1. விவசாய தகவல்கள்

புதிய 17 பயிர் ரகங்கள், விவசாயிகள் பயன் பெற அழைப்பு! விவரம் உள்ளே

Deiva Bindhiya
Deiva Bindhiya
17 new crop varieties, call for farmers to benefit! Details inside

கோவை வேளாண் பல்கலை சார்பில், 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேளாண் பயிர்கள் -9, தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள்-8 என, 17 புதிய ரகங்கள், நான்கு விவசாய தொழில்நுட்பங்கள், மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களை, கோவை வேளாண் பல்கலை செயல் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி (09-02-2022) அன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த புதிய ரகங்களின் விபரம்:

1. நெல் கோ -55

தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகிய கால (115 நாள்) ரகமாகும். எக்டேருக்கு, 6,050 கிலோ மகசூல் வரை கிடைக்கும். மத்திய சன்ன அரிசி ரகம் என்பது குறிப்பிடதக்கது.

2. நெல் ஏ.டி.டீ.57

இது, கார், குறுவை, நவரை மற்றும் கோடை பருவத்துக்கு ஏற்ற ரகமாகும். குறுகிய கால (115 நாள்) ரகம், எக்டேருக்கு, 6,500 கிலோ மகசூல் வரை கிடைக்கும். கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாகும். இதுவும் சன்ன அரிசி ரகம்.

3. நெல் டி.கே.எம்- 15

இது வறட்சி, நீர்பற்றாக்குறை சூழ்நிலையில் வளரக்கூடியது என்பது சிறப்பாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில், செப், அக், மாதங்களில் விதைப்பது நல்லது. குறுகிய கால (115 - 120 நாள்) ரகம, மேலும் எக்டேருக்கு, 5,800 கிலோ மகசூல் வரை கிடைக்கும்.

4. நெல் டி.ஆர்.ஒய்- 5

தமிழகத்தின் குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடியதாகும். குறுகிய கால (115 - 120 நாள்) ரகம், மேலும் மத்திய சன்ன அரிசி ரகமாகும். உவர் நிலங்களுக்கு ஏற்றது என்பது குறிப்பிடதக்கது. எக்டேருக்கு, 5,100 கிலோ மகசூல் கிடைக்கும்.

5. உளுந்து ஏ.டீ.டி-7

இந்த ரகம் தரிசு நிலத்துக்கு ஏற்றதாகும். 60 - 70 நாளில் முதிர்ச்சி அடைந்துவிடும், எக்டேருக்கு, 724 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்கும் என்பது குறிப்பிடதக்கது.

6. பச்சை பயறு, வி.பி.என் 5

கரீப்(ஜூன் - ஜூலை), ரபி(செப்டம்பர், - அக்டோபர்,) மற்றும் கோடை ஆகிய பருவங்களுக்கு ஏற்றதாகும். 70 - 75 நாளில் முதிர்ச்சி அடைந்துவிடும், எக்டேருக்கு 870 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்க வல்லது.

7. நிலக்கடலை வி.ஆர்.ஐ 9

சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய பருவங்களுக்கு ஏற்றதாகும். மார்கழியில் இறவை பயிராக பயிரிடலாம். இது குறுகிய கால ரகம் என்பதும் சிறப்பாகும். 95 - 110 நாள் வயதுடையது, எக்டேருக்கு, 2,500 கிலோ மகசூல் வரை கொடுக்கும். இலைப்புள்ளி, துரு நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.

8. நிலக்கடலை வி.ஆர்.ஐ 10

சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய பருவங்களுக்கு ஏற்றதாகும். மார்கழியில் இறவை பயிராக பயிரிடலாம், மேலும் இது குறுகிய கால ரகம். எக்டேருக்கு, 2,530 கிலோ மகசூல் வரை கொடுக்கும். எண்ணெய் சத்து, 45 சதவீதம் உடையது என்பது குறிப்பிடதக்கது. இலைப்புள்ளி, துரு நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.

9. கரும்பு கோ.ஜி7

நல்ல மண் வளத்தில், சராசரியாக, எக்டேருக்கு, 134 டன்; உவர் நிலத்தில், எக்டேருக்கு, 126 டன் மகசூல் கொடுக்க வல்லது. சிவப்பு அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது, என்பது சிறப்பாகும்.

