வருமான வரி சேமிப்பிற்கான வழிகள், வரிச் சலுகை பெற உதவுவதோடு, நிதி வளத்தை பெருக்கும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும். வருமான வரி செலுத்தும் வரம்பிற்குள் வருபவர்கள், வரிச் சலுகை பெறுவதற்கான பல்வேறு வழிகள் இருக்கின்றன. பரவலாக அறியப்பட்ட வருமான வரிச் சட்டத்தின், ‘80 சி’ பிரிவின் கீழ் குறிப்பிட்ட முதலீடுகள், காப்பீடு (Insurance) போன்றவை வரிச்சலுகை பெறுவதற்கு உரியதாக அமைகின்றன. இதே போல, வீட்டுக் கடன், மருத்துவ காப்பீடு போன்றவையும் வரிச் சலுகை பெற உதவும்.
வரிச் சலுகை
வரி செலுத்துபவர்கள் இந்த வாய்ப்புகளில் தங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து கொள்ளலாம் என்றாலும், இவற்றை சரியாக திட்டமிடுவது மிகவும் அவசியம். வரிச் சலுகைக்கு ஏற்ற வாய்ப்புகளை தேர்வு செய்வதோடு, அவை நிதி இலக்குகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்.
நிதி வளம் (Financial services)
வருமான வரி திட்டமிடலை துவக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என நிதி வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர். வரிச் சலுகைக்கான வாய்ப்புகள் நிதி இலக்குகளுக்கும் உதவும் வகையில் அமைய திட்டமிடல் உதவும் என்கின்றனர். உதாரணமாக, 80 சி பிரிவின் கீழ், பி.எப்., பி.பி.எப்., ஐந்து ஆண்டு வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்டவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றில் பெரும்பாலான முதலீடுகள் சிறுசேமிப்பு (Savings) திட்டத்தின் கீழ் வருகின்றன. இந்த திட்டங்கள் சேமிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டவை. எனவே, ஓய்வூதிய பாதுகாப்பிற்கு உதவும் பி.எப்., அல்லது பி.பி.எப்., திட்டங்களில் செய்யும் முதலீடு வரிச் சலுகை பெற்றுத் தருவதோடு, நீண்ட கால நிதி இலக்கிற்கும் கைகொடுக்கும்.
மியூச்சுவல் பண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ்., தேசிய பென்ஷன் திட்டம் உள்ளிட்டவையும் 80 சி பிரிவின் கீழ் வரும். இந்த பிரிவின் கீழ் பொருந்தும் வரம்பிற்கு ஏற்ப, முதலீடுகளை அமைத்துக் கொண்டால் வரிச் சலுகை, நிதி வளம் எனும் இரட்டிப்பு பலனை பெறலாம். எனினும், பழைய முறையிலான வருமான வரி திட்டத்தை தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
வேறு காரணங்களுக்காக புதிய வருமான வரி முறையை தேர்வு செய்திருந்தால், இந்த சலுகைகள் பொருந்தாது. இதே போல, வி.பி.எப்., எனப்படும் தானாக முன்வந்து அதிகம் செலுத்துவதற்கு உள்ள வாய்ப்பையும் பி.எப்., உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சலுகையோடு, ஓய்வு கால நிதியை பெருக்கவும் இது உதவும்.
மருத்துவ காப்பீடு (Medical Insurance)
ஆயுள் காப்பீடு போலவே மருத்துவ காப்பீடும் நிதி திட்டமிடலில் முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. போதுமான மருத்துவ காப்பீடு பெற்றிருப்பது நிதி ஆரோக்கியத்திற்கு வலு சேர்ப்பதோடு, இதற்கான பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறவும் உதவும். பொருந்தக்கூடிய மருத்துவ செலவுகள் மற்றும் பிள்ளைகள் படிப்பு செலவு போன்றவற்றுக்கான கழிவுகளையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையும் வரிச் சலுகை பெற உதவும். இந்த கழிவுகள் தவிர மற்ற அம்சங்களை திட்டமிடலாம். மாத சம்பளம் பெறுபவர் என்றால், தங்கள் ஊதிய அமைப்பையும் வரிச்சலுகை அதிகம் பெறும் வகையில் மாற்றி அமைத்துக்கொள்ள முயற்சிக்கலாம்.
வீட்டு வாடகை போன்ற படிகளுக்கு வரிச் சலுகை உண்டு. சம்பள விகிதம் இவ்விதமாக அமைந்திருப்பது அதிக பலன் தரும். எல்லாவற்றுக்கும் மேல் தாமதிக்காமல், உரிய காலத்தில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதன் மூலம் பலவித அனுகூலங்கள் உண்டு என்பதோடு, தேவையில்லாத அபராதத்தையும் தவிர்க்கலாம். நிதி இலக்குகளை மனதில் கொண்டு வரி சேமிப்புகளை மேற்கொள்வதன் மூலம் அதிக பலன் பெறலாம்.
மேலும் படிக்க
Share your comments