1. கால்நடை

கிடேரிகளுக்கான சிறந்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்

KJ Staff
KJ Staff

முதல் கன்று ஈனுவதற்குத் தயார்படுத்தும் பசுவனதே கிடேரி ஆகும். இவை நல்ல பால் உற்பத்தி கொடுக்கக் கூடியதாக, ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். எந்த மரபியல் பரம்பரைக் குறைபாடும் இன்றி, சரியான வளர்ச்சியுடன் இருக்கவேண்டும்.

கிடேரிகளின் பராமரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்

பசுவின் வளர்ச்சி அது சாப்பிடும் பசுந்தீவனத்தைப் பொறுத்தே அமையும். அதே சமயம் தேவையான அளவு உலர்தீவனடும் கொடுத்தல் அவசியம். அதன் முந்தைய பேறுகாலங்களில் கொழுப்பை விட புரோட்டீன் அதிகம் தேவைப்படுகிறது

கிடேரிகளை நன்றாகக் கவனித்து தீவனமளிப்பதால் அவற்றைத் தரமான பண்ணைக் கறவை மாடுகளாகப் பயன்படுத்தமுடியும்.போதுமான வளர்ச்சி இருக்குமாறு கிடேரிகளுக்குப் போதுமான அளவு தீவனத்தை அளிக்கவேண்டும். கிடேரிகளின் இளமைப் பருவத்தில் தீவனத்தில் சக்தியை விட அதிகமான புரதம் தேவைப்படும். பெரும்பாலான கிடேரிகள் நல்ல தரமான  தேவைப்படும் அளவு வைக்கோல் அளித்தாலே நன்றாக வளர்ச்சி அடையும். அதிகத் தரமான உலர்தீவனம் அளித்தலைப் பொருத்து கிடேரிகளின் உடல் வளர்ச்சி இருக்கும்.

உலர்வான, சுத்தமான கொட்டகைகளில் கிடேரிகள் பராமரிக்கப்பட வேண்டும், அல்லது திறந்த வேளியுடன் கூடிய கொட்டகையும் போதுமானது. கிடேரிகளை இனப்பெருக்கம் செய்யும் போது அவற்றின் வயதை விட அவற்றின் உடல் எடை போதுமான அளவு இருப்பது அவசியமாகும். கிடேரிகள் சில சமயங்களில் அவற்றின் வயதிற்கேற்ற உடல் எடையினை மெதுவாகவே அடையும். குறைவான உடல் எடையால் கிடேரிகள் சினை பிடித்து கன்று ஈனும் நேரத்தில் சிரமம் ஏற்பட்டு விடும்.

வயதான கிடேரிகள் இனப்பெருக்கம் செய்யப்படும் போது, அவற்றின் முதல் பால்  கறக்கும் காலத்தில் அதிக பால் உற்பத்தி இருக்கும். ஆனால் இவற்றின் பால் உற்பத்தி விரைவில் இனப்பெருக்க முதிர்ச்சி அடைந்த கிடேரிகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கும். பொதுவாக கிடேரிகள் அவற்றின் 24-30 மாத வயதில் இனப்பெருக்கத்தை துவங்குகின்றன.

கன்று ஈனும்போது கிடேரிகள் நல்ல உடல் எடையுடன்,  நல்ல வளர்ச்சி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். கன்று ஈனும் உத்தேச காலத்திற்கு 6-8 வாரங்கள் முன்பாகவே கிடேரிகளை தனியான கொட்டைகையில் பராமரிக்கவேண்டும். கன்று ஈனுவதற்கு முன்பாக கிடேரிகள் கொட்டகையில் நன்றாக பழகுமாறு பார்த்துக் கொண்டு பால் கறப்பதற்கும் நன்றாகப் பழக்க வேண்டும். உடல் நலத்தை நன்றாகப் பராமரிப்பது அவற்றின் வளர்ச்சி நன்றாக இருப்பதற்கு அவசியமாகும்.