10. வாழை கோ3

கற்பூரவள்ளி மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டதாகும். வயது, 13 மாதங்கள் என்பது குறிப்பிடதக்கது. வாழைக்குலையின் எடை சராசரியாக, 12 கிலோ வரை இருக்கும். இது வேர் நுண்புழு தாக்குதலை தாங்கி வளரக்கூடியது என்பது சிறப்பு.

11. பலா பி.கே.எம்-3

மார்ச் - மே, நவம்பர் முதல் டிசம்பர், என இரு அறுவடைகள் செய்யலாம். ஒரு பழம், 21 கிலோ எடை வரை இருக்கும். ஒரு மரத்தில், 2.3 டன் பழங்கள் வரை காய்க்கும் என்பது குறிப்பிடதக்கது. மரத்துக்கு சுமார் 106 பழங்கள் கிடைக்கும். எக்டேருக்கு, 156 மரங்கள் நட்டு பயன்பெறலாம்.

12. நாவல் பி.கே.எம் 1

வறண்ட பயன்படாத நிலங்களில், பயிர் செய்ய நல்ல ரகமாகும். ஒரு பழத்தின் எடை, 17 கிராம் வரை இருக்கும். மரத்துக்கு, 82 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மருத்துவ குணங்களான ஆண்டி ஆக்சிடண்ட், முக்கிய தாதுக்கள், இதில் இடம்பெற்றுள்ளன.

13. கத்தரி எம்.டி.யூ -2

இந்த ரகம், 140 நாள் வயதுடையது. ஜூன் - செப்டம்பர், மற்றும் நவம்பர், பிப்ரவரி, ஆகிய மாதங்களில் பயிரிட ஏற்றதாகும். சராசரியாக, எக்டேருக்கு, 31 டன் மகசூல் கொடுக்கும். தண்டு துளைப்பான், பூஞ்ஞாண நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.

14. அவரை கோ 15

கொம்பில் வளரக்கூடிய ரகமாகும். செடிக்கு, 14 கிலோ மகசூல் கொடுக்க வல்லது. பச்சை அவரைகள் நட்ட, 70வது நாள் முதல் காய் காய்க்கத் துவங்கிவிடும், 240 நாட்கள் வரை காய்க்கும். இதில் 25 அறுவடைகள் செய்யலாம்.

15. சேனைக்கிழங்கு, கோ 1

சரளை மண்ணுக்கு ஏற்றது. பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்யலாம். எக்டேருக்கு, 50 டன் மகசூல் வரை இதில் கிடைக்கும். ரகம், 240 நாட்கள் வயதுடையது என்பது குறிப்பிடதக்கது.

16. மஞ்சள் பி.எஸ்.ஆர் 3

மே முதல், ஜூன் மாதங்களில் நடவு செய்ய, நல்ல ரகமாகும். இது மஞ்சள் பயிரிடும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. இலைப்புள்ளி, இலை கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டதாகும். இது, 240 - 250 நாட்கள் வயதுடையது என்பது சிறப்பாகும்.

17. கொத்தமல்லி கோ 5

கரீப் மற்றும் ரபி பருவங்களில், பயிர் செய்ய, நல்ல தேர்வாகும். இலை மகசூல், 35 வது நாட்கள் முதல் அறுவடை செய்திடலாம். எக்டேருக்கு, 4.7 டன் மகசூல் வரை கிடைக்கும்.

இவற்றை அறிமுகம் செய்த, செயல் துணை வேந்தர் கிருஷ்ணமூர்த்தி,''தமிழ்நாடு வேளாண் பல்கலை, 100 ஆண்டுகளில், 865 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டிருக்கிறது. தற்போது, 17 புதிய ரகங்கள், வெவ்வேறு வானிலை மண்டலங்களுக்கு ஏற்றவாறு வெளியிடப்பட்டன. விவசாயிகள் இப்புதிய பயிர் ரகங்களை பயிரிட்டு நன்மை பெற வேண்டும்,'' என அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:

ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி எளிதில் அப்பளை செய்யவும்!

டிஜிட்டல் முறையில் பிச்சை கேட்கும், டிஜிட்டல் இந்திய குடிமகன்!

English Summary: 17 new crop varieties, call for farmers to benefit! Details inside Published on: 11 February 2022, 05:54 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.