தேசிய பென்ஷன் திட்டம் (NPS) ஓய்வு காலத்தின் போது பென்ஷன் மற்றும் மொத்தமாக ஒரு தொகை பெறுவதற்கு வழி செய்யும் திட்டமாக அமைகிறது. ஓய்வு கால திட்டமிடலுக்கு மிகவும் பொருத்தமான திட்டங்களில் ஒன்றாகவும் என்.பி.எஸ்., கருதப்படுகிறது.
அரசு ஊழியர்கள், தொழில் முறை ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்ட தரப்பினர் இத்திட்டத்தில் இணையலாம். இதில் உள்ள சமபங்கு அம்சம் முக்கிய சாதகமாக கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில், 18 வயது முதல் 70 வயது வரை இணையலாம். என்.பி.எஸ்., திட்டம் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய பலன்களை காண்போம்.
அதிக வாய்ப்பு:
என்.பி.எஸ்., திட்டம் அதன் உறுப்பினர்களுக்கு, தேர்வு செய்வதற்கான பல்வேறு வாய்ப்புகளை அளிக்கிறது. நிர்வகிக்கும் நிதியை தேர்வு செய்வதோடு, சமபங்கு அளவையும் தீர்மானிக்கலாம். மேலும், விரும்பிய நேரத்தில் முதலீடு (Invest) செய்யலாம். முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் கிடையாது.
தம்பதியர் முதலீடு:
சுயதொழில் செய்பவர்களுக்கு இத்திட்டம் ஏற்றது. சுயதொழிலில் ஈடுபட்டுள்ள தம்பதியர், தனித்தனியே கணக்கு துவங்கி முதலீடு செய்யலாம். இதன் மூலம் தனியே வரிச்சலுகை பெறலாம் என்பதோடு, ஓய்வு காலத்தில் அதிக தொகையும், அதிக பென்ஷனும் கிடைக்கும்.
ஊழியர் நலன்:
என்.பி.எஸ்., வசதியை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கலாம். இதன் மூலம் ஊழியர்களின் விசுவாசத்தை பெறலாம். இது, ஊழியர்களின் எதிர்காலத்திற்கு உதவியாக அமையும் என்பதோடு, நிறுவனமும் இதன் வாயிலாக வர்த்தக செலவின் கீழ் வரிச் சலுகை பெறும் வாய்ப்பு இருக்கிறது.
வரிச் சலுகை:
சுய வேலை செய்பவர்கள் இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு, மொத்த ஆண்டு வருமானத்தில் 20 சதவீதம் வரை வரிச் சலுகை கோரலாம். ஊதியம் பெறும் ஊழியர்கள், 80 ‘சி’ பிரிவின் கீழ் வரிச் சலுகை கோரலாம். மேலும், இன்னொரு பிரிவின் கீழ் கூடுதலாக 50 ஆயிரத்திற்கும் சலுகை பெறலாம்.
எதிர்கால பாதுகாப்பு:
எந்த ஒரு வர்த்தகமும் இடர்மிக்கது. தொழில்முனைவோர் இந்த இடரை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றாலும், என்.பி.எஸ்., திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வர்த்தக இடரை மீறி, ஓய்வு காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு: ஆகஸ்ட் 1 முதல் அமல்!
வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் புதிய திட்டம்!
Share your comments