பெரும்பாலான இல்லங்களில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாய், பூனை, பறவைகள் என வளர்ப்பார்கள். முயல்களை சிலர் வளர்க்கின்றனர், இருப்பினும் முயல்களை இறைச்சிக்காகவும் பயன் படுத்துவதால் செல்ல பிராணி என்று கூற இயலாது.
நாம் ஏதேனும் செல்லப் பிராணியை வளர்க்கும் பொழுது அதன் உடன் ஒரு தோழமை உணர்வு வளரும். நம் ஒரு பூனையோ அல்லது பறவையையோ வளர்க்கும் பொழுது உங்களுக்கு இடையே ஒரு பரஸ்பர புரிதல் உணர்வு வளருவதுடன் மன அழுத்தம் குறையும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்டுள்ளது.
உலகம் முழுவதும் செல்லப்பிராணிகள் என்றால் முதல் இடத்தைப் பிடிப்பது நாயாகத் தான் இருக்கும். செல்ல பிராணி என்பதை விட நமக்கு ஒரு நல்ல நண்பன், பாதுகாவலன் என கூறலாம். ‘சமூக அந்தஸ்துக்காக, குழந்தைகளுக்காக என்பது போன்ற காரணங்களுக்காக நாய் வளர்க்காமல், உண்மையில் செல்லப்பிராணி வளர்ப்பில் பிரியமும், ஆர்வமும் இருப்பவர்கள் மட்டுமே நாய் வளர்ப்பது அனைவருக்கும் நன்று.
நகர்ப்பகுதிகளில் வாழுகின்ற மக்கள் பொதுவாக பொழுது போக்கிற்கெனச் சிலரும் பாதுகாப்பு கருதியும், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உற்ற நண்பனாகவும் மற்றும் சிலரால் தங்களின் பகட்டான வாழ்க்கை நிலையை வெளிப்படுத்தும் அம்சமாகவும் நாய் வளர்த்து வருகிறது. கிராமப்புறங்களில் நாய்களை வயல் புறங்களிலும் வீடுகளிலும் பாதுகாப்புக்கென வளர்க்கின்றனர். விற்பனை வாய்ப்புக்கருதி வியாபார நோக்கில் நாய்களை வளர்பவர்கள் உண்டு.
உலகெங்கிலும் நாய்கள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒரே போல் அல்லாமல் தோற்றத்தில் பல்வகை வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. தோற்றம், எடை, நிறம், உயரம் மற்றும நடத்தை ஆகினவற்றை ஒப்பீட்டளவில் ஒரே பண்புகள் கொண்டவையாக இருக்கும்படி அமையப்பெற்றவற்றைத் தனித்தனி நாய் இனங்களாக வகைப்படுத்தியுள்ளனர். எந்த இனத்தைச் சேர்ந்தவை எனச் சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான “கென்னல் கிளப்” அமைப்பானது 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பல்வேறு வகைகளான நாய் இனங்கள் இருந்தாலும் அவற்றினை பின்வரும் ஐந்து காரணங்களுக்காக வருகின்றனர். எனவே அவைகளை பயன்பாடு அறிந்து இவ்வாறு அழைக்கிறோம்.
- தோழமை நாய்கள்
- பாதுகாவல் நாய்கள்
- வேட்டை நாய்கள்
- பணி நாய்கள்
- வேட்டை மீட்டெடுப்பு நாய்கள்
நாய் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை
- நமது தகுதியினை வெளிப்படுத்தும் விதமாக, வெளிநாட்டு நாய் மோகத்தில், வாயில்லா ஒரு ஜீவனை தான் வாழும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலுக்குக் கொண்டு வந்து வளர்ப்பதை தவிர்த்து நம் நாட்டு இனங்களை வளர்ப்பது நல்லது.
- நம்இருக்கும் வீட்டுச் சூழலுக்கு ஏற்ப நாய் வாங்க வேண்டும். பொதுவாக பெரிய வீடு அல்லது தனி வீடுகளில் பாக்ஸர், டாபர்மேன், ஜெர்மென் ஷப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்களை வளர்க்கலாம். இவை அதிகமான உணவை உட்கொள்வதால் செரிமானத்திற்காக ஓடுவது, நடப்பது, விளையாடுவது என்று பயிற்சிகளை கொடுக்க வேண்டும். எனவே பெரிய சுற்றுப்புறம் அவசியம்.
- சருமங்களில் நோய் தொற்று வராமல் இருக்க சூரிய ஒளி அவசியம்என்பதால், அவற்றை காலை, மாலை இரு வேளைகள் வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.
- அடுக்கு மாடி குடியிருப்புகளில் பெரிய நாய்களைத் தவிர்த்து, ‘ஸ்மால் ப்ரீட்ஸ்’ என்ற அழைக்கப்படும் பக், பொமரேனியன் போன்றவற்றை வளர்க்கலாம். இவை வளர குறைந்த அளவிலான இடம் போதுமானது. மேலும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தொந்தரவாக இருக்காது.
- ‘ஸ்மால் ப்ரீட்ஸ்’ வளர்க்கும் போது அதிக சூரிய ஒளி தேவைப்படாத இவற்றை, ஒரு முறை வாக்கிங் அழைத்துச் சென்றால் போதுமானது.
