விவசாயிகளுக்கு அதிக முதலீடு இல்லாமல் தொடர்ந்து வருமானம் தரக்கூடிய உபத்தொழில் தேனீ வளர்ப்பு மிக முக்கியமானதாகும். இதனால் இன்று பல விவசாயிகள் தேனீ வளர்ப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார்கள். நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையம் தேனீ வளர்ப்பு குறித்த விரிவான பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
தேனீ வளர்ப்பதன் மூலம் விவசாய நிலங்களில் அயல் மகரந்த சேர்க்கை நடைபெற்று வேளாண் உற்பத்தியும் அதிகரிக்க உதவுகிறது. பொதுவாக எண்ணெய் வித்து பயிர்களான, எள், சூரியகாந்தி, கடுகு மற்றும் தென்னை, காய்கறி பயிர்களில் கத்தரி, வெண்டை, தக்காளி, கொத்தமல்லி, பூசணி பயிர்கள், பழ வகை பயிர்களில் மா, கொய்யா, மாதுளை, அத்தி, பப்பாளி பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெற தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 810 தேனீ பெட்டிகளை வைத்து தேனீ வளர்ப்பை தொடங்கலாம். பொதுவாக ஒரு பெட்டியில் ராணி தேனீ ஒன்றும், நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்களும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைக்கார தேனீக்களும் காணப்படும். இவற்றின் மூலம் வருடத்திற்கு அதிகபட்சமாக 60 கிலோ தேன் கிடைக்கும்.
பயிற்சியின் சிறப்பம்சங்கள்
- தேனீக்களின் வகைகள்
- வாழ்க்கைப் பருவம்
- வளர்ப்புக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்யும் முறை
- வளர்ப்புக்கு ஏற்ற பூ ரகங்கள்
- தேவைப்படும் உபகரணங்கள்
- தேனீக்களின் எதிரிகள் மற்றும் தாக்கும் நோய்கள்
- கோடை காலம் மற்றும் குளிர் காலங்களில் பராமரிப்பு முறை
- சுத்தத் தேனை அறியும் முறை
- உயர் ரக ராணித் தேனீக்களை உற்பத்தி செய்யும் முறை
- செயற்கை முறையில் உணவளித்தல் மற்றும் பொருளாதார கணக்கீடு பற்றிய தொழில்நுட்பங்கள்
தேனீ வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் நாமக்கல், வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகின்ற 22ம் தேதி காலை, 9:30 மணிக்கு நடை பெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்கலாம். கட்டணமாக ரூ.290. செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 04286 – 266345, 266650 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் தெரிவித்தார்.
Share your comments