பண்ணைக்குட்டைகள், மழை நீரை சேமிக்க மட்டுமல்லாது ஏராளமான பயன்களை அளிக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து விவசாயத்தில் சாதனை படைக்கலாம்.
இயற்கையின் சவாலை சந்திக்கும் உத்திகளில் மிகவும் எளிய முறை பண்ணைக்குட்டைக்கு உண்டு. மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டுதல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், திருப்பணை கட்டுதல், பாத்திகள் போன்ற பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகச்சிறந்ததும் எளிய முறையில் நீரை சேமித்து முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணைக்குட்டைகள் மட்டுமே.
மழைக்காலங்களில் பெறப்படும் 30 சதவிகிதத்திற்கு மேலான மழை நீர் வழிந்தோடி ஆற்றிலும், பின் கடலிலும் கலந்து வீணாகிறது. பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் மழை நீரானது வீணாவது தடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் நிலத்தில் விடும் ஒவ்வொரு மழை துளியும் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உதவுகிறது.
மானாவாரி நிலத்துக்கு ஏற்ற பண்ணைக்குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர் தேக்கமாக செயல்படுகிறது. இதனால் நிலத்தடி மட்டம் உயரும். நிலத்தில் உறிஞ்சப்படும் நீரினால் மரங்கள், செடி, கொடிகள் எளிதாக வளரும். பசுமை போர்வையால் வாயுக்கள் குளிர்ந்து மேகங்கள் மழையை மீண்டும் தரும். மண் அரிப்பு தடுப்பு ஏற்படும். மானாவாரி புஞ்சை நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு தேவையான சமயத்தில் அளிப்பது இயலாத ஒன்று. மேலும் மழை காலங்களில் நீர் வழிந்தோடும் போது, மண் அரிமானம் நடைபெறுவதால் மேல் மண்ணில் உள்ள சத்துக்கள் வீணாகும் நீருடன் சேர்ந்து அடித்து செல்லப்படுகின்றது.
குறிப்பாக அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண் வளமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆனால் சரியான இடத்தில் பண்ணைக்குட்டை அமைத்து, மழை நீரை தேக்கி சுழற்சி செய்தால் மானாவாரி நிலத்திலும் பசுமை போர்வையை உருவாக்க முடியும். இதற்கு அனைத்து நில உடமையாளர்களின் பங்களிப்பு அவசியம். பண்ணைக்குட்டைகளை ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் அமைத்து பயனடையலாம்.
Share your comments