1. கால்நடை

வளர்ப்பு மீன்கள்! முக்கிய நோய்கள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

KJ Staff
KJ Staff
bacteria

பாக்டீரியா நோய்கள்

துடுப்பு மற்றும் வால் அழுகல் நோய்

பாக்டீரியாவினால் மீன்களுக்கு ஏற்படும் நோய்களில், மீனின் துடுப்பு மற்றும் வால் அழுகல் நோய் பரவலாகக் காணப்படும் ஒன்றாகும். இந்நோய், சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது.

பொதுவாக அனைத்து பெருங்கெண்டை இனங்களும் இந்நோயினால் பாதிக்கப்படுகின்றன. இந்நோய், சிறிய மீன்குஞ்சுகளையும், விரலளவு மீன்களையும், பெரிய மீன்களையும் பாகுபாடின்றித் தாக்குகின்றன.

மீன்களின் அதிக இருப்படர்த்தியும், நீர் மாசுபடுதலும் இந்நோய்களின் முக்கிய காரணங்களாகும். வால் மற்றும் துடுப்புகளில் அழுகுல் நோய்களான பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இவற்றால் மீனின் துடுப்பு மற்றும் வால் பாகங்கள் அழுகி, அரிக்கப்பட்டு, மீன்கள் நீந்துவதும், நிலைபெறுவதும் பாதிக்கப்படுகின்றன. மீனின் சதைப்பகுதிகளில் புண்கள் ஏற்பட்டு, அழகுக்காக அடுக்கி வைத்தாற் போன்ற பாதுகாப்புச் செதில்கள் சதை தெரியச் சிதைந்து, மீன்கள் பொலிவிழந்து அலங்கோலமாகக் காணப்படும்.

பாதிக்கப்பட்ட 100 கிலோ மீன்களுக்கு 5 – 7 கிராம் என்ற அளவில் ஆக்ஸிடெட்ராசைக்களின் எனும் எதிர் உயிர்க்கொல்லி மருந்தை மேலுணவுடன் சேர்த்து 10 – 14 நாட்களுக்கு அளித்து இந்நோயைக் குணப்படுத்தலாம். அக்ரிப்ளேவின் (3%), மற்றும் காப்பர்சல்பேட் (0.05%) குளியல் சிகிச்சை ஆகியவையும் இந்நோய்க்கு நல்ல பலன் தரும்.

நீர்க்கோவை நோய்

fungus affected fishes

இந்நோயினால் கட்லா, ரோகு, மிர்கால், சாதாக்கெண்டை, பொன் மீன் போன்றவை பாதிக்கப்படுகின்றன. பொதுவாக வெப்பம் மிகும் காலங்களில், இந்நோய் காணப்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட மீன்கள் பசியை இழக்கும், அதனால் வளர்ச்சி வேகத்தையும் இழக்கும். மேலும், கழிவுப் பொருட்களை வெளியேற்றும் மண்டலமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, உடல் மற்றும் செதில் பகுதிகளில் நீர் நிறைந்து, அப்பகுதிகளில் திரண்டு காணப்படும். செதில்கள் சிலிர்த்து வெளிவருதல் போன்றும் தோன்றும். மிகவும், பாதிப்புக்குள்ளான மீனின் அடிவயிற்றுப்பாகம் வழக்கத்துக்கு மாறாகத் தாழ்ந்து தொங்குவதுபோல் காணப்படும். இந்நிலையை அடைந்த மீன் 2 – 3 வாரங்களில் மாண்டுவிடக் கூடும். முன்னர் கூறப்பட்ட சிகிச்சை முறையிலேயே இந்நோயைக் குணப்படுத்தலாம்.

சீழ்ப்புண் நோய்

இந்நோயினால் பாதிக்கப்பட்ட மீன்களின் உடலில் பெரிய அளவில் திறந்த புண்கள் காணப்படுவதால், இந்நோய் அல்சர் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நோயினை நீக்க, 1 கிராம் காப்பர்சல்பேட்டை 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தாக்கப்பட்ட மீன்களை அக்கரைசலில் 1 நிமிடம் விட்டு எடுக்க வேண்டும். இவ்வாறு 3 – 4 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

பூஞ்சாண நோய்கள்

இந்நோய்கள் பொதுவாக மீன்களின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை அடிக்கடியும், பெரிய மீன்களை அவ்வப்போதும் தாக்குகின்றன. காயமுறும் போதும், ஒட்டுண்ணிகளால் தாக்கப்படும் போது, இக்காளான்கள் உடலினுள் நுழைகின்றன. காளான்கள் அனைத்து இன மீன்களையும் தாக்குகின்றன. மீன்குஞ்சுகளை ஒரு இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வளர்ப்புக்காகக் கொண்டு செல்லும் போது, அவற்றைச் சுகாதாரமான முறையில் கையாளாவிடில், இக்காளான்கள், மீன் குஞ்சுகளை அதிக அளவு பாதித்து அழித்துவிடும். தாக்கப்பட்ட மீன்கள் பொதுவாக நலிந்து செயலாற்றுக் காணப்படும். காயம்பட்ட இடங்களில் வெள்ளை நிறத்தில் கொத்தாக இழைகள் போன்று காணப்படுவது பூஞ்சாண நோயின் முக்கிய அறிகுறியாகும். தாமிர சல்பேட் கரைசலில் (1 லிட்டர் நீரில் ½ கிராம் தாமிர சல்பேட்) அல்லது உப்புக்கரைசலில் (1 லிட்டர் நீரில் 25 – 30 கிராம் அளவு சமையல் உப்பு) நோயுற்ற மீன்களை விட்டு அவை நீந்தித் தளரும் போது எடுத்து குளங்களில் விடுவது பூஞ்சாண நோய்க்காள சிகிச்சையாகும்.

