உலகளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNFPA) சார்பில் “உலக மக்கள்தொகை அறிக்கை, 2023” வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிட்டுள்ள தரவுகளின் படி, ''மக்கள் தொகையில் இந்தியா, இந்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகை 142.86 கோடியாக இருக்கும். அதேநேரத்தில், சீனாவில் மக்கள் தொகை 142.57 கோடியாக இருக்கும்.
சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்கா 340 மில்லியன்(34 கோடி) மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த தரவுகள் அனைத்தும் பிப்ரவரி 2023 நிலவரப்படி கணக்கிடப்பட்டுள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் இந்தியா விரைவில் சீனாவை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உலகளாவிய அமைப்பின் சமீபத்திய அறிக்கையும் அதே உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த மாற்றம் எப்போது நிகழும் என்பதற்கான தேதியை சரியாக குறிப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா கடந்த 2011-ஆம் ஆண்டு எடுத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைப்பெற்று வரும்நிலையில் 2011 க்கு பிறகு 2021- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்தக்காலக்கட்டத்தில் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்ததால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைப்பெறவில்லை. மக்கள் தொகை தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் பழையதாக இருப்பதால் எந்த தேதியில் இந்த மாற்றம் நிகழும் என்பதை உறுதியாக கூற இயலாது என ஐநா மக்கள்தொகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை 804.50 கோடியாக இருக்கும். இதில், மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகையை இந்தியாவும், சீனாவுமே ஆக்கிரமித்திருக்கும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள்தொகை வளர்ச்சி இந்தியா மற்றும் சீனாவில் குறைந்து வருகின்றனர். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் மிக வேகமாக குறைந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு தசாப்தங்களில் முதல் முறையாக சீனாவின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவின் வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி 2011 முதல் சராசரியாக 1.2 சதவீதமாக உள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் 1.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான கவலைகள் பொது மக்களில் பெரும் பகுதியினருக்குள் ஊடுருவியுள்ளன என்று UNFPA இந்தியாவின் பிரதிநிதி ஆண்ட்ரியா வோஜ்னர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
Swiss Biotech Day- இந்தியாவிலிருந்து தமிழக அரசுக்கு மட்டும் அழைப்பு ஏன்?
Share your comments