1. கால்நடை

பட்டுப் புழு வளர்ப்பு

KJ Staff
KJ Staff

பட்டுத் தொழில் நமது நாட்டில் பல மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. வளமான மல்பெரி தோட்டம், பட்டுப் புழு இனங்கள், எளிய, ஆனால் உயரிய முறை பட்டு வளர்ப்புத் தொழில்நுட்பம் ஆகியன பட்டுத் தொழில் வளர்ச்சியின் முக்கிய காரணிகளாகும். விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட பல புதிய பட்டுப்புழுவின் வீரிய இனங்களால் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு பருவ காலத்திற்கு ஏற்ப மல்பெரியை உணவாக கொள்ளும் இனத்தின் தரமும், திறனும் மேம்படுத்தப்பட்டது. இந்த வீரிய இனங்கள் பல சுழற்சி இன பெண் தாய் அந்துப் பூச்சியையும், இரு சுழற்சி இன ஆண் அந்துப் பூச்சியையும் சேர்த்துக் கலப்பினமாக்கி உருவாக்கப்படுகின்றது.

பட்டு கூடுகளில் மஞ்சள் நிறமும், வெண்மை நிறமும் உடைய இனங்கள் உள்ளன. பல்வேறு வண்ணங்களை உடைய பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யும் ஆய்வுகள் இன்னமும் தொடர்கின்றது. ஆனாலும், அவை இன்னமும் வர்த்தக ரீதியில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படவில்லை.

வளர்ப்பு முறை

பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி 70-80 நாட்கள் ஆகும்.

பட்டுப்புழு கலப்பினங்கள்

இரு சந்ததி கலப்பினங்களாகிய CSR2 X CSR4 மற்றும் இருவழிக்கரு ஒட்டாகிய கிருஷ்ணராஜாவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இளம்புழு வளர்ப்பு

முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றை சிறந்த முறையில் கவனிக்க வேண்டும். நல்ல தரமான புழுவளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதால், தனி புழுவளர்ப்பு மனை அவசியமாகும். இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.

வளர்ந்த புழு வளர்ப்பு

வளர்ந்த புழு வளர்ப்பு மூன்றாம் பருவத்திலிருந்து தொடங்குகிறது. பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணும்.

வளர்ப்பு மனை

மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பினை தனியே பேணி வளர்க்கும் போது அதற்கு குறிப்பிட்ட சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். 24-280சி வெப்பமும் 70-80% ஈரப்பதமும் தேவை. நல்ல குளிர்ச்சியான காற்றோட்டமான வளர்ப்பு மனை மிகவும் அவசியம். வளர்ப்பு மனையின் கூறை அமைக்கும் போதும், கட்டிடத்தை வடிவமைக்கும் போதும், குளிர்ச்சியுடன் அமைப்பதற்கு ஏற்ற வழிகளை மேற்கொள்ள வேண்டும். இலைகளை சேமிப்பதற்கும், இளம்புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும், தோலுரிப்பிற்கும் வேண்டிய இடவசதிகளுடன் அமைக்க வேண்டும். சுத்தம் செய்வதற்கும் கிருமி நீக்கம் செய்வதற்கு ஏற்றவாறு வளர்ப்பு மனையைக் கட்ட வேண்டும்.

பட்டுபுழு வளர்ப்பின் வகை மற்றும் அளவைப் பொறுத்து வளர்ப்பு மனையின் அளவு வேறுபடும். 400 சதுர அடி தரையளவைக் கொண்ட வளர்ப்பு மனையில் 100 நோயற்ற முட்டைத் தொகுதிகளை (டி.எப்.எல்.) வளர்க்க முடியும் (1 டி.எப்.எல். = 500 புழுக்கள்).

வளர்ப்புச் சாதனங்கள்

அதிகமான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தையும், காற்றோட்டத்தையும் வளர்ந்த புழுக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது. வளர்ப்பு மனையின் வெப்பத்தைக் குறைக்கவும், புழுக்களின் கழிவிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்று மற்றும் சூடான காற்றை வெளியேற்றவும், நல்ல காற்றோட்ட கட்டமைப்புகள் அவசியம்.

கிருமி நீக்கம் செய்தல்

வளர்ப்பு மனையையும், வளர்ப்புச் சாதனங்களையும் இருமுறை கிருமி நீக்கம் செய்ய வேண்டும். அறுவடை முடிந்தவுடன் 5% பிளீச்சிங் பவுடரிலும், அடுத்து வளர்ப்பு தொடங்கும் 2 தினங்களுக்கு முன் 2.5% சேனிடெக் கொண்டும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

தண்டு வளர்ப்பு - ஒரு சிக்கன வழி

இம்முறையில், கடைசி மூன்று பருவங்களில் உள்ள புழுக்களுக்கு இலைகளைத் தண்டோடு அறுவடை செய்து உணவளித்துப் புழு வளர்க்கலாம். தண்டு வளர்ப்பில் 40% வேலையாட்கள் குறைவதற்கு இது சிக்கன வழியாகும்.

