நீரினின்றி அமையாது உலகு என வள்ளுவனின் குறளுக்கேற்ப, மனிதர்களின் வாழ்விலும் நீர் முக்கிய பங்காற்றுக்கிறது. ஆனால், அதை நாம் சரிவர கையாளாத சூழ்நிலையில் பல்வேறு வகையில் தொடர்ச்சியாக அவதியடைந்து வருகிறோம்.
இதனிடையே, மனிதர்களும் முக்கியமாக வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் நீர் வளத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, வேளாண் ஆலோசகரான (CREA சூழல் மற்றும் வேளாண்மை ஆய்வு மையம்) முனைவர் கே.சி.சிவ பாலன் மற்றும் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை பேராசிரியருமான (பயிர் வினையியல்) முனைவர் எஸ்.நித்திலாவும் ஆய்வுகளின் அடிப்படையில் சில தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
நம் நாடு உலக அளவில் 17 சதவீத மக்கள் தொகையையும், நீர் ஆதாரத்தில் 4 சதவீத அளவையும் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஆய்வின் படி இந்தியாவில் ஆண்டு முழுவதும் பெய்யும் மழையளவில் 8 சதவீதம் மட்டுமே சேமிக்கப்படுகிறது. மேலும் சீனா,அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை காட்டிலும் 3-5 மடங்கு அதிக அளவு நீரைக்கொண்டே தானிய உற்பத்தி நடைபெறுகிறது.
பருவ மழையினை சரிவர சேமிக்காத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை பெருமளவு உபயோகிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறையும் பொழுது தண்ணீர் பற்றாக்குறை, வேளாண்மை சாகுபடி குறைதல், கால்நடைகளுக்கான நீர் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பருவம் தவறி பெய்யும் மழையினால் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை, பயிர் உற்பத்தி பாதிப்பு போன்ற சூழ்நிலை உருவாகிறது.
எனவே நீர் சேமிப்பை வலியுறுத்தும் வண்ணம் தண்ணீர் பற்றாக்குறை அபாயம் உள்ள வட்டாரங்களில் அரசுத்துறைகள், வேளாண் அறிவியல் நிலையங்கள், தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம், கள பயிற்சிகள், கலந்துரையாடல், பேரணிகள்,கலை நிகழ்ச்சிகள் மூலமாக நீர் சேமிப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகிறது.
நீர் சேமிப்பு 5 முக்கிய அம்சங்கள்:
1.மழைநீர் சேகரிப்பு:
பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் கால்நடைகளுக்கும், நீர் பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மழைநீர் சேமிப்பு அவசியம். குடியிருப்பு பகுதிகளில் மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு மூலமாகவும், உறிஞ்சுகுழாய்கள் மூலமாகவும் மழைநீரை சேமிக்க முடியும். சேமித்த மழைநீரை வடிகட்டி காய்ச்சி குடிநீராக பயன்படுத்த முடியும்.
Read also: விவசாயத்துடன் அலங்கார மீன் வளர்ப்பில் அசத்தும் தூத்துக்குடி சரவணன்!
2.பாரம்பரிய நீர் ஆதாரங்களைபுதுப்பித்தல்:
இந்தியாவின் மக்கள் தொகையில் (ஏறக்குறைய 12 சதவீதம்) 160 மில்லியன் மக்களுக்கு சுத்தமான நீர் பயன்பாடு இல்லாத சூழ்நிலை உள்ளது. நமது நீர் ஆதாரங்களான ஊரணி,குளம், குட்டை, ஆறு,நதி போன்றவற்றை முறையாக பராமரிக்காத காரணத்தாலும், ஆக்கிரமிப்பு மூலமாகவும், நீர் மாசுபடுவதன் மூலமாகவும் நீர் நிலைகளில் உள்ள நீரை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. எனவே பாரம்பரிய நீர்நிலைகளை புதுப்பிக்கவும், குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தி பராமரிக்கவும் பொதுமக்கள் முன்வர வேண்டும்.
3.நீர்பிடிப்பு முகமைகள் அமைத்தல்
நம் நாட்டில் 85 மி.ஹெக்டர் மானாவாரி நிலங்களாக உள்ளது. நீர் தேக்க மேம்பாட்டு பணிகள் மூலம் மானாவாரி பகுதிகளிலும் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். நீர்பிடிப்பு முகமைகள் அமைப்பதன் மூலமும் கசிவு நீர் குட்டை,பண்ணைகுட்டைகள் அமைத்தல்,தடுப்பணை கட்டுதல் போன்ற பணிகளின் மூலம் வழிந்தோடி வரும் தண்ணீரை தேக்கவும், சேமிக்கவும் முடியும். நீர்வள மேலாண்மை மூலம் மண் அரிமானம் தடுக்கப்பட்டு மண் வளத்தை பாதுகாக்க முடியும்.
Read also: வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு பட்டயப்படிப்பு- அரசு சார்பில் 50 % நிதியுதவி
4.ஆழ்துளை கிணறுகளின் மழைநீர் சேகரிப்பு:
நமது நீர் தேவை அளவானது 40 சதவீதம் நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே உள்ளது. பயன்பாட்டில் உள்ள மற்றும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர் மட்ட சரிவை ஈடு செய்ய முடியும். நகர்புறங்களில் வீடுகளின் மேற்கூரையிலிருந்து வழிந்தோடி வரும் நீரை குழாய்கள் மூலமாக சேமிப்பு குழிகளுக்கு எடுத்து செல்லலாம். சேமிப்பு குழிகளில் அமைக்கப்பட்ட பெரியகற்கள், ஜல்லிகற்கள் மற்றும் மணல் அடுக்குகளில் மழைநீர் வடிகட்டப்படும்.
சேமிப்பு குழிகளின் கீழ் பகுதியிலிருந்து ஆழ்துளை கிணறு திறந்த கிணற்றுடன் இணைக்கும் குழாய் பொறுத்தப்பட்டு மழைநீர் சேகரிக்கப்படுகிறது. இதே முறையில் கிராமப்புறங்களில் தோட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீரை சேகரித்து வேளாண்மைக்கு பயன்படுத்த முடியும்.
5.மரம் வளர்த்தல்:
நம் சுற்றுச்சூழலை தூய்மை ஆக்குபவை மரங்களே ஆகும். தொழிற்சாலைகள்,வாகனங்களின் புகை காரணமாக ஏற்படும் மாசினை மரவளர்ப்பு மூலம் குறைக்க முடியும். மரங்கள் மண்அரிப்பை தடுக்கின்றன. நீர் ஆவியாகி,மேகமாகி மழையாக பெய்ய துணைப்புரிகின்றன. மனிதர்களுக்கு தேவையான பூ,காய்,கனி,போன்ற உணவுகளை மரங்கள் தருவதுடன் கட்டுமானப் பொருள் முதல் தீக்குச்சி வரை பலபொருட்களை தயாரிக்கவும் உதவுகின்றன. மேலும் பறவைகளுக்கும்,விலங்குகளுக்கும் புகலிடமாகவும் விளங்குகின்றன. எனவே, ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளான மரங்களை வளர்ப்பது,வனங்களை காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பது நமது அனைவரது கடமையாகும்.
(மேற்குறிப்பிட்ட அனைத்து தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/முரண்கள் இருப்பின் நீங்கள் தொடர்புக் கொள்ள வேண்டிய இமெயில் முகவரி : shiv_balan@yahoo.com)
Read also: சொட்டு நீர் பாசனம் அமைக்க சரியான நேரம்- மானியத்தை அறிவித்த ஆட்சியர்
Share your comments