சுகாதாரமான வீடமைப்பு வேண்டும். சினையுற்ற கிடேரிகளை இதமாகவும், அன்பாகவும் கையாள வேண்டும்.  திறந்த வெளிக் கொட்டகை அமைப்பே கிடேரிக்கு மிகவும் ஏற்றது

சினையுற்ற கிடேரிகளுக்கு தினமும் 2-3 கிலோ அடர் தீவனமும்,  தேவைப்படும் அளவு உலர் தீவனமும் அளிக்க வேண்டும்.  கிடேரிகளின், சுத்தமான குடிநீர் அளித்தல், சரிவிகித தீவனமளித்தல், மற்றும்  பொதுவான நோய்களுக்கான நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்ற செயல்முறைகள் கிடேரிகளின் உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கானவையாகும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் கிடேரிகளை அவற்றின் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவேண்டும்.  குறிப்பிட்ட அளவிற்கு வளர்ச்சியடையாத கிடேரிகளைப் பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.

கிடேரிகள் முதன் முதலில் கன்று ஈனுவதால் அவை கன்று ஈனும் போது சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே கிடேரிகள் கன்று ஈனும்போது அவற்றிற்கு சிறப்பு கவனம் தேவை.  கிடேரி கருத்தரிக்கும்போது அதன் வயதை விட எடை மிக முக்கியம். ஏனெனில் வயதான கிடேரிகள் கூட நல்ல கன்றுகளை ஈனும். அதனால் மெலிந்த  கிடேரிகள் கன்று ஈனுவதற்கு மிகவும் சிரமப்படும். மேலும் அதன் கன்றுகளும் நல்ல உடல் நலமுடையதாக இருக்காது.

ஆனால் வயதான மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவாகவே இருக்கும். முதல் நான்கு பருவங்களில் பால் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனினும் எந்த அளவு அதிக சதைப்பற்றுடனும், எடையடனும் இருக்கிறதோ அந்தளவுக்கு பால் அதிகமாக உற்பத்தி செய்ய முடியும்

கன்று ஈனுவதற்கு 6 வாரங்களுக்கு முன்பாகவே கிடேரி தனிக் கொட்டிலில் பராமரிக்கப் பட வேண்டும். மாட்டிற்கு அது சாப்பிடும் அளவிற்கு பசுந்தீவனமும் வாரத்திற்கு 2-3 கிலோ அடர்தீவனமும் அளித்தல் அவசியம்

ஒரு சுகாதாரமான இடததில்தான் நல்ல வளர்ச்சி சாத்தியம் எனவே சரிவிகித உணவுடன் நோய்த்தடுப்பிற்குத் தேவையான பொருட்களையும் முன்கூட்டியே செய்து கொள்ளுதல் நலம்.

சினை மாடுகளுக்கான சிறப்பு கவனிப்பு

சினையுற்றிருக்கும் மாடுகளை முறையாக கவனித்தால் கன்று ஆரோக்கியமானதாகுவும்,  தரமானதாகவும் அமையும். அவற்றின் கறவை காலத்தில் அதிகப்படியான பால் உற்பத்தியினையும் பெற இயலும். மாடுகள் சினையுற்றிருக்கும் காலத்தில் அவற்றிற்கு அதிகப்படியான அடர் தீவனம் சுமார் 1.25 – 1.75 கிலோ அளிக்கவேண்டும். மேலும் தரமான பயறு வகைத் தீவனங்களின் வைக்கோலையும் அவற்றிற்கு கொடுக்க வேண்டும்.

சினையுற்றிருக்கும் மாடுகள் அதிகப்படியாக குண்டாகவும், மிகவும் உடல் மெலிந்தும் இருக்கக்கூடாது. சினை மாடுகளுக்குப் போதுமான அளவு தண்ணீர் எப்போதும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டு, அவற்றிற்கு வெயிலால் ஏற்படும் அயற்சியிலிருந்தும் பாதுகாக்கவேண்டும்.  சினையுற்றிருக்கும் மாடுகளை ஏற்கனவே கன்று வீச்சு ஏற்பட்ட மாடுகள் அல்லது கன்று வீச்சு நோய்களால் பாதிக்கப்பட்ட மாடுகளிடம் ஒன்றாக இருக்க அனுமதிக்கக்கூடாது.

