சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க கடைசி தேதியை நவம்பர் 22 வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால், விவசாயிகள் தரப்பில் பயிர் காப்பீடு மீதான நம்பிக்கை குறைந்து வருவதோடு, பயிர் காப்பீடு தொடர்பாக விரக்தியான மனநிலையிலும் இருப்பதே காண முடிகிறது.
பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு பெறுவதில் உள்ள நடைமுறைகள் அனைத்து விவசாயிகளுக்கும் உகந்ததாக இல்லை என்பதோடு, உரிய நேரத்தில் இழப்பீடு கைக்கு வந்து சேர்வதும் இல்லை என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக கிரிஷி ஜாக்ரான் டெல்டா பகுதி விவசாயிகளிடம் மேற்கொண்ட பேட்டிகளில், அனைவரும் ஒரு சேர வைத்த கோரிக்கை என்னவென்றால், வாகனங்களுக்கான காப்பீடு, மனிதர்களின் ஆயுள் காப்பீடு போல் தனி நபர் பயிர் காப்பீடு வந்தால் மட்டுமே இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிப்படையும் விவசாயிகள் முழுமையாக மீள முடியும் எனத் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் பனையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ் கூறுகையில், “ இப்ப இருக்கிற பயிர் காப்பீடு நடைமுறை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இல்லை என்பது தான் என் கருத்து. காரணம் ஏன் என்று கேட்டால், ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் விளைச்சல் எப்படி இருக்கிறது என்று சேட்டிலைட் மூலமாக சேகரிப்படும் புகைப்படம் தொடர்பான தகவல்கள் புள்ளியியல் துறை மூலமாக வேளாண் துறையிடம் சமர்பிக்கப்படுகிறது. இதன் பின் அப்பகுதிக்கான இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இத்தகவல்கள் பரிமாறப்படுகிறது”.
பயிர் காப்பீடு செய்த விவசாயி இழப்பீடு கோரும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட விவசாயிக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் நாங்கள் நேரடியாக கள ஆய்வு வருகிறோம் என தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆய்வுக்கு வருபவர்கள் பயிரை அறுத்து அதை எடைப் போடுகிறார்கள். அதன் சராசரியை வைத்து தான், அப்பகுதியில் இவ்வளவு விளைச்சல், இவ்வளவு சேதம் என கூறுகிறார்கள். இந்த முறை எனக்கு திருப்திகரமாக இல்லை” என்றார்.
காமராஜ் மேலும் தெரிவிக்கையில், “நிவர் புயலின் போது என்னுடைய வயலில் பயிர் முழுவதும் மடிந்துவிட்டது. ஆனால், பக்கத்தில் உள்ள நிலத்தில் பாதிப்பு இல்லை. ஆய்வுக்கு வருபவர்கள் பக்கத்தில் உள்ள விளைச்சலை காமித்து என்னுடைய பயிர் காப்பீடு கோரிக்கையை நிராகரிக்கத்தனர். இப்போது வளர்ந்து உள்ள தொழில் நுட்பக்காலத்தில், பயிர் காப்பீடு நடைமுறையை மேம்படுத்த அரசும், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் முன் வர வேண்டும். தனிநபர் இன்சூரன்ஸ் மட்டுமே எங்களது நீண்டக்கால கோரிக்கையாக இருக்கு. ஆனால், அதை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என அரசின் சார்பில் தொடர்ந்து கூறப்படுவதற்கான காரணம் புரியவில்லை”.
தொடர்ந்து 5 நாட்களா? 12 மாவட்டங்களுக்கு IMD கனமழை எச்சரிக்கை
“தனிநபர் பயிர் காப்பீடு கோரிக்கையினை அரசு மறுபரீசிலனை செய்து நடைமுறைப் படுத்தினால் மட்டுமே, விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு மீது முழு நம்பிக்கை வரும். இதை சரி செய்யவில்லை என்றால், விவசாயத்தில் புதிய தலைமுறையினர் இறங்கவே தயங்குவார்கள்” எனவும் தெரிவித்தார்.
