விஜயநகரத்தில் உள்ள காஸ்பா மாநகராட்சி உயர்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் குழு விவசாயிகளை பாம்புக்கடியில் இருந்து பாதுகாக்கும் வகையில், 'உயிர் காக்கும் குச்சி' உருவாக்கியுள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம் பகுதிகளில் ஏற்படும் விவசாயிகளின் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பாம்புக்கடி விளங்குகிறது. இந்நிலையில் தான் பள்ளி மாணவர்கள் குழு ஒன்று “உயிர் காக்கும் குச்சி” என்கிற கருவியினை உருவாக்கியுள்ளனர்.
லித்தியம் அயன் பேட்டரி, மோட்டார் மற்றும் சுவிட்ச் இன் சர்க்யூட் ஆகியவற்றைக் கொண்ட குச்சி, தரையிலிருந்து ஐந்து அடி வரை சீரற்ற அதிர்வுகளை உருவாக்குகிறது. மாணவர்களின் கூற்றுப்படி, இந்த குச்சியின் மூலம் ஏற்படும் அதிர்வுகள் பாம்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் விஷ ஊர்வனங்கள் நிலத்தில் வேலை செய்யும் விவசாயிகளை நெருங்காமல் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு பாம்பு கடித்தால் கூட, குச்சியில் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் இரண்டு ஆயுர்வேத மாத்திரைகள் அடங்கிய பை இருக்கும். விவசாயிகளை மருத்துவமனைக்கு மாற்றும் வரை இந்த மாத்திரைகளை உட்கொண்டால் பாம்புக்கடி பாதிப்பு குறையும்.
கஸ்பா உயர்நிலைப் பள்ளியின் உயிரியல் ஆசிரியரும், குழு ஆசிரியருமான எம்.என்.பி.பாக்ய லட்சுமி திட்ட விவரங்களை குறித்து தெரிவிக்கையில், தொடக்கத்தில் விவசாய வயல்களுக்குச் சென்று 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் கலந்துரையாடியதாகக் கூறினார்.
"எங்கள் கள ஆய்வானது, பாம்புகளுக்கு எதிராக விவசாயிகள் எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியது. பாம்புகளை விரட்ட விவசாயிகள் தற்போது கம்பூட் அணிதல், பலத்த சத்தம் எழுப்புதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாம்புகளின் குணாதிசயங்கள், ஆக்கிரமிப்புத் தன்மை மற்றும் வாழிடங்கள் மற்றும் கடித்ததற்குப் பின்னால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கேள்வித்தாள் மூலம் விவசாயிகளின் பதில்களைக் கேட்டோம். இந்த விஷ ஊர்வனங்கள் பூமியில் ஏற்படும் அதிர்வுகளை உணர முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிறுவப்பட்டதால், அந்த திசையில் எங்கள் திட்டத்தை நாங்கள் திட்டமிட துவங்கினோம்" என்று பாக்ய லட்சுமி கூறினார்.
அடுத்த கட்ட வளர்ச்சியில் இணைத்துக்கொள்ளக்கூடிய முன்மாதிரி குறித்த பல்வேறு ஆலோசனைகளை பெற்றதாக உயிரியல் ஆசிரியர் மேலும் கூறினார். "சிலர் குச்சியை உறுதியாக்க பிளாஸ்டிக்குக்கு பதிலாக இரும்பை பயன்படுத்த பரிந்துரைத்தாலும், சிலர் குச்சியை மரத்தால் தயார் செய்யச் சொன்னார்கள்" என்று பாக்ய லட்சுமி கூறினார்.
இயற்பியல் ஆசிரியை வி.ரத்ன குமாரியும் மாணவர்களுக்கு திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்த உதவினார். பி.ரவிதேஜா, டி.யஸ்வந்த், என்.டேனியல் ராஜ், டி.சந்தீப் (பழைய மாணவர்) உள்ளிட்ட மாணவர் குழு, இந்த கருவியை தயாரிக்க தங்களுக்கு ரூ.150 செலவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
"குச்சியில் இணைக்கப்பட்ட ஒரு விளக்கு மாலை/இரவு நேர பொழுதுகளிலும் அல்லது அதிகாலையில் கூட பயனுள்ளதாக இருக்கும்." பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யக்கூடியவை, மேலும் குறைந்த செலவிலான கருவி என்பதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும். குச்சியில் மருத்துவம் தொடர்பான ஒன்றை ஒருங்கிணைக்க இந்த செயல்பாட்டில் பல அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களை சந்தித்தோம். இந்த செயல்பாட்டில், அவர்கள் அஷ்டாங்க ஆயுர்வேதத்தின் ஒரு பகுதியான பில்வாடி குடிகாவை பரிந்துரைத்தனர்," என்று குழு கூறியது.
மாநில அரசால் நடத்தப்பட்ட மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கூட இந்த கருவியின் முன்மாதிரி காட்சிப்படுத்தப்பட்டது. இதனை கண்ட அதிகாரிகள், விவசாயிகள் மாணவர்கள் குழு மற்றும் ஆசிரியர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்க:
டெண்டரில் இனி முறைகேடு செய்ய இயலாதா? தமிழக அரசு போட்ட பலே ஸ்கெட்ச்
சிறு, குறு விவசாயிகளுக்கு டபுள் தமக்கா.. PM kisan நிதியுடன் ஏக்கருக்கு ரூ.5000 நிதியுதவி!
Share your comments