1. கால்நடை

மல்பெரி சாகுபடி மற்றும் பூச்சி மேலாண்மை

KJ Staff
KJ Staff

பட்டுப்புழுத் தொழிலில் புழுக்களின் உணவுக்காக மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மது அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடுத்தும் உடைக்கான தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒன்றான பட்டாடை தயாரிப்பில் முதற்கட்டமாக இருப்பது தான் பட்டுப்புழு வளர்ப்பு. அந்த பட்டுப்புழுவை வளர்க்க அடிப்படை தேவையானது நன்கு பராமரிக்கப்பட்ட மல்பெரி தோட்டம்.

பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரம் மல்பெரி இலைகளே. இப்பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளைத் தவிர வேறு எந்த இலைகளையும் உணவாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, மல்பெரி இலைகளை உற்பத்தி செய்த பின்னரே பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்ள முடியும். மல்பெரிச் செடியானது வருடம் முழுவதும் வளர்ந்து பயன் தரவல்லது. இது பெரும்பாலும் இறவைப் பயிராகவே சாகுபடி செய்யப்பட்டாலும், மானாவாரித் தோட்டங்களிலும் பராமரிக்கப்படுகிறது. நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் நிலங்களே மல்பெரிக்கு மிகவும் ஏற்றதாகும். எனினும் மற்ற இடங்களிலும் மல்பெரிப்பயிர் சாகுபடி மேற்கொள்ள முடியும்.

மல்பெரி இரகங்கள்

இறவை இரகங்கள் (Irrigated)

        எம்ஆர் 2, எம் 5, எஸ் 30, எஸ் 36, எஸ் 54, விஸ்வா, வி 1, ஜி 4.

மானாவாரி இரகங்கள் (Rainfed)

        எஸ் 13, எஸ் 34.

உயர் விளைச்சல் ரகங்கள்

இவற்றுள் எம்.ஆர் 2, வி 1 

மல்பெரி நாற்று உற்பத்தி

மல்பெரி செடிகள், விதைக்குச்சிகள் மூலமே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மல்பெரி செடியில் அயல் மகரந்தச்சேர்க்கையின் மூலம் விதைகள் உருவாகின்றன. இவ்விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் நாற்றுக்களின் குணாதிசியங்கள் தாய்ச்செடியை ஒத்திருக்காது என்பதால் விதைகள் மூலம் இனப்பெருக்கம் மேற்கொள்ளப் படுவதில்லை.

மல்பெரியை விதைக்குச்சிகள் (Cuttings) மூலமாக இனப்பெருக்கம் செய்ய முடியும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் மல்பெரி சாகுபடி செய்ய 20சென்ட் நாற்றாங்கால் தயார் செய்ய வேண்டும். முதலில் நாற்று பாத்தியை 1மீ அகலம், 10 செ.மீ உயரம், 3மீ நீளத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். 

விதைக்குச்சிகளை பூச்சி மற்றும் நோய் தாக்காத, வேர் அழுகல் இல்லாத, 6-8 மாத வயதுடைய செடிகளிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.தேர்வு செய்த குச்சிகளை3-4 பருக்கள் இருக்குமாறு, 15-20 செ.மீ நீளமுள்ளதாக வெட்டிக் கொள்ள வேண்டும்.  வெட்டும்போது ஒவ்வொரு விதைக்குச்சியின் மேல் நுனியில் நேராகவும், அடிப்பகுதியில் சாய்வாகவும் பட்டை உரியாமலும் பிளவுபடாமலும் வெட்டவேண்டும்.

விதைக்குச்சிகளின் வேர்விடும் திறனை அதிகரிக்க அவற்றை அசோஸ்பைரில்லம் கரைசலில் நனைத்து நடவு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் நீரில் கரைத்து அதில் விதைக்குச்சிகளின் அடிப்பாகம் நனையுமாறு 30 நிமிடம் ஊறவைத்து பின் நடவேண்டும்.

நீர் பாய்ச்சுதல் மற்றும் களை மேலாண்மை

நடவிற்குப் பிறகு வாரத்திற்கு இரண்டு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 32 மற்றும் 60வது நாளில் களை எடுக்க வேண்டும். நன்கு வளர்ந்த மூன்று முதல் ஆறு மாத நாற்றுகளை இடம்பெயர்த்து நடவு செய்யலாம்.

நடவு செய்தல்

மல்பெரிச் செடியை சாதாரண (90 - 90 செ.மீ அளவில்) இணை வரிசைகளாகவோ (75,105 - 90 செ.மீ) நடவு மேற்கொள்ளலாம்.

உரமிடுதல்

ஒரு ஏக்கர் நிலத்துக்கு,  வருடத்திற்கு  8 டன் தொழுஉரம் தேவைப் படும். இதை அடி கவாத்துக்குப் பிறகு இடவேண்டும்.

இறவைப்பயிருக்கு ஒரு ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 300:120:120 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து சிபாரிசு செய்யப்படுகிறது. உயர் விளைச்சல் இரகமான வி.1ற்கு 375:140:140 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரத்தை ஐந்து தவணைகளில் ஒவ்வொரு கவாத்திற்கு இடவேண்டும்.

உயிர் உரங்கள் மற்றும் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதன் மூலம் இரசாயன உரங்களின் செலவைக் குறைக்கலாம்.