திருவையாறு பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி சிவா கூறுகையில், ”ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு வருடாந்திர மழைப்பொழிவு பற்றாக்குறையினை வைத்து இழப்பீடு வழங்கும் நடைமுறை இருந்தது. அது ஒரளவுக்கு பலன் தந்தது, தற்போது அந்த திட்டம் நடைமுறையில் இல்லை. அதே நேரத்தில் கடந்த 3 வருடமாக PMFBY பயிர் காப்பீடு நடைமுறையில் பல குளறுபடி உள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் எந்த பக்கம் பாதிப்போ, அங்கே இழப்பீடு கிடைப்பதில்லை. பாதிப்பே இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் இழப்பீடு கிடைத்துள்ளது”.
” போன சம்பா சாகுபடியின் போது, என்னுடைய பாதிக்கப்பட்ட நிலம் தொடர்பான புகைப்படம் சென்னை பேரிடர் நிவாரணத்திற்கு அனுப்பப்பட்டது. நானும், இழப்பீடு கிடைக்கும் என முழு நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது, இழப்பீடு தொகை ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு பெறுவதில் அரசியல் பிரமுகர்களின் தலையீடும் பெரிய அளவில் உள்ளது என்பதோடு தற்போதைய பயிர் காப்பீடு நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. தனிநபர் பயிர் காப்பீடு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால், என் நிலம் பாதிக்கப்பட்டால் அதற்கான இழப்பீட்டை நான் பெறுவேன். பக்கத்து நிலத்தில் விளைச்சல் நன்றாக இருந்தால் பாதிக்கப்பட்ட எனக்கு இழப்பீடு கிடைக்காது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சங்கர் என்கிற விவசாயி கூறுகையில், “இன்சூரன்ஸ் கட்டுங்கள் என விவசாயிகளை அறிவுறுத்துவதில் அரசு காட்டுகிற ஆர்வம், பயிர் சேதத்தின் போது துளியும் இல்லை. பயிர் இன்சூரன்ஸ் என்பது மிகவும் தேவையான ஒன்று தான், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் முறை தான் சரியில்லை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
வேளாண் தொழிலில் அனுபவம் வாய்ந்தவரும், முன்னாள் தமிழ் பேராசிரியருமான சுந்தரசேன் கூறுகையில், “கடந்த 3 வருஷமா நான் பயிர் காப்பீடு பண்ணியிருக்கேன். என் நிலத்தில் விளைச்சல் பாதிப்பு இருந்தும் ஒரு முறைக்கூட இழப்பீடு பெற முடியவில்லை. வேளாண் அதிகாரிகள் ஒரு சில விவசாய சங்கங்களின் பேச்சைக் கேட்டு தீர்மானிக்காமல், நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும்.”
இன்னொரு விஷயம், பயிர் சேதத்தை அளவிட அதிகாரிகள் வருகைத் தருகையில் குறிப்பிட்ட விவசாயிக்கு மட்டும் தகவல் தெரிவிக்காமல், அப்பகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பொதுவாக தெரிவிக்க வேண்டும்” எனவும் தனது கருத்தை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தை சேர்ந்த சிறு, குறு விவசாயி பஞ்சரதம் பயிர் காப்பீடு தொடர்பாக தெரிவிக்கையில், ”முதலில் பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு செய்த அரசுக்கு நன்றி. போன சம்பா பருவத்தில் என் நிலத்தில் முழங்கால் அளவு தண்ணீர். பயிர் எல்லாம் கரைஞ்சு போய், அதை மீட்டெடுக்கவே நான் அவ்வளவு பாடுப்பட்டேன். ஆனால் எனக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் VAO, வேளாண் அதிகாரிகள் நேரில் நிலத்தை பார்வையிட்டு போட்டோ எல்லாம் எடுத்தாங்க, இருந்தும் ஒரு பயனில்லை”.
“பருவநிலை மாற்றத்தால் பூச்சிகளின் தாக்குதலும் இப்போ அதிகமாயிருக்கு. அதையும் இன்சூரன்ஸ்ல சேர்த்தா கொஞ்சம் நல்லா இருக்கும். எல்லோருடைய நிலமும் பாதிச்சா தான் இழப்பீடு என இல்லாமல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் முழு இழப்பீடு கிடைக்கிற மாதிரி நடைமுறையை மேம்படுத்த வேண்டும்” என்றார்.
மேற்குறிப்பிட்ட பேட்டிகள் அனைத்தும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போலத் தான். அரசும் விவசாயிகளின் தனிநபர் பயிர் காப்பீடு தொடர்பான கோரிக்கையினை தீவிரமாக மறுபரீசிலனை செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது எனலாம்.
இதையும் காண்க:
Share your comments