உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உலகப் பால்வள உச்சி மாநாடு இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டினைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கட்டி நோயைக் கட்டுப்படுத்த மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சமீபக் காலமாக இந்நோய் காரணமாகப் பல மாநிலங்களில் கால்நடைகள் பலியாகியுள்ளது எனக் கூறியதோடு, இந்திய விஞ்ஞானிகள் தோல் கட்டி நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியை தயாரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தோல் கட்டி நோய் என்பது ஒரு தொற்று வைரஸ் நோயாகும். இது கால்நடைகளைப் பாதிக்கிறது. இந்த நோய் தாக்கம் ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் முடிச்சுகள் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும். இந்த நோய் கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் குளவிகளின் நேரடி தொடர்புகள் ஆகியவற்றால் பரவுகின்றது.
மேலும், அசுத்தமான உணவு மற்றும் நீர் ஆகியவற்றின் மூலமாகவும் பரவுகின்றது. பல மாநிலங்கள் இந்த நோயுடன் போராடி வருகின்றன. இந்த நோய் பால் வளத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது எனக் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற பால்வள உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலானோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க
Share your comments