ஆடு, கோழி வளர்ப்புக்கு 50% மானியம் பெற இன்றே விண்ணப்பியுங்க!
தமிழக அரசு வேளாண்மையைப் பெருக்குவதற்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23-ஆம் நிதி ஆண்டில் சுமார் 3,204 கிராமங்களில் ஆடு கோழி உள்ளிட்ட பல்வேறு மானியத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, பயன்பெற விரும்பும் விவசாயிகள் www.tnagrisnet.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யுமாறு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
விவசாய மானியங்களைப் பெற விவசாயிகளுக்கான கிராம சபை கூட்டம் நாளை நடைபெறுகிறது!
வேளாண்மை- உழவர் நலத்துறையின் முக்கிய திட்டங்கள் தமிழக விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிதினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் நடத்தப்படும் கிராமச் சபைக் கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். இதில் விவசாயத்திற்குத் தேவையான மானியங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் பொதுநல மருத்துவ முகாம்: நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக வேளாண் துறை அமைச்சர்!
குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள என்எல்சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். முகாமில் பங்கேற்ற 16 நபர்களுக்கு காது கேட்கும் கருவிகள், 13 நபர்களுக்கு சக்கரநாற் காலிகள், 8 நபர்களுக்கு நடைப்பயிற்சிக்கான உப கரணங்கள், 16 நபர்களுக்கு ஊன்றுகோல்களும் வழங்கப்பட்டன. இம்முகாமில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1,167 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
சோலார் பம்ப்செட் அமைத்த தமிழக விவசாயி: பாராட்டிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிவருகின்றார். அந்த வகையில் நேற்று பேசிய அவர் சூரிய சக்தியில் உலகளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சூரிய சக்தியை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்தி வருகிறது எனக் கூறியதோடு, தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எழிலன் என்கிற விவசாயி, பிரதமர் குஷூம் யோஜனா திட்டத்தின் பலனை அடைந்துள்ளார் எனவும், அவரது விவசாயப் பண்ணையில் 10 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டை அமைத்துள்ளார் எனவும் கூறினார். இதன்மூலம் அவர் பண்ணையில் விவசாயத்திற்கு எனப் பெரிதாக எதுவும் செலவு செய்வது கிடையாது. விவசாய நிலத்தில் பாசனம் செய்ய அரசின் மின் விநியோகத்தை அவர் நம்பியிருக்கவில்லை எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.
கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி நவம்பரில் தொடக்கம்!
கரூரில் சர்வதேச முருங்கை கண்காட்சி இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி வரும் நவம்பர் 4-ஆம் நாள் தொடங்க உள்ளது. இக்கண்காட்சியில் பிரேசில், ஜப்பான், கொரியா, ஸ்ரீலங்கா, மலேசியா, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் முனைவோர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இளம் தொழில் முனைவோர்கள், முருங்கை மேம்படுத்தப்பட்ட பொருட்களின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர் இந்த கண்காட்சியில் பங்கு பெற உள்ளனர். முருங்கை மற்றும் முருங்கையால் மதிப்பு கூட்டப்பட்ட 27 வகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. முருங்கை உற்பத்தியை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தக்கூடிய முன்னெடுப்பாக இந்த நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மழை! 3 மாவட்ட விவசாயிகளுக்கு எச்சரிக்கை!!
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments