கேரளாவில் கர்பிணி யானை ஒன்று கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. கடந்த வாரம் அரங்கேரிய இந்த கொடூர சம்பவம் குறித்து கேரளா வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் தனது பேஸ்புக் ( Facebook ) பக்கத்தில் பதிவிட அது வைரலாகியுள்ளது.
காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அன்னாச்சி பழத்துக்குள் பட்டாசுகளை மறைத்து வைத்து உணவாக தந்ததாக தெரிகிறது. இதை உண்ட யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடிக்க, அதன் வாய் மற்றும் நாக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூரச் செயலுக்கு ஆளான யானை இன்னும் 18 அல்லது 20 மாதங்களுக்குள் குட்டியை ஈனும் நிலையில் இருந்தது.
வலியுடன் கிராமத்தின் தெருக்களில் ஓடியபோதும் யானை யாரையும் தாக்கவில்லை, எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. பட்டாசு வாய் மற்றும் நாக்கில் ஏற்படுத்திய படுகாயத்தால் அந்த யானை உணவு உட்கொள்ள முடியாமல் சில நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளது.
காயத்தின் மீது ஈ உள்ளிட்ட பூச்சிகள் அண்டாமல் இருக்க, யானை ஆற்றில் நின்று தண்ணீரை வாயில் தெளித்துக்கொண்டே இருந்துள்ளது. மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை, தகவல் அறிந்த வனத்துறையினர் சுரேந்திரன், நீலகந்தன் என்ற இரு கும்கி யானைகளை அழைத்துசென்று, கர்ப்பிணி யானையை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், கர்ப்பிணி யானை இறந்த நிலையில் இருந்துள்ளது. இதனை அடுத்து, அப்பகுதியிலேயே யானையை அதிகாரிகள் இறுதி மரியாதை செய்து எரியூட்டினர். வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணனின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி வருகிறது.
Share your comments