விவசாய பண்ணை வைத்திருப்பவர்கள் சொல்லும் பெரும்பான்மையான குற்றச்சாட்டு என்னவென்றால், 100 நாள் திட்டத்திற்கு செல்லும் பணியாளர்களால் தங்களது நிலத்தில் வேலை பார்க்க விவசாய கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பது தான். அதே 100 நாள் திட்ட பணியாளர்களை கொண்டு பொறம்போக்கு நிலத்தை விவசாய நிலமாக மாற்றி காய்கறி, பழ வகைகளை பயிரிட்டு அதன் மூலம் ஊராட்சிக்கு வருமானத்தை ஈட்டுகின்றனர் என்கிற செய்தியை கேட்டப்போது வியப்பில் ஆழ்ந்தோம்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் அமைந்துள்ள தட்டட்டி ஊராட்சியில் தான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை கொண்டு விவசாயம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, மியாவாக்கி காடுகள் பராமரிப்பு என பல்வேறு திட்டப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட பணிகள் மூலம் ஊராட்சிக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தட்டட்டி ஊராட்சியின் செயல்பாடுகளை குறித்து அறிந்துக் கொள்வதற்காக கிரிஷி ஜாக்ரன் குழு நேரடியாக தட்டட்டி ஊராட்சிக்கு சென்றோம்.
பொறம்போக்கு நிலத்தில் விவசாயம்:
தட்டட்டி ஊராட்சியின் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் இராஜேந்திரன் அவர்களை தொடர்புக் கொண்டு விவசாய பணிகள் குறித்து கலந்துரையாடினோம். பொறம்போக்கு நிலத்தை விவசாயத்திற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எதனால் வந்தது? என கேட்டதற்கு, “ எங்கள் ஊராட்சியில் நிறைய பொறம்போக்கு நிலம் இருக்கிறது. அதை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தது. அந்த வகையில் இப்போ 1.5 ஏக்கர் நிலத்தில் இரும்பு முள்வேலி அமைத்து, மண்ணின் தன்மையினை மேம்படுத்தி சீனி அவரை, கத்தரி, மிளகாய், கீரை, சுண்டைக்காய், வெங்காயம், தக்காளி உட்பட காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம்."
"குறைந்த விலையில், ஊராட்சி பொது மக்களுக்கு இந்த காய்கறிகளை வழங்கி வருவதோடு, இதன் மூலம் தற்போது மாதத்திற்கு ரூ.5000 வரை ஊராட்சிக்கு வருமானம் கிடைத்து வருகிறது. இந்த வருமானம் முறைப்படி ஊராட்சியில் தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது” என்றார் இராஜேந்திரன்.
ஒருபுறம் காய்கறிகளை பயிரிட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் 8 ஏக்கரில் பழ மரவகைகள், 1 ஏக்கரில் மியாவாக்கி (குறுங்காடு), மண்ணை மேம்படுத்துவதற்காக மண்புழு உரம் தயாரிப்பு, காளான் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் அனைத்தும் 100 நாள் திட்ட பணியாளர்கள் கொண்டு தான் செயல்படுத்தப்படுகிறது.
இதுக்குறித்து இராஜேந்திரன் தெரிவிக்கையில், ”மக்கள் உழைப்பு விவசாய பணிகளில் தற்போது பெருமளவில் குறைந்துவிட்டது. அதனால், எங்க ஊராட்சியில் பலரும் விவசாய பணி மேற்கொள்ள மிஷினுக்கு மாற ஆரம்பிச்சுட்டாங்க. இந்த 100 நாள் திட்ட பணியாளர்களில் நன்றாக வேலை செய்கிற 20 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை வைத்து தான் விவசாய பணிகளை ஊராட்சியின் சார்பில் மேற்கொண்டு வருகிறோம்”.
மியாவாக்கி காடு- 1000 மரங்கள்:
”மண்புழு உரம் தயாரிப்பு இந்த மண்ணின் தன்மையை மேம்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிச்சது தான். அதை தான் உரமாக பயன்படுத்தி வருகிறோம். விவசாய பணி முழுமையாகவும் செயற்கை உரப்பயன்பாடு இல்லாமல் மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் இயங்கி வருகிறோம்."
