ஒடிசாவில் ஒரு பண்ணையிலிருந்து பழச்சந்தையில் ஒரு கிலோ ரூ. 2.5 லட்சம் வரை விற்கப்படும் மாம்பழங்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவத்திற்கு காரணமாக அமைந்தது சமூக வலைத்தள பதிவு தான் என்றால் உங்களலால் நம்ப இயலுமா?
ஒடிசாவின் நுவாபாடா மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் ஒரு விவசாயி. தனது பண்ணையில் 38 வகையான மாம்பழங்களை பயிரிட்டுள்ளார். தனது மாம்பழங்களின் தனி மதிப்பை உணர்ந்து, உற்சாகத்தில் மூழ்கிய அவர், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்.
திருட்டு நடந்த சில நாட்களுக்கு முன்னர் தான், பண்ணை உரிமையாளர் லட்சுமி தனது பண்ணையில் விளையும் மாம்பழங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக பழச்சந்தையில் சக்கைப்போடு போடும் விலையுயர்ந்த மா மரத்தின் புகைப்படத்தையும், அதன் பழங்களையும் பதிவிட்டு பெருமையாக பதிவிட்டுள்ளார்.
புகைப்படம் வெளியிடப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, அவரது பண்ணையில் இருந்து நான்கு மதிப்புமிக்க விலையுயர்ந்த மாம்பழங்கள் திருடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி நாராயணன் ஊரே கூட்டி புலம்ப ஆரம்பித்துவிட்டார். இந்தத் திருட்டு சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி, ஒடிசா முழுவதும் காட்டுத்தீயாக பரவியது.
ஏற்கெனவே விவசாயிகளுக்கு சந்தையில் விளை பொருட்கள் சரியாக விலைப்போகாமல் அவதிப்படும் நிலையில், கிலோவிற்கு ரூபாய் 2.5 லட்சம் போகும் விலையுயர்ந்த மாம்பழம் திருடப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகி உள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சமீபத்தில், உலகின் மிக விலையுயர்ந்த ஜப்பானிய மியாசாகி மாம்பழம் சமூக ஊடகங்களில் ஹிட் ஆனது. ஒரு மாம்பழம் மட்டுமே சுமார் 40,000-க்கு விலை போகும் அளவிற்கு பிரபலமானது. சிகப்பு நிறத்தோலுடன் காட்சியளிக்கும் இந்த மாம்பழம் சுவைகளின் அரசன் எனவும் வர்ணிக்கப்படுகிறது.
மாம்பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியா:
2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மாம்பழ ஏற்றுமதியின் மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் விளையும் மாம்பழங்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. அமெரிக்காவுக்கான இந்தியாவின் அல்போன்சா, கேசர் மற்றும் பங்கன்பள்ளி மாம்பழங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு இதே காலக்கெடுவை விட ஏப்ரல்-ஜூன் சுழற்சியில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
விமானச் சரக்குக் கட்டணங்கள் இயல்பாக்கப்பட்டதால், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு மாம்பழ ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலகில் மாம்பழ உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து சீனா உள்ளது. எனினும், இந்தியா தனது உற்பத்தியில் 1%-க்கும் குறைவாகவே ஏற்றுமதி செய்கிறது.
மேலும் காண்க:
Share your comments