ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக், இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்டோரை இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இரண்டாவது கடை திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இப்போது வரை, ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் ஆன்லைனில் அல்லது மறுவிற்பனையாளர்களின் (retailers) மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். செவ்வாய் கிழமையான இன்று நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்டோர் திறப்பு விழாவிற்கு நூற்றுக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையான இந்தியாவில் ஆப்பிள் தனது சில்லறை விற்பனையை ஆழப்படுத்த முயற்சிக்கும் நோக்கத்தில் புதிய கடைகள் வந்துள்ளன. 95% -க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் நிலையில், இந்திய சந்தையில் ஐபோன் மீதும் வாடிக்கையாளர்களுக்கு இன்றளவும் ஒரு மவுசு இருக்கத்தான் செய்கிறது.
ஆப்பிள் தனது விநியோகச் சங்கிலிகளை சீனாவிலிருந்து பின்வாங்கும் நிலையில், ஐபோனின் உற்பத்தித் தளமாக இந்தியாவும் உயர்ந்து வருகிறது. மொத்த ஐபோன் உற்பத்தியில் இந்தியா இப்போது 5% பங்கு வகிக்கிறது.
ஆனால் நிபுணர்கள் கூறுகையில், கடைகள் ஒரு முக்கியமான பிராண்டிங் உத்தியாக இருந்தாலும், அவை இந்தியாவில் ஆப்பிள் விற்பனையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், இந்தியாவில் வளர்ந்து வரும் "பிரீமியம் ஸ்மார்ட்போன்" சந்தையில் ஆப்பிள் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம் என்று மற்றவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"நீங்கள் ஆப்பிள் ஸ்டோரைத் தொடங்கும்போது, உங்கள் பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறீர்கள். அது விற்பனையை அதிகரிக்காமல் போகலாம், ஆனால் இது ஆப்பிள் சுற்றுச்சூழல் அமைப்பிற்கு அதிகமான மக்களை ஈர்க்கும்" என்று தொழில்நுட்ப ஆய்வாளர் நவ்கேந்தர் சிங் தெரிவித்து உள்ளார்.
ஆப்பிள் நீண்ட காலமாக இந்தியாவில் ஃபிசிக்கல் ரீடெய்ல் ஸ்டோர்களைத் திறக்க முயற்சி செய்து வருகிறது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தள்ளிப்போனது. ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்தார். அதன்பின் ஏறத்தாழ 7 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் மீண்டும் டிம் குக் இந்தியா வந்துள்ளார்.
நேற்றைய தினம் டிம் குக், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்துடன் ஒரு பிரபலமான இந்திய சிற்றுண்டி - வடா பாவ் சாப்பிடும் படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றது.
டிம் குக் தனது இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐடி துணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரையும் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து பிரதமரின் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Share your comments