 பிற நன்மைகள்

  • புழுக்களை கையால் தொடுவது குறைவதால் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது.
  • புழுக்களும், இலைகளும் புழுக்களின் கழிவிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதால், இரண்டாம் நிலைத் தொற்று நோய் பரவலைத் தடுக்க முடிகிறது.
  • நல்ல சுகாதாரமான சூழல் பராமரிக்கப்படுகிறது.
  • இலைகளின் தரம், அறுவடையின் போதும், புழுப்படுக்கையிலும் நன்கு காக்கப்படுகிறது.
  • புழுப்படுக்கையில் நல்ல காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது.
  • புழுக்கள் நோய் தாக்கத்திலிருந்து தப்பித்து நன்கு வளர்வதால் தரமான கூடுகள் கிடைக்கின்றன.
  • இம்முறையில் செலவுகள் குறைகிறது.

உணவளித்தல்

  • 50-55 நாட்கள் வயதுடைய 3/4 அடி உயரத்தில் உள்ள தண்டுகளை காலையில் குளிர்ச்சியான சமயத்தில் பறித்து புழுக்களுக்கு உணவளிக்க வேண்டும். ஐந்தாம் பருவ புழுக்களுக்கு 60-65 நாட்கள் வயதுடைய தண்டுகளைக் கொடுக்க வேண்டும்.
  • அறுவடை செய்த தண்டுகளை நிழற்பாங்கான, குளிர்வான, ஈரப்பதம் உள்ள இடத்தில், சுத்தமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட கோணிப்பைகளைக் கொண்டு போர்த்தி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  • இருவழிச்சந்ததிப் புழுக்களுக்கு, 4 ஆம் பருவத்தில் 460 கிலோவும் 5 ஆம் பருவத்தில் 2880 கிலோத் தண்டும் தேவைப்படும்.
  • தினமும் மூன்று முறை உணவளிக்க வேண்டும் (காலை 6 மணி, மதியம் 2 மணி, இரவு 10 மணி)
  • முற்றிய இலைகளையோ அல்லது மண்ணுடன் உள்ள இலைகளையோ கொடுக்கக்கூடாது
  • புழுக்களைப் படுக்கையில் சீராக கிடக்கச் செய்யவேண்டும். 100 நோயற்ற முட்டைத் தொகுதிக்கு, 5 ஆம் பருவ கடைசியில் 600 சதுரஅடி இடம் தேவைப்படும்.
  • ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது, நோய் பரவுவதைத் தடுக்க, எடைகுறைவான புழுக்களையும், நோய் தாக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய புழுக்களை பற்றுக் குச்சிக்கொண்டு அகற்ற வேண்டும். பொறுக்கிய புழுக்களை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் நீர்த்த சுண்ணாம்பில் போட வேண்டும்.

புழு படுக்கைகளை சுத்தம் செய்தல்

  • ஏதேனும் நோய்வாய்ப்பட்ட புழுக்கள் தென்பட்டால் அவற்றை 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீதம் சுண்ணாம்பு தண்ணீரில் போட வேண்டும்.
  • படுக்கையில் உள்ள கழிவுகளைத் தரையில் போட்டுவிடக்கூடாது.
  • வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை பராமரிக்க கடைசி பருவ வளர்ப்பிற்கு 260சி, மூன்றாம் பருவத்திற்கு 250சி, நான்காம் பருவத்திற்கு 240சி, ஐந்தாம் பருவத்திற்கு 240சி வெப்பம் தேவை. ஈரப்பதம் மூன்றாம் பருவத்திற்கு 80 சதவீதமும், நான்கு மற்றும் ஐந்தாம் பருவத்திற்கு 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும்.
  • வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் தேவைக்கேற்ப பராமரிக்க வேண்டும். குளிர் சாதன பெட்டி, வெப்பக்கருவி, கரிஅடுப்பு, ஈரக்கோணிப்பை, கொண்டு தேவைக்கேற்ப வெப்பத்தையோ, குளிர்ச்சியையோ பெறமுடியும். மேலும் கூரைமீது நீர் தெளித்தும், ஈரமணல் கொண்டும் பராமரிக்க முடியும்.
  • குறுக்காக காற்றோட்ட வசதி செய்து புழுக்களின் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

