துவரை தென்னிந்தியாவில் பயிரிடப்படும் ஒரு முக்கியமான பயறு வகைப்பயிராகும். தானியப் பயிர்களைவிட மூன்று மடங்கு அதிக புரதம் கொண்ட பயறு வகைப் பயிரான துவரையானது தமிழ்நாட்டில் 41,814 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 53,236 டன் உற்பத்தி செய்யப்படுகின்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயறுவகைத் துறையிலிருந்து Co6 என்ற துவரை இரகம் 1991 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த இரகத்தைவிட அதிக மகசூல், நோய் எதிர்ப்பு, பூச்சிகளின் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய உயர் விளைச்சல் துவரை இரகமான கோ 8 என்ற புதிய துவரை இரகம் 2017 ஆம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றத்தக்க வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே கோ 8 துவரை இரகத்தின் சிறப்பியல்புகள், ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாடு முறைகள் குறித்து கோவை TNAU-வின் பயறுவகைத் துறை, (பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தினை) சேர்ந்த இணை பேராசிரியர் முனைவர் ஆ.தங்கஹோமாவதி பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மகசூல் எவ்வளவு கிடைக்கும்?
இந்த துவரை இரகம் ஏ.பி.கே. 1 x எல்.ஆர்.ஜி 41 என்ற இரகங்களை ஒட்டு சேர்த்து தனிவழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 170 - 180 நாட்களில் மகசூல் கொடுக்ககூடிய இந்த துவரை இரகம் ஆடிப்பட்டத்திற்கு ஏற்ற இரகம்மாகும். இந்த இரகம் சராசரியாக மானாவாரியில் ஒரு எக்டருக்கு 1600 கிலோ மற்றும் இறவையில் 1800 கிலோ தானிய மகசூல் தரவல்லது. இந்த இரகம் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் பயிரிட ஏற்ற நல்ல உயர்விளைச்சல் இரகமாகும்.
சிறப்பியல்புகள்
- கோ 6 விட 16 சதவீதம் கூடுதல் மகசூல் மற்றும் வம்பன் 2 விட 80 சதவீதம் கூடுதல் மகசூல் தரவல்லது.
- நீண்ட வயதுடையது -170-180 நாட்கள்
- திரட்சியான விதைகள் (2 முதல் 11.4 கி வரை / 100 மணிகள்)
- அதிகளவு புரதச்சத்துமிக்கது - (23 சதவீதம்)
- மலட்டுத்தேமல் நோய் மற்றும் வேர் அழுகல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியுடையது
- பச்சைக்காய்ப்புழு மற்றும் புள்ளிகாய்ப்புழுக்களுக்கு மிதமான எதிர்ப்புத் தன்மையுடையது.
ஒருங்கிணைந்த பூச்சிக்கட்டுப்பாடு
- 50 சதம் பூ மொட்டுக்கள் இருக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 60 மி.லி குளோர் அன்ட் ரோனிலிப்ரோல் (5 எஸ்.சி) மருந்தை தெளிக்க வேண்டும்.
- பூக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 50 மி.லி ஃபுளுபென்டியமைட் (48 எஸ்.சி) மருந்தை தெளிக்க வேண்டும்.
- காய் பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 400 மி.லி டைமெத்தோயெட் (30 இசி) மருந்தை தெளிக்க வேண்டும்.
மலட்டுதேமல் நோய்:
- பாதிக்கப்பட்ட செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
- பினாசோகுயின் (10 இசி) மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 மி.லி என்ற அளவில் நோயில் அறிகுறிகள் தென்பட்டவுடன் தெளிக்க வேண்டும்.
வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்: ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பெண்டசிம் கலந்து பாதிக்கப்பட்ட வேர் பாகத்தில் ஊற்ற வேண்டும்.
அறுவடை:
80% காய்கள் முற்றியவுடன் பயிரை அறுவடை செய்யவும். அறுவடை செய்த துவரை செடிகளை ஓரிருநாட்களில் அடுக்கி வைத்து பின் காயவைத்து தட்டி எடுக்கவும்.
Read also: Rooftop Garden: எந்த வகையான மாடித்தோட்டம் காய்கறி உற்பத்திக்கு ஏற்றது?
சேமிப்பு:
அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சத ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் 1 கிலோ வேப்ப எண்ணெய் அல்லது ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து சேமிக்க வேண்டும்.
மகசூல்
- இறவையில் - 1800 கிலோ / ஹெக்டர்
- மானாவாரி -1600 கிலோ / ஹெக்டர்
இவ்வாறான தொழில் நுட்ப முறைகளைக் கையாண்டு கோ 8 இரகத்தை விவசாயப் பெருமக்கள் பயிரிடும் போது அதிக விளைச்சலையும், நிரந்தர வருமானத்தையும் பெற இயலும் என்பதில் எள்ளவும் ஐயமேயில்லை.
Read more:
நாடு முழுவதும் 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- எதற்காக தெரியுமா?
மானியத்தில் தீவனச்சோளம் கோ எப்.எஸ்-29 & வேலி மசால் மற்றும் தட்டைப்பயிறு விதைகள்- என்ன திட்டம்?
Share your comments