டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மத்திய அரசு நடத்திய 10ம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
தொடரும் போராட்டம் (Protest Continue)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநில விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசு, விவசாயசங்க பிரதிநிதிகளுடன் இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
அமைச்சர்கள் பங்கேற்பு (Ministers Participated)
இதில் மத்திய அரசு சார்பில் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் பங்கேற்றனர். விவசாயிகள் சார்பில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு ரத்து செய்வதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தன.
11ம் கட்டப் பேச்சு (11th Phase Talks)
இதனால், 10-ம் கட்ட பேச்சுவார்த்தையும் எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அதாவது11-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
பேச்சுவார்த்தைக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:-
வேளாண் சட்டங்களை ஏற்கனவே ஒன்றையாண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்துவிட்டதாக மத்திய அரசு கூறியது. வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ரத்து செய்வதில் எந்த உபயோகமும் இல்லை. சட்டத்தை முழுவதும் திரும்பப்பெற வேண்டும்.
வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஒன்றையாண்டுகள் நிறுத்திவைக்கப்பட்டதற்கான உத்தரவுகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், அந்த குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் எனவும் மத்திய அரசு கூறுகிறது.
மத்திய அரசு ஆலோசனை (Federal Government Advice)
விவசாயிகள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என அரசை வலியுறுத்தினோம். இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை தரும்படியும் மத்திய அரசு கேட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் படிக்க...
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!
Share your comments