தோலுரிப்பு நேரங்களில் கவனிக்க வேண்டியவை

  • தோலுரிப்பு நேரங்களில் வளர்ப்பு மனை காற்றோட்டமாகவும் ஈரப்பதமின்றி இருக்க வேண்டும்.
  • புழுக்கள் தோலுரிப்பிற்கு தயாரானவுடன், படுக்கை காய்ந்து இருக்க நீர்த்த சுண்ணாம்பு தூள் தூவ வேண்டும்.
  • திடீர் வெப்பம் மற்றும் ஈரப்பத மாற்றத்தையும், அதிவேகமான காற்றையும், அதிக சூரிய ஒளியையும் தவிர்க்க வேண்டும்.
  • 95 சதவீத புழுக்கள் தோலுரித்த பின்பு உணவளிக்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் பராமரிப்பு

  • வளர்ப்பு மனைக்குள் செல்வதற்கு முன்பு, கை, கால்களை கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும். முதலில் சோப்பு போட்டு கழுவிய பின்பு கிருமி நாசினி கரைசலில் கழுவ வேண்டும் (2.5 சதவீதம் சேனிடெக் / செரிக்ளோர் உள்ள 0.5 சதவீதம் சுண்ணாம்பு கரைசல் அல்லது 2 சதவீதம் பிளீச்சிங் பவுடர் உள்ள 0.3 சதவீத சுண்ணாம்பு கரைசல்)
  • நோய்வாய்ப்பட்ட புழுக்களை நீக்கிய பின்பும், படுக்கையைச் சுத்தம் செய்த பின்பும், உணவளிக்கச் செல்லும் முன்பும் கிருமி நாசினிக் கரைசல் கொண்டு கையைக் கழுவ வேண்டும்
  • நோய்தாக்கப்பட்ட புழுக்களைத் தினமும் அகற்றி சுண்ணாம்புத்தூள் மற்றும் பிளீச்சிங் பவுடர் உள்ள தொட்டியில் போட வேண்டும். பின்பு அதனை எரிக்கவோ அல்லது தூரமான இடத்தில் குழி தோண்டிப் புதைக்கவோ வேண்டும்
  • பட்டுப்புழு வளர்ப்பின் போது, வளர்ப்பு மனையைச் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைக்க வேண்டும்

புழுப்படுக்கை கிருமிநாசினி பயன்படுத்துதல்

விஜேதா, விஜேதா கிரீன், அங்குஷ் ஆகியவற்றை புழு படுக்கையில் மற்றும் புழுக்களின் மேல் தூவியும் நோய்களைத் தடுக்கலாம். இவற்றைக் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம். ஒவ்வொரு தோலுரிப்பிற்குப் பின்பும், 5 ஆம் பருவத்தில் 4 ஆம் நாளும் புழுப்படுக்கையின் மீது ஒரு சதுர அடிக்கு 5 கிராம் என்ற அளவில் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி ஒரே சீராக எல்லா புழுக்களின் மீதும் படும்படி தூவவேண்டும்.

முதிர்ந்த புழுக்களைத் தட்டியில் விடுதல்

நல்ல தரமான கூடுகளைப் பெற, முதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில், தரமான கூடு கட்டும் தட்டுகளில், விடவேண்டும்.

ஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றி, உணவு உண்பதை நிறுத்தி, கூடு கட்ட இடம் தேடும். கூடு கட்டு தட்டின் அளவை மீறி புழுக்களைத் தட்டியில் விடக்கூடாது.

புழுக்கள் கூடுகட்டிக் கொண்டிருக்கும் போது. 240சி வெப்பமும் 60-70 சதவீதம் ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை.

100 நோயற்ற முட்டை தொகுப்பிற்கு 35 செட் கூடு கட்டும் தட்டிகள் தேவைப்படும். தொங்கும் தட்டிகளுக்கு தனி அறை அவசியமாகும்.

பட்டுக்கூடு அறுவடை மற்றும் பிரித்தல்

கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்ய வேண்டும். நலிந்த கூடுகளை அகற்ற வேண்டும். பின்பு கூடுகளின் தரத்தைப் பொறுத்து பிரிக்க வேண்டும். குளிர் காலத்தில் 1 நாள் தாமதித்து அறுவடை செய்ய வேண்டும்.

விற்பனை

அறுவடை செய்த கூடுகளை குளிர்ச்சியான நேரத்தில், 7 ஆம் நாளில் அனுப்பவேண்டும். 30-40 கிலோ தாங்கக்கூடிய நைலான் வலைப்பைகளில் காற்றோட்டமாக நிரப்பி, அறைவசதி உள்ள வாகனங்களில் எடுத்துச்செல்ல வேண்டும்.

பட்டுப்புழு கூடு மகசூல்

100 நோயற்ற முட்டைத் தொகுப்பிலிருந்து சராசரியாக 60-70 கிலோ கூடுகள் கிடைக்கும். ஒரு வருடத்தில், 1 ஏக்கர் மல்பெரி தோட்டத்தைக் கொண்டு 700-900 கிலோ கூடுகளைப் பெறமுடியும்.

 

English Summary: Silkworm Rearing Published on: 16 October 2018, 04:44 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.