இ.யு.எஸ். (அம்மைக்குழி நோய்)

எப்பிசூட்டிக் அல்சரேட்டிங் சிண்ட்ரோம் எனப்படும் கொடிய நோயின் தாக்குதல் தமிழ்நாட்டில் 1991 – ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. இந்நோயால் விரால்கள், கெளுத்திகள், உளுவை மற்றும் சிறிய நாட்டுக் கெண்டை போன்ற இனங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. திடீரென நீரின் கார அமிலத்தன்மையில் பெரும் மாற்றம் ஏற்படுதல். குளங்களில் நிறைய கழிவுப் பொருட்கள் மற்றும் பூச்சுக் கொல்லிகள் சேருதல் போன்ற சுற்றுப்புறக் கேடு உள்ள சூழலில் இந்நோய் காணப்படுகிறது.

நோயின் அறிகுறிகள்

நோய் தாக்கப்பட்ட மீன்களின் தலை மற்றும் உடலின் மேல் வெள்ளை மற்றும் சிவப்பு நிறப்புள்ளிகள் தோன்றி பின்னர் அவை அளவில் பெரியதாகும்.

ஒரு வார காலத்திற்குள் அப்புள்ளிகள் புண்களாக மாறிவிடும்.

மீன்களின் தலை, உடல் மற்றும் வால் பகுதிகள் அரிக்கப்பட்டு எலும்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

பாதிக்கப்பட்ட மீன்கள் சுமார் 1 வாரம் முதல் 10 நாட்களில் அதிக அளவில் இறந்து போகும்.

தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்

ஓரளவு இந்நோயைத் தடுக்க முடியும் என்றாலும், இந்நோய்க்கான சிகிச்சை முறை குளம் மற்றும் நீர் நிலைகளில் சுகாதாரமான சூழலை ஏற்படுத்துவதிலும் அதனை சீராகப் பராமரிப்பதிலும் தான் அமைந்துள்ளது. குளங்களை தயாரிக்கும் போதும் மீன் வளர்க்கும் போதும் கார அமில நிலைக்கேற்ப குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவதன் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.

ஒட்டுண்ணிகள்

மீன்பேன் மற்றும் நங்கூரப்புழு போன்ற கணுக்காலிகள் மீன்களைத் தாக்கும் முக்கிய ஒட்டுண்ணிகளாகும். இவற்றுள் மீன்பேன் சினை மீன்களையும், நங்கூரப்புழு மீன் குஞ்சுகளையும் அதிக அளவில் தாக்குகின்றன. இவ்வகை ஒட்டுண்ணிகளின் தாக்குதல் பொதுவாக வெப்பம் அதிகமாக உள்ள காலங்களில் மீன்கள் மற்றும் குஞ்சுகள் அதிக இருப்படர்த்தியில் உள்ள குளங்கள் மற்றும் அதிக அளவில் கழிவுகள் சேர்ந்துள்ள குளங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் மீன் மேல் தோலை தாக்கி இரத்தத்தை உறிஞ்சி வாழும். பாதிக்கப்பட்ட மீன்கள் உடல் மெலிந்து இறந்து விடும். தாக்கப்பட்ட மீன்கள் கரை ஓரங்களில் அதிகமாக தென்படும். உப்புக் குவியல் சிகிச்சை, பொட்டாசியம் பெர்மாங்கனேட் குளியல் சிகிச்சை மற்றும் சிலவகை பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி இந்த ஒட்டுண்ணிகளை அழிக்கலாம்.

வளர்ப்புக் கெண்டை மீன் இனங்கள் பல்வேறு நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளின் தாக்குதலுக்கு இலக்காகின்ற போதிலும் கெண்டை மீன்வளர்ப்பில் நோய் என்பது ஒரு அச்சுறுத்தும் பிரச்சனையாக இல்லை. குளங்களுக்கு முறையாக சுண்ணாம்பிடுவதன் மூலமும், நீரின் தரத்தை நன்கு பராமரிப்பதன் மூலமும் நோய்களின் தாக்குதலை தவிர்க்கலாம். மீன்வளர்ப்பில் சிகிச்சையை விட நோய்த்தடுப்பு மிகவும் சிக்கனமானது மற்றும் எளிமையானது.

K.Sakthipriya
krishi Jagran 

English Summary: These Diseases can Affect fishes: Breeding Fishes, Major disease and Treatment prevention

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.