தவறாமல் மாதத்துக்கு ஒருமுறை பூச்சி மருந்து கொடுப்பதுடன், தவறாமல் தடுப்பூசிகளைப் போட வேண்டும்.
செல்ல குட்டிகளை பராமரிக்க இதோ சூப்பர் டிப்ஸ்
- நாய்க் குட்டிகளை வீட்டில் வளர்க்கும் போது எப்பொழுதும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். இது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவசியமானது. மூடி மற்றும் தோல் பகுதியை எப்பொழுதும் கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.
- அதிக அழுக்கு படகூடிய இடங்களான வயிற்றுப்பகுதி மற்றும் பின்கால் போன்ற இடங்களில் நன்கு தேய்த்துக் குளிக்க வைக்க வேண்டும்.
- சிறிய குட்டியாக இருக்கும்போது மெல்லிய துணி மூலம் துடைத்து எடுக்க வேண்டும்.
- குட்டிகளை அடிக்கடி குளிக்க வைப்பதால் தோலில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியின் அளவு குறைந்து தோல் மற்றும் முடி வறண்டு விடும்.
- மழை / பனி காலங்களில் வாரத்திற்கு ஒருமுறையும், கோடைக்காலத்தில் வாரத்திற்கு இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும்.
- தோலில் பொடுகு, பேன், உண்ணி போன்றவை எல்லாம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் அதன் ஆரோக்கியத்தை பாதிப்பதாகும்.
- செல்லப்பிராணிகளுக்கென இருக்கும் மருத்துவக் குணம் கொண்ட மற்றும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் ஷாம்புகளை உபயோகிக்க வேண்டும்.
- அடிக்கடி நகங்களை வெட்டி விட வேண்டும். செல்லப் பிராணிகளுக்கான நகம் வெட்டி கடைகளிலோ கால்நடை மருத்துவரிடமோ கிடைக்கும். அவற்றைக் கொண்டு நகம் வெட்டும்போது நகங்கள் சேதமுறாமல், வலி ஏற்படாமல், இரத்தக் காயம் ஏற்படாமல் இருக்கும்.
- மாதமொருமுறை காதுகளை நன்றாக சுத்தம் செய்வது சிறந்தது. பஞ்சு அல்லது மெல்லிய துணிகளைக் கொண்டு காது சுத்தம் செய்ய வேண்டும்.
- நீள முடிகளை கொண்ட நாய்களின் காதுகளை அடிக்கடிப் பரிசோதனை செய்ய வேண்டும். சில நேரங்களில் முடிகள் சிக்குப் பிடித்துக் காதுகளின் துவாரத்தை அடைத்து காது வீக்கத்தை ஏற்படுத்தும்.
- நீண்ட முடியைக் கொண்ட நாய்களுக்கு கண்களில் முடி விழுந்து உறுத்தும், எனவே சிறப்புக் கவனம் கொண்டு பாதுகாக்க வேண்டும். போரிக் அமிலக் கரைசல் (அ) கண்களைச் சுத்திகரிக்கும் திரவங்களால் கண்கள் பாதிப்பு அடையும். பாதிப்பு அதிகமாக ஏற்படும் போது உடனே கால்நடை மருத்துவரை நாடுவது சிறந்தது.
- பொதுவாக நாயின் பற்களில் கிருமித் தொற்றும் மற்றும் மஞ்சள் கறை போன்றவை உருவாகும். சில சமயங்களில் பற்சிதைவு ஏற்பட்டு அதிக வலி மற்றும் பல் இழப்பு நேரும்.
- குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சிறிய பல் துலக்கும் பிரஷ் கொண்டு நன்கு துலக்க வேண்டும்.
- பற்பசை, உப்பு நீர் அல்லது சோடா உப்பு ஏதேனும் ஒன்றை வைத்து பற்களை முழுமையாகச் சுத்தமாக துலக்க வேண்டும்.
- குட்டிகள் பிறந்தவுடன் 45 ஆவது நாளில் முதல் தடுப்பூசியும், இரண்டாவது, மூன்றாவது தடுப்பூசி 21 நாள்கள் இடைவெளி விட்டுப் போட வேண்டும்.
- 4 – ஆவது மாதத்தில் வெறிநோய்த் தடுப்பூசி போட வேண்டும். (பார்போ, எலிக் காய்ச்சல், டிஸ்டம்பர், எப்படைடிஸ், பாரா இன்ப்ளுயின்சா).
- 90 நாட்களுக்கு பிறகு மாதம் ஒருமுறை பூச்சி மருந்து கொடுக்க வேண்டும்.
- ஒரு வருடத்திற்கு மேல் உள்ள நாய்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மாத்திரை கொடுக்க வேண்டும்.
- சரியான இடைவெளியில் பூச்சி மருந்து கொடுக்காவிட்டால் உடலில் ஒட்டுண்ணியானது தங்கி விடும். இது உடல் எடையை குறைக்கும்.
- நாய்க் குட்டிகளுடன் நாம் நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் அனைவரிடமும் நன்கு பழகும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments