100 நாள் வேலைத்திட்டம்: அரசின் புதிய அறிவிப்பு, விவசாயிகள் நூதன போராட்டம்: திருச்சியில் பரபரப்பு, மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி, ஓட்டலில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்போவதாகத் தகவல், நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்துள்ள இந்தியா முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
1. 100 நாள் வேலைத்திட்டம்: அரசின் புதிய அறிவிப்பு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொருவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற உரிமை உண்டு என்று தெரிவித்து இருக்கிறது. கிராமங்கள் சார்ந்த சந்தேகங்கள் இருப்பின் ஊராட்சித் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள் குறுக்கீடு செய்தால் தாராளமாக மாவட்டத்தின் குறை தீர் அலுவலரிடம் முறையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. விவசாயிகள் நூதன போராட்டம்: திருச்சியில் பரபரப்பு!
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் மக்காச்சோளம், பருத்தியையும் தரையில் கொட்டி போராட்டம் செய்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த பல்வேறு விவசாயச் சங்கத்தினர் கலந்துகொண்டு தங்களது குறைகளைக் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள ஆறு மற்றும் ஏரிகளின் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பருத்தி மற்றும் மக்காச்சோளத்தினைத் தரையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். விவசாயிகளின் இத்தகைய நூதன ஆர்ப்பாட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
3. கடந்த 122 வருடத்தில் அதிக வெப்பம்: எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்!
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் மே மாதமும் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி மாதத்தில் நிலவிய வானிலை நிலவரங்கள் குறித்து தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நிலவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட 1.73 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
4. மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி!
விவசாய நிலத்திற்கு அடியுரமான டி.ஏ.பி., மேல் உரமான யூரியா ஆகியவற்றை விவசாயிகளுக்கு மானியத்தில் அரசு வழங்கி வருகிந்றது. விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகலினைச் சம்பந்தப்பட்ட உரக்கடைகளில் கொடுத்து, பி.ஓ.எஸ். எனப்படும் இயந்திரத்தில் கைரேகை பதித்து உரங்களைப் பெற்று வருகின்றனர். உரம் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் நகலுடன், தங்களது ஜாதி பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். பொதுப்பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., என்ற பிரிவுகளில் தங்களது வகைப்பாட்டை விவசாயிகள் குறிப்பிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கோவில்பட்டி கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறுகையில், “உரத்துக்கான மானியத்துக்குச் சாதி வகைப்பாடு விவரம் கேட்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதை உடனடியாக நீக்கிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
5. ஹோட்டலில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்போவதாகத் தகவல்!
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. விலை ஏற்றத்தால் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் புதிய விலை சிலிண்டருக்கு 1,118.50 ரூபாயாகவும், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிகச் சிலிண்டர் ஒன்று 2,268 ரூபாயாகவும் விற்கப்பட இருக்கிறது. எனவே, சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதுடன், உணவகங்களிலும் உணவு பொருட்களின் விலை உயர இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6. நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்துள்ள இந்தியா!
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய நிலக்கரி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - பிப்ரவரி காலகட்டத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 784.41 மில்லியன் டன்னை எட்டியுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது 15.10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
7. கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு!
கர்நாடக அணைகளில் இருந்து நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருவதால் மேட்டுர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. இதனால் கடந்த சில நாள்களாகக் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கன அடி நீரும், கபினியிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி நீரும் திறக்கப்பட்டு நீர் வந்துகொண்டிருக்கிறது. எனவே, விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments