ஆட்டுப்பண்ணையின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்று குட்டிகளின் இறப்பு-பிறப்பு விகிதம். அதனால் ஆட்டுப் பண்ணையில் குட்டிகள் பராமரிப்பில் முக்கியத்துவம் செலுத்துவது மிகவும் அவசியம்.
எனவே ஆட்டுக்குட்டிகளை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றிப் பார்ப்போம்.
-
பண்ணைகளில் ஆடுகள் குட்டி ஈன்றவுடன் குட்டியின் வாய் மற்றும் மூக்குத் துவாரத்தில் ஒட்டியுள்ள கோழையை சுத்தம் செய்ய வேண்டும்.
-
இதனால், குட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும், தொப்புள் கொடியை 2 செ.மீ. விட்டு வெட்டி டிஞ்சர், அயோடின், டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைத் தடவுது அவசியம்.
-
குட்டிகள் பிறந்த அரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரத்திற்குள் சீம்பால் குடிக்கச் செய்ய வேண்டும். சீம்பாலில் நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட குளோபுலின் புரதம், வைட்டமின் A,D,E போன்றவை அதிகம் இருப்பதால் குட்டிகளை நோயிலிருந்து காக்கிறது.
-
மேலும், குட்டிகளின் வளர்ச்சியும் அதிகரித்து, நோய் தாக்குதலால் குட்டிகள் இறப்பதும் தடுக்கப்படுகிறது.
பால் புகட்டுதலின் அவசியம் (The need for lactation)
2 அல்லது 3 குட்டிகளை ஈனும் போது, தாய் ஆட்டில் பால் குறைவாக இருக்கும். அப்போது ஈன்ற மற்ற ஆடுகளின் பாலைக் குடிக்கச் செய்யலாம் அல்லது பசும் பாலுடன் சரிபாதி அளவு சுத்தமான தண்ணீர் கலந்து புகட்டலாம். இவ்வாறு 3 முதல் 4 வாரங்கள் வரை குட்டிகளுக்கு பால் கொடுக்க வேண்டும்.
தை, மாசி போன்ற குளிர், பனிக் காலங்களில் பிறக்கும் குட்டிகள் இறக்க வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்க்க, கொட்டகைகளில் தடுப்புகள் அமைத்து காய்ந்த புல், வைக்கோல், உலர்ந்த துகள்களைப் பரப்பி வெதுவெதுப்பான நிலையை ஏற்படுத்த வேண்டும். உஷ்ணக் கருவி, மின் விளக்குகளை எரியவிடுவதன் மூலமும் வெப்பத்தை அதிகரிக்கலாம்.சித்திரை, வைகாசி மாதங்களில் பிறக்கும் குட்டிகளுக்கு வெப்பத்தைக் குறைக்க, ஈரமான கோணிப்பை, மின் விசிறிகள், கூரை மீது நீர் தெளித்தல் போன்ற முறைகளைக் கையாளலாம்.
அடர் தீவனம் (Concentrated fodder)
3 வாரங்களிலிருந்து 3 மாதங்கள் வரை குட்டிகளுக்கு நாளொன்றுக்கு அடர் தீவனம் 50 முதல் 100 கிராமும், பசுந்தீவனம் 2 கிலோவும் அளிக்க வேண்டும்.
இதனால், குட்டிகளின் எடை தினசரி 100 முதல் 120 கிராம் வரை கூடும். 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை குட்டிகளுக்கு தினசரி 150 முதல் 200 கிராம் அடர் தீவனமும், 3 கிலோ பசுந் தீவனமும் கொடுக்க வேண்டும்.
குடல் புழு நீக்கம் (Intestinal worm removal)
முதல் 6 மாதங்களுக்கு மாதம் ஒரு முறை குட்டிகளுக்கு குடல்புழு நீக்கம் செய்ய வேண்டும். 2 முதல் 3 மாத குட்டிகளுக்கு நாடாப் புழு தாக்க வாய்ப்புள்ளதால் முதலில் அதற்குரிய மருந்தை அளிக்கவும், ஒரு மாதத்துக்குப் பிறகு உருண்டைப் புழு நீக்கமும் செய்ய வேண்டும்.
நோய்த் தடுப்பு (Immunization)
துள்ளுமாரி நோயைத் தடுக்க 6ஆவது வாரத்திலும், கோமாரி நோய்க்கு 2ஆவது மாதமும், அம்மை, வெக்கை சார்பு நோய்க்கு 3ஆவது மாதமும் தடுப்பூசி போட வேண்டும். அடைப்பான் நோய்க்கு 6 மாத வயதில் நோய் கண்ட பகுதிகளில் மட்டும் போட வேண்டும். 6 மாதங்களுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் துள்ளுமாரி நோய் மற்றும் கோமாரி நோய்க்குத் தடுப்பூசி போட வேண்டும்.
மருந்துக் குளியல் (Medication bath)
புற ஒட்டுண்ணிகளான பேன், உண்ணி, தெள்ளுப்பூச்சிகள் இருந்தால், அவற்றை நீக்க 15 நாள்களுக்கு இரு முறை குட்டிகளுக்கு பியூட்டாக்ஸ், பென்வேலரேட், சுமிசிடின் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை 2 முதல் 5 மி.லி. வீதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மருந்துக் குளியலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வளர்ப்பு (Growth)
3 மாதங்களுக்குப் பிறகு குட்டிகளை ஆடுகளிலிருந்து பிரித்து தனியாக வளர்க்க வேண்டும். அப்போதுதான், அவை அடுத்த ஈற்றுக்கு விரைவாகத் தயாராகும். இன விருத்திக்கு அல்லாமல் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கிடாக்களை காயடித்து வளர்க்க வேண்டும். 3 மாதங்கள் வரை குட்டிகளின் எடை முறையாக அதிகரிக்கவில்லை என்றால், அவற்றைப் பண்ணைகளிலிருந்து நீக்கிவிடுவது நல்லது.
மேலும் படிக்க...
ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!
பசுமாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பு முகாம் - 31ம் தேதி வரை நடத்த ஏற்பாடு!
100% மானியத்தில் செயல்படும் கால்நடை திட்டங்கள் - நீங்களும் பயன்பெறலாம்!!
Share your comments