மியாவாக்கி என்னும் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செம்மரம்,மகாகனி, தேக்கு, சவுக்கு, நீர் மருது, வேங்கை, கருமருது, குமுள் தேக்கு, ரோஸ்வுட் என 10 வகையான சுமார் 1000 மரங்களை வளர்த்து வருகிறோம். இதுக்கான மரக்கன்றுகள் ஊர் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்டது. இதுப்போக, ஊராட்சியிலுள்ள கோயில் பக்கத்தில், கம்மாய் கரையோரம், சாலையோரங்களிலும் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம். இன்னும் கொஞ்ச காலத்துல இதுல இருந்தும் ஊராட்சிக்கு வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும்”.
Read also: பாஜக தேர்தல் அறிக்கை: விவசாயிகளுக்கு மோடியின் கியாரண்டி என்ன?
”8 ஏக்கரில் பழ வகைகளை பயிரிட்டுள்ளோம். கொய்யா, மா, பலா, எலுமிச்சை, வாழை,தென்னைனு இப்போதைக்கு வளர்த்து வருகிறோம். அடுத்த வருஷம் எப்படியும் மா மரத்திலிருந்து வருமானம் பார்க்க ஆரம்பிச்சுடுவோம். இந்த விவசாய பணிகளுக்கு மத்தியில் காளான் வளர்ப்பிலும் இறங்கியிருக்கோம். இப்போது சிப்பிக்காளான் வளர்க்கிறோம், போகப்போக இனி மற்ற காளான் வகைகளையும் வளர்த்து அதன் மூலம் குறைஞ்சது மாதம் 3000 ரூபாய்க்கு மேல வருமானம் பார்க்க திட்டமிட்டு இருக்கிறோம். காளான் வளர்ப்புக்காகவே நம்ம ஊராட்சியிலிருக்கிற மகளிர் சுய உதவிக்குழுவிலிருந்து 2 பேரை பயிற்சிக்கு அனுப்பியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
எதிர்க்காலத்திட்டம் என்ன?
ஊராட்சியின் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதால், உங்களுக்குப் பிறகு வரக்கூடிய ஊராட்சி மன்றத் தலைவரும் இப்பணிகளை வெற்றிகரமாக தொடருவார்கள் என்கிற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என இராஜேந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதற்கு சிரித்த முகத்தோடு, “நிச்சயமாக.. கண்டிப்பாக எனக்கு அடுத்து யாரு வந்தாலும் இதை சிறப்பா கொண்டு போவாங்க. இப்போ இந்த நிலத்திலிருந்து 5-6 கிலோ காய்கறிகளை தான் அறுவடை செஞ்சுட்டு வருகிறோம். அடுத்த வருஷத்துக்குள்ள இந்த நிலத்தை இன்னும் மேம்படுத்தி 50-60 கிலோ காய்கறி அறுவடை செய்யும் வகையில் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறோம். இந்த தோட்டத்துக்காகவே ஊராட்சியில் வாரச் சந்தை உருவாக்கி இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை மூலம், ஊராட்சிக்கு அடுத்த ஆண்டுக்குள் 10-20 ஆயிரம் வரை வருமானம் பார்க்க வழிவகைகளை கண்டறிந்துள்ளோம்.” என்றார்.
100 நாள் திட்டப்பணியாளர்கள் வேலை செய்வதில்லை என பொதுவாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலையில், தட்டட்டி ஊராட்சியில் MGNREGS பணியாளர்களை கொண்டு ஆச்சரியப்படுத்தும் வகையில் வேளாண் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரியான பாதையில் தொடர்ந்து பயணிக்கும் நிலையில் தட்டட்டி ஊராட்சி மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்றால் மிகையல்ல.
Read also:
பயிர்க் காப்பீடு முறையில் மாற்றம்- விவசாயிகளை கவரும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி!
Share your comments