பெனிசிலியம், அஸ்பெர்ஜில்லஸ் அழுகல்
இந்நோய் பூண்டுப் பயிரின் வளர்ச்சிப் பருவத்திலும், சேமிப்பின் போதும் தாக்குகின்றது. நோய்க் காரணிகள் பூண்டின் பற்களைத் துளைப்பதால் அவை மென்மையாகி, சுருங்கி அதன் மேல் பச்சை, கருப்பு நிறத் துகள்கள் போன்ற பூசண வளர்ச்சி காணப்படும். இளம் செடிகளில் நோய் தாக்கும் போது செடிகள் முழுவதுமாக இறந்துவிடும். அறுவடை சமயத்தில் நோய் தாக்கப்பட்ட பூண்டு சேமிப்பின் போது அழுகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த அறுவடையின் போது பூண்டிற்கு காயம் ஏற்படுவது தவிர்க்கப்படவேண்டும். அறுவடைக்குப் பின் பூண்டினை நன்கு உலர்த்தி பதப்படுத்தி வைப்பதன் மூலம் இந்நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
மேக்ரோபோமினா அழுகல்
அறுவடை காலங்களில், மண்ணில் உள்ள அதிக ஈரப்பதத்தினால் இந்நோய் பரவும். பூண்டு பற்கள் அழுகி, அதன் மேல் கருமை நிற பூசண விதைகள் காணப்படும். இந் நோயினைக் கட்டுப்படுத்த பூண்டினை பதப்படுத்தும் போது பார்மலின் 0.03 சதவிகிதம் கொண்டு புகையூட்டம் செய்வதால் அழுகுவதைத் தவிர்க்கலாம்.
கருமை அழுகல்
இந்நோய்ப் பூசணம் பூண்டின் காய்ந்த வெளிப்புறத் தோலுக்கும், பற்களுக்கும் இடையே ஏற்படும். நோய் தாக்கிய பற்கள் காய்ந்து சுருங்கிவிடும். கருப்பு நிற பூசண விதைகள் வெளிப்புறத் தோலில் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த சேமிப்புக் கிடங்கின் வெப்பநிலை 13° செல்சியஸாக இருக்கும் பொழுது உலர்வான இடத்தில் சேமிக்க வேண்டும். நோயுற்ற பூண்டுகளைச் சேமிப்பிற்கு முன் அகற்றிவிட வேண்டும். மேலும், பூண்டுகளைப் பார்மலின் 0.03 சதவிகிதம் கொண்டு புகையூட்டம் செய்ய வேண்டும்.
புகையிலை அந்துப்பூச்சி
வெள்ளைப் பூண்டினைச் சேமிப்புக் கிடங்குகளில் மிக அதிக அளவில் தாக்கக் கூடிய அந்துப் பூச்சியின் புழுக்கள் பூண்டினைத் துளைத்து உட்சென்று உள்பொருள்களை சாப்பிடுகிறது. இதனால் பூண்டு காய்ந்து கூடு போன்று மாறிவிடும். சேத நிலை அதிகரிக்கும் பொழுது பூண்டு மாவு போன்று ஆகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த விதைப் பூண்டுகளை பாஸ் போமிடான் (1 மி. லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து) கரைசலில், காயவைத்த பிறகு நன்கு காற்றோட்டமான அறையில் சேமித்து வைக்க வேண்டும்.
Share your comments