மாடுகளுக்குப் போதுமான அளவு உடற்பயிற்சியினை அளிப்பதால் அவற்றின் கர்ப்பப்பையில் வளரும் கன்று சாதாரணமாக வளர்வதற்கு உதவியாக இருக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக சினையுற்றிருக்கும் மாடுகளுக்கு உடற்பயிற்சியை அளிக்கக்கூடாது. குறிப்பாக சமமற்ற தரைகளில் அவற்றிற்கு உடற்பயிற்சி அளிக்கக்கூடாது.  சினையுற்றிருக்கும் மாடுகளை மற்ற மாடுகளுடன் சண்டை போட அனுமதிக்கக்கூடாது. சினையுற்றிருக்கும் மாடுகளை மற்ற விலங்குகள் மற்றும் நாய்கள் துரத்தாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  வழுக்கும் தன்மையுடைய தரையில் மாடுகளைக் கட்டக்கூடாது. இவ்வாறு மாடுகளைக் கட்டுவதால் அவை வழுக்கி விழுந்து எலும்பு முறிவு அல்லது எலும்புகள் அவற்றின் மூட்டுகளிலிருந்து விலகும் வாய்ப்புண்டு.

நுணுக்கமாக பதிவேடுகள் பராமரிக்கப்பட்டிருந்தால், சினையுற்றிருக்கும் மாடுகள் கன்று ஈனும் தேதியை கணக்கிட வேண்டும். கன்று ஈனும் உத்தேச தேதிக்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே சினை மாடுகளைக் கன்று ஈனும் கொட்டகைக்கு மாற்றி விட வேண்டும். கன்று ஈனும் கொட்டகை நன்றாக சுத்தம் செய்யப்பட்டு மாடுகள் படுப்பதற்கு ஏற்றவாறு வைக்கோலோ அல்லது இதர பொருட்களோ பரப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.  கடைசி 8 வார சினைக் காலத்தில் சினை மாடுகளுக்கு எப்போதும் கொடுப்பதை விட ஒரு கிலோ அடர் தீவனத்தை அதிகமாக அளிக்கவேண்டும்.

கன்று ஈனுவதற்கு 3-5 நாட்களுக்கு முன்பாகவும், கன்று ஈன்ற பின் 3-5 நாட்களுக்கு அவற்றிக்கு மலமிளக்கியாக செயல்படும் தீவனத்தை அளிக்க வேண்டும் (கோதுமைத் தவிடு 3 கிலோ, +0.5 கிலோ கடலைப் பிண்ணாக்கு+100 கிராம் தாது உப்புக் கலவை).     சினை மாடுகள் கன்று ஈனுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கன்று ஈனுவதற்கான அறிகுறிகளாவன- வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள் வீங்கிக் காணப்படுதல், மடிவீக்கம் போன்றவை. பெரும்பாலான சினை மாடுகள் வெளிப்புற உதவியின்றி கன்று ஈன்று விடும். மாடுகள் கன்று ஈனுவதில் ஏதேனும் சிரமம் ஏற்படின் கால்நடை மருத்துவரின் உதவியை நாடவும்.

கன்று ஈன்றவுடன் மாடுகளின் வெளிப்புற இனப்பெருக்க உறுப்புகள், அடி வயிற்றுப்பகுதியினை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும். மாடுகளைக் குளிரிலிருந்து பாதுகாத்து, வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிப்பதற்கு அளிக்கவேண்டும்.  கன்று ஈன்ற 2-4 மணி நேரத்தில் மாடுகள் நஞ்சுக்கொடியினை வெளியே தள்ளி விடும். பொதுவாக இதற்கு கால்நடை மருத்துவரின் உதவி தேவையில்லை. கன்று ஈனுவதற்கு முன்பாகவே மாடுகள் பால் காய்ச்சல் நோயால் பாதிக்கப்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கு கால்சியம் சத்து அளிக்க வேண்டும்.  கன்று ஈனுவதற்கு முன்பாக சில சினை மாடுகளில் மடி அதிகமாக வீங்கிக் காணப்படும். இவ்வாறு அதிகமாக வீங்கி இருந்தால் மடியிலிருந்து பாதிப் பாலைக் கறந்துவிடவேண்டும்.  சினை மாடுகளுக்கு கன்று வீச்சு ஏற்பட்டிருந்தால் மாடுகளை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். சினை மாடுகளுக்குப் போதுமான அளவு தண்ணீர் எப்போதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

கன்றுகளுக்கான கவனிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்

கன்றுகள் பிறந்தவுடன் அவற்றின் மூக்கு மற்றும் வாய்ப்பகுதியிலுள்ள கோழையினை அகற்றிவிட வேண்டும்.  பொதுவாக கன்று ஈன்றவுடன் தாய் மாடு கன்றினை தனது நாக்கால்  சுத்தம் செய்யும். இதனால் கன்றுகளின் உடல் உலர்ந்து விடுவதுடன் அவற்றின் சுவாசமும், இரத்த ஓட்டமும் தூண்டப்படும். குளிர்காலத்தில் கன்றினைத் தாய் மாடு சுத்தம் செய்ய வில்லையெனில், கன்றின் உடலை ஒரு சுத்தமான உலர்ந்த துணி அல்லது கோணிப்பையால் நன்றாக துடைத்து விட வேண்டும்.

