சிலிண்டர் விலையில் மாற்றம், வங்கி இணைப்பு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு உட்பட ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் சில முக்கிய உத்தரவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு-
எரிபொருள்/எல்பிஜி சிலிண்டர் விலை:
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்கள் மற்றும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகியவற்றின் புதிய கட்டணங்களைத் திருத்தி வெளியிடுகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை மே மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறைக்கப்பட்ட நிலையில் இன்று ரூ.8 அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் கடந்த மாதம் ரூ.1937 ஆக இருந்த சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1945 ஆக விற்பனையாகிறது. அதே நேரத்தில் 14.2 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வருமான வரி கணக்கு (ITR) காலக்கெடு:
வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 என்பதை நினைவில் கொள்க. வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொரு ஆண்டும் ITR-ஐ தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடுவை தவறவிட்டால், வரி செலுத்துபவருக்கு பொருந்தக்கூடிய அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் 20% டிசிஎஸ்:
கிரெடிட் கார்டு மூலம் வெளிநாடுகளில் பரிவர்த்தனை செய்பவர்கள் இப்போது 20% மூலத்தில் (TCS) வசூலிக்கப்படும் வரியைச் செலுத்த வேண்டும். மே மாதம் அரசு விதிகளில் மாற்றம் செய்தமைக்கு இணங்க புதிய விதியின்படி, சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் ஒரு நிதியாண்டில் ₹7 லட்சம் வரையிலான சிறிய தொகைகள் 20% டிசிஎஸ் விதியில் இருந்து விலக்கப்படும்.
இருப்பினும், ஐடிஆர் தாக்கல் செய்யும் போது ஒருவர் அதைக் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலணி நிறுவனங்களுக்கு QCO கட்டாயம்:
ஜூலை 1 முதல், மத்திய அரசு தரக் கட்டுப்பாட்டு ஆணையை (QCO) செயல்படுத்த காலணி அலகுகளை கட்டாயப்படுத்தியுள்ளது. உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளைப் பின்பற்றி, காலணி நிறுவனங்களுக்கான தரநிலைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது காலணி நிறுவனங்கள் இந்த விதிகளின்படி காலணிகள் மற்றும் செருப்புகளை தயாரிக்க வேண்டும். தற்போது, 27 காலணி தயாரிப்புகள் QCO வரம்பில் சேர்க்கப்பட்டுள்ளன, ஆனால் அடுத்த ஆண்டு மீதமுள்ள 27 தயாரிப்புகளும் இந்த நோக்கத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
HDFC மற்றும் HDFC வங்கி இணைப்பு:
ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (HDFC), HDFC வங்கி இணைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
கடந்த ஓராண்டாக நடைப்பெற்று வந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கடன் வழங்கும் வணிகத்தில் முன்னணியில் உள்ள HDFC லிமிடெட் நிறுவனம், உலகின் முன்னணி தனியார் வங்கியான HDFC -உடன் இணைக்கப்பட்டு ஒரே நிறுவனமாக செயல்பட உள்ளது. வருகிற ஜூலை 13 ஆம் தேதி முதல் HDFC லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்படும் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்கண்ட புதிய நடைமுறைகளை பொதுமக்கள் மனதில் வைத்து தங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள். கடைசி நேர பதற்றத்தை தவிர்க்க முன்கூட்டியே வருமான வரி கணக்கினைத் தாக்கல் செய்யுங்கள்.
மேலும் காண்க:
அண்ணனுக்கு முன்னாடி தம்பி டிகிரி முடித்தால் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்?
Share your comments