உத்தரகாண்ட் அரசின் காளான் சாகுபடிக்கான அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராக செயல்பட்டு வருபவர் திவ்யா ராவத். இவர் தனது சமூக பணிக்காக தேசிய மற்றும் மாநில அரசின் உயர் விருதுகளை பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கதையை விவரிக்கிறது இந்த கட்டுரை.
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த திவ்யா ராவத், சிறுவயதிலிருந்தே பல சிரமங்களை எதிர்கொண்டார். சமூகப் பணியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை மேற்கொள்வதற்காக உத்தரகாண்டிலிருந்து டெல்லிக்கு வந்தார். அதன் பிறகு, அவருக்கு ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது, அங்கு அவர் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளின் தீர்வுகளை நோக்கி பணியாற்றினார்.
உத்தரகாண்ட் மாநிலம் 2013 ஆம் ஆண்டு ஒரு துயர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது திவ்யா தனது வாழ்வின் பாதையை திசை திருப்ப முடிவெடுத்தார். அதன்படி, திவ்யா உடனடியாக வேலையை விட்டுவிட்டு டேராடூனுக்குத் திரும்பினார். உத்தரகாண்ட் மக்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிப்பதே அவரது குறிக்கோளாக இருந்தது.
டேராடூனில் தான் இந்த காளான் வியாபாரத்தைப் பற்றி அறிந்து அதன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு சொந்தமாக காளான் வளர்ப்பைத் தொடங்கினார். காளான் ஒரு பணப்பயிர் மற்றும் வீட்டிற்குள்ளும் பயிரிடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காளான் வளர்ப்பின் மற்றொரு நன்மை என்னவென்றால், மற்றவற்றை ஒப்பிடும்போது இதற்கு குறைந்த இடமே தேவைப்படுகிறது. "உங்களிடம் ஒரு சிறிய அறை இருந்தால், ஓலைக் கூரையின் கீழ் இருந்தாலும், ஆண்டு முழுவதும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் காளான்களை வளர்க்கலாம்" என்கிறார் திவ்யா ராவத்.
முதலின் திவ்யாவின் முயற்சிகள் மீது நம்பிக்கையில்லாத குடும்பத்தினர் காலம் செல்ல செல்ல திவ்யாவின் செயல்களை கண்டு அவருக்கு நம்பிக்கை அளித்து உதவ முன்வந்தனர். அந்த வகையில் சௌமியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்க காரணமாக குடும்பத்தினர் உதவினர். அவர் அதிக அளவில் காளான்களை வளர்க்கத் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பை அளித்தார். அச்சமயம், காளான்களுக்கான தேவை சந்தையில் அதிகமாக இருந்தது.
"நான் எப்போதும் மலையகத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன், மேலும் இளைஞர்கள் ஏன் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து வெளியேறுவதைத் தடுக்க முயற்சிக்கிறேன்" என்று திவ்யா கூறினார். "பின்னர் மாநில தோட்டக்கலைத் துறையிலிருந்து காளான் வளர்ப்பில் பயிற்சி எடுத்து, தாய்லாந்து, மலேசியா, வியட்டம், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று சிறந்த காளான் பயிர்களை சாகுபடி செய்வது குறித்த தகவல்களைப் பெற்றேன்" என்று ராவத் கூறினார்.
திவ்யா ராவத் உத்தரகாண்ட் அரசின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடர் (காளான் சாகுபடியின்) ஆவார். அவர் காளான்களை வளர்ப்பதிலும் சந்தைப்படுத்துவதிலும் ஒரு இலாபகரமான நிறுவனத்தை நிறுவியது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் உள்ள மக்களுக்கு காளான் வளர்ப்பில் பயிற்சி அளித்து பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைவதற்கான வழிமுறையாக உள்ளது, இது கிராமங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை ஓரளவு குறைக்கிறது.
திவ்யா ராவத் தேசிய மற்றும் மாநில அளவில் அவரது பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திவ்யாவிற்கு மதிப்புமிக்க ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதினை வழங்கி கௌரவித்தார். 2017 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் அரசின் தோட்டக்கலைத் துறை அவருக்கு ‘உத்யன் பண்டிட் புரஸ்கார்’ விருதை வழங்கியது. அவர் ஜி.பி.பந்த் வேளாண் பல்கலைக்கழகத்தின் குழுவில் உள்ளார் மற்றும் ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ஆலோசகராகவும் உள்ளார். இன்றளவும் பல்வேறு நபர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கி அவர்களை தொழில் முனைவராக மாற்றும் நோக்கில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார் திவ்யா ராவத்.
மேலும் காண்க:
யாருமே மதிக்கல..வேலையும் தரல- ஒன்றிணைந்து சாதித்த திருநங்கைகள்!
தண்ணீர் பாய்ச்சுற கவலை இனி வேண்டாம்.. கல்லூரி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு
Share your comments