கன்றுகளின் நெஞ்சுப்பகுதியை அழுத்தி விடுவதால் கன்றுகளுக்கு செயற்கை சுவாசத்தைத் தூண்டலாம்.

கன்றுகளின் தொப்புள் கொடியினை ஒரு கிருமி நீக்கம் செய்யப்பட்ட சுத்தமான நூலை எடுத்து கன்றின் உடலில் இருந்து 1 அங்குல இடைவெளி விட்டு கட்ட வேண்டும். இந்த நூலை டிங்சர் அயோடின் கரைசலில் முக்கி எடுத்து பிறகு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கட்டியவுடன் 1-2 செமீ நீளம் விட்டு தொப்புள் கொடியினை வெட்டி பிறகு வெட்டப்பட்ட பகுதியில் டிங்சர் அயோடின் அல்லது போவிடோன் அயோடின் கரைசல் தடவ வேண்டும்.

கொட்டகையிலுள்ள ஈரமான படுக்கைப் பொருட்களை எடுத்துவிட்டு, கொட்டகையினை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்துக் கொள்ளவேண்டும்.  கன்றின் உடல் எடையினை பார்த்து குறித்துக் கொள்ளவேண்டும்.

தாய் மாட்டின் மடி மற்றும் மடிக்காம்புகளை குளோரின் கரைசலால் கழுவி உலர்த்தி விட வேண்டும். கன்றினை தாய் மாட்டிடமிருந்து சீம்பால் ஊட்ட அனுமதிக்கவேண்டும். புதிதாகப் பிறந்த கன்று, பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தானாகவே தாயிடம் பாலூட்ட ஆரம்பிக்கும். நோஞ்சானாக இருக்கும் கன்றுகளுக்கு தாயிடம் பாலூட்ட உதவி செய்ய வேண்டும்.

கன்றுகளுக்கு தீவனமளித்தல்

கன்றுகளுக்கு அவற்றின் தாயிடமிருந்து சுரக்கும் சீம்பாலை முதலில் ஊட்ட வைக்கவேண்டும். சீம்பால் எனப்படுவது கன்று ஈன்ற பிறகு மாட்டில் முதல் மூன்று நாள் சுரக்கும் பாலாகும்.

சீம்பால் அடர்த்தியாக, கொழகொழவென்று இருக்கும்.

சீம்பாலில் அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் புரதங்கள் இருக்கும்.

சீம்பாலில் உள்ள புரதங்கள் இமியுனோ குளோபுலின்கள் எனும் நோய் எதிர்ப்புப் புரதங்களாகும். இவை கன்றுகளை பல்வேறு விதமான நோய்களுக்கு எதிராகப் பாதுகாக்கின்றன.

சீம்பாலில் ஆண்டி டிரிப்சின் எனும் பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு புரதங்கள் கன்றுகளின் வயிற்றில் சீரணிப்பதைத் தடுத்து, நோய் எதிர்ப்புப் புரதங்களை அப்படியே கன்றுகளின் குடலில் உறிஞ்சுவதற்கு வழிவகை செய்கிறது.

கொழுப்பு நீக்கப்படாத பாலை கன்றுகளுக்கு அவற்றின் மூன்றாம் நாள் வயதிலிருந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு பாலைக் கொடுக்கும் போது கன்றுகளை வாளியிலிருந்து குடிப்பதற்குப் பழக்கவேண்டும்.

தினசரி இரண்டு முறை பாலை வெதுவெதுப்பாக்கி கன்றுகளுக்குக் குடிக்க கொடுக்கவேண்டும். நோஞ்சானாக இருக்கும் கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை பாலைக் கொடுக்கலாம்.

