1. கால்நடை

கர்ப்பக் காலத்தில் கறவை மாடுகளின் பராமரிப்பு மற்றும் மேலாண்மை

KJ Staff
KJ Staff
During Pregnant

மாடுகளில் இனச்சேர்க்கையோ அல்லது கருவூட்டலோ நடைபெற்ற பின் சுமார் 285 நாட்கள் சினைக்காலம் ஆகும். சினை காலத்தில் முதல் ஆறு மாதங்களில் கரு வளர்ச்சி அதிகமாக இருக்காது. எனவே, இந்த காலத்தில் சிறப்பு மேலாண்மை முறைகள் ஏதும் பின்பற்றத் தேவையில்லை. ஆனால், கடைசி மூன்று மாத காலத்தில் கருவின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் இருக்கும். எனவே, இந்தக் காலகட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது இன்றியாமையாதது ஆகும்.

சினையைக் கண்டறிதல்

​பொதுவாக மாடுகளில் 18-21 நாட்களுக்கு ஒரு முறை சினைப்பருவ சுழற்சி நடைபெறும்.  இதில் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்திய 12-24 மணி நேரத்திற்குப்பின் இன சேர்க்கையோ அல்லது கருவூட்டலோ செய்யலாம்.  ஒரு வேளை மாடுகள் சினைப்பிடித்திருந்தால் இந்த சுழற்சி தற்காலிகமாக நடைபெறாது.  இதுவே முதல் அறிகுறி ஆகும்.  40-60 நாட்களுக்குப் பிறகு ஆசன வாய் ஆய்வின் மூலம் இனப்பெருக்க பாதையினுள் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொட்டு உணர்ந்து மாடுகள் சினையாக உள்ளதா என்பதை அறியலாம்.

கறவை வற்றிய காலம்

​​சினைக்காலத்தின் கடைசி இரண்டு மாதங்களில் கருவின் வளர்ச்சி மிக அதிகமாக இருப்பதால் அதிகமான ஊட்டச்சத்துக்கள் கருவின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும். எனவே, இந்தக் கால கட்டத்தில் பால் கறப்பதை தவிர்ப்பது நல்லது.  தவறும்பட்சத்தில் ஊட்டமில்லாத அல்லது எடை குறைந்த கன்றுகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Cow with new born calf

தீவன மேலாண்மை

​கடைசி இரண்டு முதல் மூன்று மாதங்களில் நாம் கொடுக்கும் தீவனமானது கருவின் வளர்ச்சிக்குப் போதுமானதாக இருக்காது.  எனவே, இந்த காலக்கட்டத்தில் பசுந்தீவனத்தோடு சேர்த்து அடர்தீவனத்தையும் கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கலாம்.  இதன்மூலம் பாலின் கொழுப்புச் சத்துக் குறைவதையும் தடுக்கலாம். 7வது மாதம் முதல் கன்று ஈனும் வரை சுமார் 1-2 கிலோ கூடுதல் அடர் தீவனத்தை வழங்குவதால் பிறக்கும் கன்று நல்ல உடல் நிலையோடு ஊட்டம் நிறைந்ததாக, நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருக்கும். அத்தோடு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இல்லாமல் தாய் பசு நல்ல முறையில் கறவையில் இருக்கும். கன்று ஈனுவதற்கு கடைசி ஒரு வாரத்திற்கு முன்பு எளிதில் செரிக்கக்கூடிய தீவனங்களை மட்டுமே கொடுக்க வேண்டும்.  தேவையான அளவு நீர் பருக அனுமதிக்க வேண்டும்.

கடைசி நேர மேலாண்மை

​கன்று ஈனும் உத்தேச தேதிக்கு 5-7 நாட்களுக்கு முன்பிருந்தே மாடுகளை  மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். பிற மாடுகளோடு சண்டையிடுவதை அனுமதிக்கா வண்ணம் மாடுகளை தங்கள் பார்வையில் படும்படி கட்டி வைத்து நாளொன்றுக்கு 4-6 முறை பார்க்க வேண்டும்.  நாய் மற்றும் காகம் போன்றவற்றின் தொல்லை இல்லாத இடத்தில் மாடுகளை வைப்பது நல்லது.

​கன்று ஈனும் ஒட்டுமொத்த நடைமுறையும் 12 மணி நேரத்திற்குள் முடிந்துவிடும்.  கன்று ஈனுவதில் சிரமம் இருப்பின் தகுதி பெற்ற  கால்நடை மருத்தவரை விரையில் அணுக வேண்டும். கன்று ஈன்ற 24 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி விழாதிருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை அளிக்க வேண்டும்.

கன்று ஈன்ற பின் கவனித்தல்

​கன்று ஈன்ற பின் மாட்டின் பின்புறத்தையும் கொட்டகையினையும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். கன்றுக்கு 30 நிமிடங்களுக்குள் தொப்புள் கொடி கத்தரித்து சீம்பால் புகட்ட வேண்டும். பால் உற்பத்திக்கு ஏற்ப அடர்தீவனமும் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். மடிவீக்க நோய் ஏற்படாமல் இருக்க சரியான இடைவெளியில் முழுவதுமாக பாலை கறக்க வேண்டும். தூய்மையான சுகாதாரமான முறையில் கொட்டகைகளை பராமரிப்பதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Alimudeen S
Madras Veterinary College,
TANUVAS, Chennai. 
9677362633

English Summary: Guidelines of how to Care and Manage of pregnant Cow Published on: 02 September 2019, 04:26 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.