தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலன் காத்திட ஆவின் பால் கொள்முதல் விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். எருமைப் பால் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் இந்த உத்தரவின் மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக ஆவின் நிறுவனம் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறி வந்தன. தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக ஆவின் நிறுவனமும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் முதல்வரின் அறிவிப்பு பால் உற்பத்தியாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுத்தொடர்பாக முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-
ஆவின் நிறுவனம் 3.87 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 இலட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும். கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35/- ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும்.
இந்தச் சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை அரசால் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு, இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் 18.12.2023 முதல் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனால் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35-லிருந்து ரூ.38-ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44-லிருந்து ரூ.47 ஆகவும் உயரும். இதன்மூலம் சுமார் நான்கு இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.
பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் எனவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read also:
விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
security breach in Lok Sabha: நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த 2 நபர்களால் பரபரப்பு
Share your comments