நாட்டின் முதுகெலும்பு என கருதப்பட்டாலும், அழிந்து வரும் தொழிலாக இருக்கிறது இன்றைய விவசாயம், இதற்கு மாறாக பல விவசாய தொழில்களை ஒன்றுசேர்த்து இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து லாபம் பார்த்து வருகிறார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பார்த்தசாரதி (Parthasarathy) அவர்கள்.
ஆரணியை அடுத்த ஆதணூர் கிரமத்தில் வசித்து வரும் பார்த்தசாரதி, ''ASN சாமி'' என்ற பெயரில் 4.5 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார்.
கிருஷி ஜாக்ரன் தமிழ்நாடு நடத்தும் Farmer the Brand-ன் FaceBook நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஒருங்கிணைந்த பண்ணை குறித்து பேசினார். அப்போது, நல்ல திட்டமிடல் இருந்தால் மட்டுமே ஒருங்கிணைந்த பண்ணையில் லாபம் பார்க்க முடியும் என்றார்.
திட்டமிடலின் அவசியம்
ஒருங்கிணைந்த பண்ணையைப் (Intergrated farming) பொருத்தவரை தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், ஆறு மாத வருமானம், ஆண்டு வருமானம் என்று திட்டமிட்டு அதன் படி ஒருங்கிணைத்த பண்ணையை அமைக்க வேண்டும் என்றார்.
பால், முட்டை, பழ வகைகள் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1000 வரை தின வருமானம் கிடைக்கும் என்றும், அதேபோல், மாதம் 30,000 ரூபாய் வரை நிலையான வருமானம் இருக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பார்த்தசாரதி.
ஒருங்கிணைந்த பண்ணை சிறப்புகள்
தனது ஒருங்கிணைந்த பண்ணையில் ஆடு, மாடு, கோழி, குறுகிய கால பழ மரங்களான சாத்துக்குடி, சப்போட்டா, எலுமிச்சை, மாதுளை, கொய்யா உள்ளிட்டவையும், நீண்ட கால லாபம் தரும் மரங்களான தேக்கு, மகோகனி, குமிழ், வேங்கை உள்ளிட்டவைகளும் வளர்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இது மட்டுமின்றி பண்ணை குட்டை அமைத்து அதில் நாட்டு ரக மீன்களான ஜிலேபி, விரால், கட்லா, லோகு ஆகிய இனங்களை வளர்த்து வருகிறார். இதில் ஆண்டுக்கு இரண்டு முறை மீன்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினார்.
தாய்ப்பாலுக்கு நிகரான இன்பம் தேங்காய் பால் வெர்ஜின் எண்ணெய்! விற்பனையில் அசத்தும் புதுக்கோட்டைக்காரர்!
இயற்கை முறையில் விவசாயம்
தனது ஒருங்கிணைந்த பண்ணை முழுவதும் இயற்கை முறையில் (Organic Farming) மட்டுமே பராமரிக்கப்படுவதாக குறிப்பிடும் பார்த்தசாரதி. இதற்காக தமிழ்நாடு கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அங்கக சாற்று அளித்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஊடு பயிர்களுக்கு பூண்டு, மிளகாய், இஞ்சி கரைசலும் பழ மரங்களுக்கு அமீனோ மீனமிலம், பஞ்சகவ்வியம் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சிறிதும் ரசாயன கலப்பு இல்லை என்றும் பெருமையுடன் கூறினார். இதேபோல், கால்நடைகளுக்கும் அசோலா, வேலி மசால், உள்ளிட்டவற்றை மட்டுமே தீவனமாக வழங்கி வருவதாகவும் கூறினார்.
பண்ணையிலேயே விற்பனை
தனது பண்ணையில் விளைவிக்கப்படும் காய், கனி மற்றும் பழ வகைகளும், கால்நடைகளும் சில்லறை முறையிலும், மொத்த விலையிலும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் தனது பண்ணையிலே செய்து வருகிறார். தனது கிராமத்தைச் சுற்றியுள்ள 15 கிராம மக்கள் தனது பண்ணைக்கே வந்து பொருட்களை வாங்கி செல்வதாகவும், இதனால் மக்களுக்குத் தனது ஒருங்கிணைந்த பண்ணை மீதான நம்பகதன்மை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது என்கிறார்.
விலங்கு & பூச்சிகளிடமிருந்து பயிர்களைக் காக்கும் "ஹெர்போலிவ் பிளஸ்"!!
விவசாயிகளுக்கு அறிவுரை
தனது ஒருங்கிணைந்த பண்ணை வெற்றி பயணத்தை விவரிக்கும் வேலையில், ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கும் நல்ல வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார் பார்த்தசாரதி.
-
ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க 2 ஏக்கர் நிலம் கூட போதுமானது.
-
பண்ணை துவங்கும் முன் தின வருமானம், மாத வருமானம், ஆண்டு வருமானம் உள்ளிட்டவற்றைத் திட்டமிட்டு அதற்கு ஏற்றார் போல் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்
-
ஆடு, மாடு, கோழிகளைக் கொண்டு ஒருங்கிணைந்த பண்ணையைத் திட்டமிட வேண்டும்
-
மேய்ச்சல் முறையில், திறந்த வெளியில் கோழி வளர்க்கப்பட்டால் தீவன செலவுகளைக் குறைக்க முடியும். தீவன செலவு குறைத்தால் மட்டுமே லாபம் பார்க்க முடியும்
-
வேலி மசால், அசோலா போன்ற இயற்கை முறையில் தீவனத்தைப் பண்ணையிலே செய்துகொள்ள வேண்டும்.
-
பண்ணை குட்டை அமைப்பது ஒருங்கிணைந்த பண்ணைக்கு மிகவும் அவசியத் தேவையாகும்.
-
எல்லாவற்றையும் தாண்டி கடின உழைப்பே ஒருங்கிணைந்த பண்ணையை லாபகரமாகக் கொண்டு செல்ல வழிவகுக்கும்
சுற்றுச்சூழல் மாசுபாடு தவிர்ப்பு
4.5 ஏக்கர் ஒருங்கிணைந்த பண்ணையை தனி ஒரு நபராக பராமரித்து ஆண்டுக்கு 4 லட்சம் வரை லாபம் ஈட்டும் பார்த்தசாரதி, தனது ஒருங்கிணைந்த பண்ணையில் இருக்கும் 2000-க்கும் மேற்பட்ட மரங்கள் மூலம் காற்று மாசுபாட்டினை குறைத்து புவி வெப்பமயமாதலை தவிர்க்க தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்து வருவதாக தெரிவித்தார்.
தொடர்புக்கு ASN சாமி ஒருங்கிணைந்த பண்ணை - 94423 11505, 8667734467
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் RNR ரக அரிசி- ஏரோ ஃபுட் நிறுவனத்தின் சிறப்புத் தயாரிப்பு
Share your comments