அறுவடை மற்றும் மகசூல்

பட்டுப்புழுவின் வளர்ப்பு முறைக்கேற்ப தனியிலைகளாகவோ மற்றும் தண்டுகளாகவோ அறுவடை செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மல்பெரி செடியின் உயரம் வடிவத்தைப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் அதிகபட்சமாக 10-12 கிளைகளுக்கு மிகாமலும் மிகவும் ஒல்லியான கிளைகளை அகற்றியும், செடியைப் பராமரிக்க வேண்டும். இலைவழி ஊட்டச்சத்துக்களான செரி பூஸ்ட் (Seri Boost) (அ) போஷன் (Poshan) ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவதன் மூலம் அவை ஒளிச்சேர்க்கையை துரிதப்படுத்தி இலையின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

காலை அல்லது மாலை நேரங்களில் அறுவடை செய்வது சிறந்தது. அறுவடை செய்த இலைகளை ஈரமான சாக்குத் துணியில் வைத்துக்கொள்வதன் மூலம் இலையின் ஈரப்பதம் குறையாமல் இருக்கும். முதிர்ந்த புழு வளர்ப்பில் தண்டு அறுவடை முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆகவே மல்பெரியை தண்டு அறுவடை செய்து வேலையாட்கள் மற்றும் நேர செலவைக் குறைக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செடியினை அடிவெட்டு வெட்டி பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் செடி நட்டதிலிருந்து 12 முதல் 15 வருடம் மகசூல் குறைவின்றி தோட்டத்தைப் பராமரிக்கலாம்.

பூச்சி மேலாண்மை 

மல்பெரி செடியின் வளர்ச்சி மற்றும் இலைகளின் தரத்தை குறைப்பதில் பூச்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால், பட்டுப்புழு தொழிலானது பெரும் சரிவைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளைக் கண்டறிந்து அவற்றின் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த வேண்டும்.

மல்பெரி செடியை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமாக விளங்குபவை மாவுப்பூச்சி, இலை பிணைக்கும் புழு, இலைப் பேன், கரையான் போன்றவையாகும்.

மாவுப்பூச்சி

வெள்ளையாகப் பஞ்சு போல படர்ந்த முட்டைகளுடன் கூடிய இந்தப் பூச்சிகள், கூட்டமாக இலையின் நரம்புகள், இளம் தண்டுகளில் பரவி சேதாரத்தை ஏற்படுத்தும். இவை இளம் தண்டின் சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சிறுத்து மஞ்சள் நிறமாகி பின்னர் உதிர்ந்து விடுகின்றன. இந்தப் பூச்சிகள் மல்பெரி மட்டுமல்லாது பப்பாளி, மரவள்ளி, பார்த்தீனியம், துத்தி, செம்பருத்தி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பயிர்களைத் தாக்கவல்லது. இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அசிரோபேகஸ் பப்பாயே எனும் ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 500 வீதம் பாதிக்கப்பட்ட வயல்களில் வெளியிட வேண்டும். மல்பெரி சாகுபடி செய்யும் பகுதிகளில் உள்ள களைகளை அவ்வப்போது அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் புரபனோபாஸ் அல்லது புப்ரோபெசின் என்னும் பூச்சிக்கொல்லியை 1 லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

இலை பிணைக்கும் புழு

மல்பெரி செடியின் இலைகளின் நுனிப் பகுதியில் இளம் புழுக்கள் இருந்து கொண்டு இலையின் திசுக்களை உண்ணும். வளர்ந்த புழுக்கள் வேகமாக இலைகளை உண்பதுடன் அதன் கழிவுகளை வெளியேற்றுவதால் அவை பட்டுப்புழு உண்பதற்கு உதவாது. இதனால் இலைகள், செடிகளின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இத்தகைய புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த மல்பெரி செடிகளை கவாத்து செய்த உடன் நீர் பாய்ச்சுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மேலும், டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஹெக்டருக்கு 5 அட்டை வீதம் கட்ட வேண்டும்.

மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் டைக்குளோர்வாஸ் என்னும் பூச்சிக் கொல்லி 1 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைப்பேன்     

இந்தப் பூச்சிகள், இலைகளின் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி அதன் சாற்றினை உறிஞ்சி விடுகின்றன. இந்தப் பூச்சிகள் தாக்கப்பட்ட இலைகளில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் அவை பட்டுப்புழு உணவாக பயன்படுத்த முடியாது.

மேலும், தாக்குதல் தீவிரமடையும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இலைகள் வாடியும், இலைகள் சிறுத்தும் வெளிறிய கோடுகளுடன் காணப்படும். இந்த வகை பூச்சிகளை கட்டுப்படுத்த கைத்தெளிப்பானில் தண்ணீரைக் கொண்டு தெளிப்பதன் மூலம் பேன்கள் நீருடன் கழுவிச் செல்லப்படுகின்றன. ஏக்கருக்கு 20 மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை வைப்பதன் மூலம் கவர்ந்து அழிக்கலாம். அல்லது ஒரு லிட்டர் நீருக்கு 3 மில்லி வீதம் வேப்பெண்ணையை கலந்து தெளிப்பதன் மூலமும் இலைப்பேனை கட்டுப்படுத்தலாம்.

English Summary: Mulberry Cultivation and Pest management Published on: 13 October 2018, 01:52 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.