற்கு அதிக அளவில் இரசாயன உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் எற்பட்டது. அதனால் சாகுபடி செலவு அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற வருமானம் அதிகரிக்கவில்லை.

 

இந்த சூழ்நிலையில் இங்கு நடந்த “கபிலர் விழாவில்” கலந்து கொண்டேன். அங்கு வந்திருந்த நம்மாழ்வார், ரசாயன உரங்களைக் கொட்டி நிலம் கெட்டு போச்சு. அதில் விளையும் உணவும் விஷமாகத்தான் இருக்கிறது என்று விரிவாக பேசினார். அதைக் கேட்ட பிறகு இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.

எனக்கு மொத்தம் 30 ஏக்கர் நிலம் இருக்கிறது. 15 ஏக்கரில் மட்டும் தான் விவசாயம் செய்கிறேன். நான்கு கிணறுகள் இருப்பதால் தண்ணீர் பிரச்சனை இல்லை. ஆரம்பத்தில் ஆடுதுறை நெல் ரகங்களைத்தான் சாகுபடி செய்தேன். பிறகு ஒன்பது வருடமாக சீராக சம்பா, வெள்ளைப் பொன்னி, சேலம் சன்னா, ஆத்தூர் கிச்சடி, மாப்பிள்ளை சம்பா போன்ற நாட்டு நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

ஒவ்வொரு  ரகத்திற்கும்  ஒவ்வொரு குணம்.

வெள்ளைப் பொன்னி நெல் ரகத்தின் வயது 145 நாட்கள். ஆத்தூர் கிச்சடி, சேலம் சன்னா மற்றும் சீராகச் சம்பா ஆகியவற்றின் வயது 135 நாட்கள். மாப்பிள்ளை சம்பா 160 நாட்கள். ஆத்தூர் கிச்சடி ரகம் சன்னமாகவும், சுவையாகவும் இருக்கும். இது சாதத்திற்கு ஏற்றது. சீராகச் சம்பா வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும். பிரியாணி போன்ற உணவு வகைகள் சமைப்பதற்கு ஏற்றது. மாப்பிள்ளை சம்பா உடலுக்கு வலிமை கொடுப்பதோடு, சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும் குணம் கொண்டது.

வளர்ச்சியைக் கூட்டும் இயற்கை உரங்கள்

நாற்று தயாராகும் போதே நடவு நிலத்தையும் தயார் செய்ய வேண்டும். ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு சேற்று உழவு செய்து நிலத்தை சமப் படுத்திக்கொள்ள வேண்டும். செறிவூட்டப்பட்ட 500 கிலோ மண்புழு உரத்தைப் போட வேண்டும். தொடர்ந்து வழக்கமான முறையில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக பாசனம் செய்ய வேண்டும். 20-ஆம் நாளில் களை எடுக்க வேண்டும். 25 ஆம் நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பஞ்சகாவ்யா, மீன் அமிலம், பூச்சி விரட்டி என மாற்றி மாற்றி தெளிக்க வேண்டும். அறுவடை வரை தொடர்ந்து இவ்வாறு தெளிக்க வேண்டும். இதையும் மீறி பூச்சி தாக்குதல் இருந்தால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கவும். பெரும்பாலும் பாரம்பரிய ரகங்களில் பூச்சிகள் வருவதில்லை.

 

ஒரு போக வருமானம்

நெல்லை மதிப்பு கூட்டி அரிசியாக விற்பனை செய்வதாக கூறினார். ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு விலை.

வெள்ளைப் பொன்னி - 14 ,000 கிலோ அரிசி X 45 ரூபாய். மொத்தம் =

 6,30,000 ரூபாய்.

சீராகச் சம்பா    - 900 கிலோ அரிசி X 70 ரூபாய். மொத்தம் = 63 ,000 ரூபாய்.

ஆத்தூர் கிச்சடி, சேலம் சன்னா - 1080 கிலோ அரிசி X 50 ரூபாய். மொத்தம்

 = 54 ,000 ரூபாய்.

மாப்பிள்ளை சம்பா - 450 கிலோ அரிசி X 60 ரூபாய். மொத்தம் = 27000 ரூபாய்

ஆக மொத்தம் 15 ஏக்கரில் 7 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். 15 ஏக்கருக்கான செலவு 3 லட்சம். இதை கழித்தால் 4 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். மதிப்பு கூட்டி அரிசியாக விற்பனை செய்தால் தான் இந்த லாபம். இதையே நான் நேரடியாக விற்றால் லாபம் குறையும். அதேபோல் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகளை பயன் படுத்தினால் சாகுபடி செலவு கூடும். அதனால் இலாபம் இன்னும் குறையும் என்றார்.

தொடர்புக்கு : அருள்மொழி, 9487381043.

English Summary: Natural farmer Published on: 17 September 2018, 10:53 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub