பிற துறைகளைப் போல விவசாயத்திலும் பெண்கள் கால்பதிக்க வேண்டுமானால், அதனை தங்கள் வாழ்க்கையாகப் பாவித்தாலே போதும் என ஆலோசனை கூறியுள்ளார் சாதனை பெண் விவசாயி ஜெயலட்சுமி.
கிருஷி ஜாக்ரன் பத்ரிகையின் சார்பில் மாதம் தோறும் 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்விவசாயிகள் பங்கேற்றும் ''Farmer the Brand'' என்ற நிகழ்ச்சி ஃபேஸ்புக் பக்கம் மூலம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நவம்பர் 8ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.
6 பெண் விசாயிகள் (Six Lady Farmers)
மகராஷ்டிராவில் இருந்து ஜோதியும், ராஜஸ்தானைச் சேர்ந்த சந்தோஷ் தேவியும், உத்தர்காண்டில் இருந்து பிரீத்தி பன்டாரியும், கேரளாவைச் சேர்ந்த ஆன்ஸி மாத்யூஸ்ஸூயும், பஞ்சாப்பில் இருந்த பிரியங்கா குப்தாவும், தமிழகத்தின் சார்பில் ஜெயலட்சுமியும் கலந்துகொண்டு தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் கலந்துகொண்ட தமிழக விவசாயி ஜெயலட்சுமி, விவசாயத்திற்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டத்தின் பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மையில் சம்பங்கி சாகுபடியில் அதிக மகசூல் ஈட்டி சாதனை படைத்தவர் ஆவார்.
இவர் பேசுகையில், எங்கள் நிலத்தில் சுமார், முக்கால் ஏக்கரில் பாரம்பரிய நெல் வகைகளான, சீரக சம்பா, தூய மல்லி போன்றவற்றை பயிரிட்டிருப்பதாகவும், பலதரமான நாட்டுமரங்கள் உதாரணமாக அத்தி, மா, கொய்யா, நெல்லி, சீதாப்பழ மரங்களையும், நடுவில் கீரை, பூசணி, சுரை, புடலை போன்ற காய்கறிகளையும் சாகுபடி செய்து வருகிறோம்.
முழுக்க முழுக்க இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் எனது அடுத்த முயற்சி பலபயிர் சாகுபடி. மொத்த நிலத்தையும் 36க்கு 36 அடி என்ற அளவில் 5 அடுக்கு விளைநிலமாகப் பிரித்து, பெருமரங்கள், சிறு மரங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சாகுபடி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.வேலியின் ஓரங்களில் உயிர்வேலிக்காக (Life line) சதுரக்கள்ளி, கோபுரக்கள்ளி தாவரங்களையும் கொடிக்காய், இலந்தை ஆகியவற்றையும் நட்டுள்ளோம்.
விவசாயத்தை ஒருபோதும் வேலையாகவோ, வருமானம் தரும் தொழிலாகவோப் பார்த்ததில்லை. அதற்கு மாறாக வாழ்வியலாகப் பார்க்கும்போது எந்தவித ஏமாற்றத்திற்கும் இடமிருக்காது என்று அடித்துக்கூறுகிறார் .
படிக்கவைக்கும்போது அதிக சம்பாதியம்கிடைக்குமா என்று எதிர்பார்ப்பது போல, விவசாயத்திலும், அதிக விளைச்சல், அதிக லாபம் என்ற எதிர்பார்ப்பில் அளவுக்கு அதிகமான உரங்களைப் போட்டுவிட்டதால், நிலம் மலடாக மாறிவிட்டது.
எனவே இந்த நிலை மாறவேண்டுமென்றால், பணத்தை எதிர்பார்த்து விவசாயத்தில் இறங்காமல், வாழ்வே விவசாயமாக , விவசாயமே வாழ்வாக மாற்றிக்கொண்டு கண்ணும் கருத்துமாக கடின உழைப்பை உடல் முதலீடாகப் போட்டால் வெற்றி நிச்சயம் என சக பெண் விவசாயிகளுக்கு ஜெயலட்சுமி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும் படிக்க...
குட்பை சொல்லும் குப்பைகள்- உரமாகும் அதிசயம்!
அங்கக வேளாண்மையில் பயிர்களின் காதலன் எது தெரியுமா?
உடல் சூடு பிரச்னை இவைகளுக்கும் உண்டு-தடுக்கும் வழிகள் !
Share your comments