கன்றுகளின் உடல் எடையில் அதிகபட்சமாக 10% வரை பாலைக் கொடுக்கலாம் அல்லது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 5-6 லிட்டர் வரை கொடுக்கலாம். கன்றுகளின் 6-10 வார வயது வரை அவற்றுக்கு பாலைக் கொடுக்கலாம். இதற்கு மேல் அதிகப்படியாக பாலைக் கொடுத்தால் கன்றுகளுக்கு கழிச்சல் ஏற்படும்.

கொழுப்பு நீக்கப்படாத பாலுக்கு பதிலாக பால் மாற்றுப்பொருளை உபயோகிக்கலாம்.

கன்றுகளின் நான்கு மாத வயதிலிருந்து அவற்றுக்கு தரமான பசுந்தீவனத்தைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

எதிர் உயிரி மருந்துகளைக் கன்றுகளுக்கு தீவனத்துடன் கலந்து அளிப்பதால் அவற்றின் பசி தூண்டப்பட்டு, வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படுவதுடன், கழிச்சல் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.எ.கா. ஆரியோமைசின், டெராமைசின் போன்றவை.

இதர மேலாண்மை முறைகள்

கன்றுகள் பிறந்தவுடன் அவற்றின் காதுகளில் பச்சை குத்தி அவற்றை அடையாளம் காணலாம் அல்லது ஒரு வருடம் கழித்து சூடு வைத்தல் முறை மூலம் அடையாளமிட்டு கன்றுகளை கண்டறியலாம்.

கன்று பிறந்து 7-10 நாட்களுக்குள் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பி அல்லது காஸ்டிக் சோடா கொண்டு கொம்பு நீக்கம் செய்துவிட வேண்டும். கன்றுகளுக்கு சரியான கால இடைவெளியில் குடற்புழு நீக்க மருந்துகளைப் பயன்படுத்தி குடற்புழு நீக்கம் செய்துவிட வேண்டும். முப்பது நாள் இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து அவற்றுக்கு தூய குடிநீர் எப்போதும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கன்றுகள் மூன்று மாத வயதை அடையும் வரை அவைகளை குழுக்களாக ஒரு கொட்டகையிலும், மூன்று மாத வயதிற்குப் பிறகு தனித்தனியாக கொட்டகைகளிலும் பராமரிக்கவேண்டும்.

ஆறு மாத வயதிற்குப் பிறகு கிடேரி மற்றும் காளைக் கன்றுகளைத் தனித்தனியான கொட்டகைகளில் பராமரிக்கவேண்டும். கன்றுகளின் ஆறு மாத வயது வரை ஒரு மாத இடைவெளியில் அவற்றின் உடல் எடையினை பார்த்து குறித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு உடல் எடையினைப் பார்ப்பதால் அவற்றின் வளர்ச்சி விகிதத்தை அறிந்து கொள்ளலாம்.

கன்றுகளின் முதல் மாத வயதில் நுரையீரல் அழற்சி காரணமாக அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்படும்.  கன்றுகளை சுத்தமான, வெதுவெதுப்பான கொட்டகையில் வைத்துப் பராமரிப்பதால் குடற்புழுக்களின் தாக்குதல் மற்றும் கழிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். கிடேரிக் கன்றுகளில் நான்குக்கும் மேற்பட்ட மடிக்காம்புகள் இருந்தால் அவற்றை கன்றுகளின் 1-2 மாத வயதில் நீக்கி விட வேண்டும்.

காளைக் கன்றுகளின் 8-9 வார வயதில் அவற்றுக்கு ஆண்மை நீக்கம் செய்யவேண்டும். கன்றுகளின் உடலை சுத்தமாக வைத்திருப்பதால் அவற்றுக்கு பூஞ்சான் தாக்குதல் ஏற்படாமல் பாதுகாக்கலாம். கன்றுக் கொட்டகையில் தாது உப்புக் கட்டியினைத் தொங்க விட வேண்டும். இவ்வாறு தொங்க விடுவதால் கன்றுகள் அவற்றை நக்கும். இதனால் கன்றுகளுக்கு தாது உப்புகள் பற்றாக்குறை ஏற்படுவது  தடுக்கப்படும். கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்து, வாளியில் தீவனம் உண்ணப் பழக்கவேண்டும்.

 

K.SAKTHIPRIYA

KRISHI JAGRAN 

English Summary: whats are the step for heifer care and management: livestock dairy farming Published on: 19 June 2019, 05:26 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.